Wednesday, 4 May 2016

கீச்சுக்கள்!

மே 16 நிச்சயம் ஓட்டுப்போடுங்கள், அப்படியே அன்றைய தினம் ஒரு மரக்கன்றை நட்டு வையுங்கள், அடுத்த ஐந்து வருடங்களில் மரங்கள் பலன் தரும், இந்தப் பூமியை தேற்றும்! 🤔
*******************
அன்பை வெளிப்படுத்தும் சிறிய மெனக்கெடல் கூட இல்லாத எந்த நட்பும் உறவும் நீடிப்பதில்லை!

*****************************
பேருந்து ஓட்டை என்றாலும், பள்ளிக் கட்டிட இடிபாடு என்றாலும், மின்தூக்கியில் மரணம் என்றாலும், கட்டும்போதே இடிந்து விழுந்த வீடுகள் என்றாலும், சாலைப் பழுதில் நடக்கும் விபத்துக்கள் என்றாலும், நடக்கும் எல்லா விபத்துக்களுக்குப் பின்னாலும் யாரோ ஓர் அரசு ஊழியனின்/அதிகாரியின்/வியாபாரியின் மெத்தனமும், அலட்சியமும், ஆணவமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? மறுக்க முடியாதெனில் இந்த விபத்துக்கள் அனைத்தும் கொலைகளேயன்றி வேறென்ன?

**********************


சில நாட்களுக்கு முன்பு, பிறந்து சில மாதங்களேயான ஒரு பெண்குழந்தையை ஒருவன் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகப் படித்தேன், அவன் ஜாமீனில் வந்தபோது, அந்தக் குழந்தைப் பெற்றவன், அந்தப் பாதகம் செய்தவனின் கைகளை வெட்டியதாகவும் செய்தி, இன்று பெங்களூரில் ஆட்டோவில் ஏறிய பெண்ணிடம், ஆட்டோ டிரைவர் நீ ஒழுங்காய் உடை அணிந்து இருக்க வேண்டும், ஒரு வேசியைப் போல் உடை அணிவது தவறு என்று காலச்சாரக் காவலனாய் மாறிய அவலமும் செய்தியாக!
மேலை நாட்டில் இருந்து எல்லாவற்றையும் கற்கும் நாம், அவர்கள் தம் நாட்டுப் பெண்களை மதிக்கும் பாங்கை மட்டும் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை. ஆடை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன், இதைப் பற்றிப் பெண்களும், பெண்மை போற்றும் ஆண்களும் எழுதிப் பேசி சலித்துப் போய் இருப்பார்கள்.
சாலைகளில் குடித்து விட்டு ஆடைகளற்று இருக்கும் எந்த ஆண்மகனையும் எந்தப் பெண்ணும் வன்புணர்ச்சி செய்வதில்லை , லுங்கி, வேஷ்டி, பெர்மூடாஸ் என்று தொடைகள் தெரிய உடைகள் அணிந்து, மேல் சட்டையும் இல்லாமல் சாலையில் திரியும் எந்த ஆண்களிடமும் எந்தப் பெண்ணும் அவனின் உடைப் பற்றிய எந்தப் புகாரும் சொல்வதில்லை!
கருப்பை என்ற ஒன்றை ஆண்களுக்கும் வைத்துவிட்டால் ஆணின் மனப்பாங்குச் சிறிதேனும் மாறலாம். ஆண்களின் சுதந்திரத்தை, பெண்கள் பறிப்பதில்லை, ஏற்கனவே தறுதலையாய் திரிபவர்களைச் சட்டம் சரி செய்யட்டும் , இனியேனும் நம் வீட்டு ஆண்களையும் பெண்களையும் அவரவர் சுதந்திரத்தை மதிக்கும் நல்ல மனிதர்களாய் வளர்ப்போம்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!