Tuesday, 26 January 2016

அவன் அவள் அது






















அவனோ அவளோ
ஒருவருக்கொருவர் 
கைபேசியில்
அழைப்பைத் தவறவிடலாம்
ரயில் முனையத்தில்
கால்கடுக்க
காத்திருக்க வைக்கலாம்
வேறொரு அழகை
பார்த்து ரசிக்கலாம்
பிறிதொரு அண்மையை
லயித்துப் போற்றலாம்
காத்திருப்பை
இரக்கமின்றி அலட்சியப்படுத்தலாம்
முக்கிய நாட்களை
சட்டென்று மறந்தும் போகலாம்
எது முடியாமல் போனாலும்
முறிந்துப் போகாத
முழுமையானதொரு 
அன்பு வசபட்ட இதயம்
காத்திருக்கும்,
காயப்படும் 
பொறுத்துக் கொள்ளும்
சுயம் என்ற ஒன்று
கரைந்துப் போகாத வரையில்

Wednesday, 20 January 2016

வாரிசு

“சார் சார்” என்று அழுதுக்கொண்டே வந்து நின்றான் ஏழாம் வகுப்பு படிக்கும் கண்ணன், தன் வகுப்பாசிரியர் சரவணனிடம்!

 “
என்னடா, ஏன் அழுறே?”

 “
சார் சார் எங்கப்பா ....”

 “
என்னடா ஆச்சு உங்கப்பாவுக்கு ....”

 “
சார் சார் எங்கப்பாவை வர்ற சனிக்கிழமை நடக்கப் போற பேரணியிலே தீ வெச்சுக் கொளுத்த போறாங்களாம் சார் ....”என்று அழுதான் கண்ணன்

 “
யாருடா என்ன சொல்றே?” என்ற சரவணனிடம், எதிர்க்கட்சியில் அதிதீவிர விசுவாசியாய் இருக்கும் தன் தகப்பனை அக்கட்சியின் உள்ளூர் கவுன்சிலர் மாரப்பன் தன் சொந்தப்  பகைக்காகத் தீர்க்கப் போவதாகவும், அதையே தீக்குளிப்பாய் மாற்றிக் கட்சியின் லாபத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தலைவர் என்றும் இருவரும் பேசிக்கொண்டதை அப்பாவை அழைக்கக் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற போது எதேச்சையாய் கேட்க நேர்ந்ததைச் சொல்லிவிட்டு

 “
சார் சார் எங்கப்பாகிட்டே சொன்னா, என் தலைவனைப் பத்தியா சொல்றே அப்படின்னு என்னையே திட்டிட்டுப் போய்ட்டார் சார் ...சார் தயவு செஞ்சு எங்கப்பாவை காப்பாத்துங்க சார்”, என்ற கண்ணனிடம், அதற்கு ஒரு முடிவு கட்டுவதாய்ச் சொல்லிவிட்டு, பள்ளியில் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான் சரவணன்

 
கடந்த சில வருடங்களாக வந்த செய்திகளைத் தான் திரட்டிய தகவல்களை, ஆதாரங்களை எடுத்துக் கொண்டு ஆளுங்கட்சியின் ஒரு முக்கியப் பிரமுகரிடம், ஏற்கனவே பெற்ற அனுமதியின் பேரில் நேரில் சென்றான்

 “
என்னப்பா சரவணா என்ன விஷயம், நீ நம்ம சாதிக்காரப்  பயல இருக்கறதுனாலத்தான் தலைவர் பார்க்க அனுமதிக் கொடுத்திருக்கார், ஏன்  எங்ககிட்டேலாம் சொல்ல மாட்டியா”, என்று எரிச்சலை மறைத்துக்கொண்டு வரவேற்ற பி வுக்குப் புன்னகையைப் பதிலாக்கி , உள்ளே சென்றான் சரவணன்

 “
வாப்பா சரவணா , என்ன சொல்லு” , அமர்த்தலாகக் கேட்ட பிரமுகர் வேலப்பனிடம்....

 “
தலைவரே, இதைப் படிச்சுப் பாருங்கஎன்று ஒரு சில நாளிதழ்களையும் தன் குறிபேட்டையும் தந்தான்

“எங்கே கொடு”, என்று படிக்க ஆரம்பித்தார் வேலப்பன்........முழுதாய் பத்து நிமிடம் கரைந்தப்பின்
 “
அடப்பாவி , எதிர்கட்சியா இருக்கும்போதே  இவ்வளவு தில்லுமுல்லா?!” என்று வேலப்பன் கோபப்பட ....

 “
தலைவரே, அது மட்டுமில்ல அவரோட ஆளையே அவங்க வர சனிக்கிழமை, தீர்த்துக் கட்ட போறாத பேச்சு ...”

இரு இப்பவே அந்தப் பயலை பயங்காட்டி வைப்போம்” என்ற வேலப்பன்,
 
போனை எடுத்து,

"
என்னையா உங்க கட்சி பண்ற கட்டப்பஞ்சாயத்து எல்லாம் இப்போ என் டேபில் மேல இருக்கு, இதை அப்படியே தலைவரோட பார்வைக்குக் கொண்டு போன என்ன ஆகும் தெரியுமா ?"

 
அந்தப் பக்கம் எதிர்கட்சி "யோவ் வேலப்பா, உன் தலைவரே சும்மா இருக்கும்போது நீ ஏன் துள்ளுறே? ஆலங்கோட்டையிலே பாலம் இடிஞ்சு வுழுந்துதே, அதுக்குச் சிமெண்ட் சப்ளை உம்ம மருமவந்தானே?, என்னையா, சத்தத்தையே காணோம்? ஸ்கூல் சுவர் இடிஞ்சு விழுந்து பத்துப் புள்ளைங்க போச்சுதே, அது உன் மவனோட காண்ட்ராக்ட் தானே ...எங்களுக்கும் டேபிள் இருக்குயா....."

இந்தப்பக்கம் ஏசி யிலும் வியர்த்தது வேலப்பனுக்கு.....கைபேசியை மியுட் செய்துவிட்டு "இந்தாச் சரவணா கொஞ்சம் வெளியில் இரு, இந்தப் பயலை கொஞ்சம் மிரட்ட வேண்டியிருக்கு, உனக்கு எதுக்கு இதெல்லாம் .... ?"

 
சரவணன் வெளியில் சென்றான்

கைபேசியைப் பவ்வியமாய் எடுத்த வேலப்பன்,
"ஏன்யா செய்யுறது சாட்சி வெச்சுகிட்டா செய்வே? அதுவும் உன் கட்சி ஆளையே போட போறியாமே? என்னையா இப்போ நீ ஊமையாயிட்டியா?" என்று கொஞ்சம் நிமிர்ந்தார் வேலப்பன்

"
யோவ், நான் எதுக்கு ஊமையாகுறேன், அதுக்குள்ள உனக்கெப்படி தெரிஞ்சதுன்னு யோசிக்கிறேன் .... "

"
நம்ம சாதிக்கார பையன் நம்ம ஸ்கூலில் தான் வேலை பாக்குறான், என்ன, நான் கேள்விபட்டது உண்மையா ?"

"
அட ஆமாம்யா, நம்ம கவுன்சிலர் நாச்சிமுத்துக்கும் அவனுக்கும் பகை, கழுத சும்மா ஏன் சாவனும், அவன் போட்டுத்தள்ளியே ஆவனும்னு துடிக்குறான், சரி அப்படியே நம்ம கட்சியை வளர்க்கலாம்ன்னு முடிவு பண்ணேன் ....சரி நீ என்ன பண்றே, உன்னோட ஆளு சரவணனை அங்கேயே புடிச்சு வை ...
நான் யாரை தீக்குளிக்க வைக்கப் போறேனோ  அவனை அனுப்பியே அந்தச் சரவணனை முடிச்சுடுறேன் ...." என்று அந்தப் பக்கம் எதிர்கட்சி சொல்ல

"
யோவ் என்னையா சொல்றே? நான் ஆளுங்கட்சியில் இருக்கேன், அதுவும் என் சாதிக்கார பயலையெ போடுவேன்னு சொல்றே .... ?"

"
யோவ் வேலப்பா, உன் டேபில இருக்கிறது எல்லாம் பிசாத்து, நம்ம டேபில இருக்கிறது வெயிட்டு, அது என்னையா உனக்குச் சாதிப்பாசம்? அதெல்லாம் நீயும் நானும் இந்தப் பயலுகளை ஓட்டவைக்கறதுக்கு நமக்காக உயிர விடுறதுக்கும்  சொல்றது, நமக்கு ஒன்னுனா அவனுகளைப் போட்டுத்தள்ளி போயிட்டே இருக்கணும் .... "

கொஞ்சம் நேரம் யோசித்த வேலப்பன், "உன் ஆளை வெச்சு என் ஆளை எப்படியா முடிக்கப் போறே ?"

"
வேலப்பா, இந்தப் பய என்மேல ஊசுரையே வெச்சிருக்கான் , நானே சாவுடான்னு சொன்னாலும் செத்துடுவான், இருந்தாலும் எதிலேயும் நமக்கு ஒரு ஆதாயம் வேணுமில்ல? அந்தச் சரவணன் என்னைக் கொல்ல முயற்சி செய்யுறான்னு சொல்லி, இவனை அனுப்பி அவனை அடிச்சு ட்ராக்கில் தூக்கி போட்டுட சொல்றேன், அப்புறம் அவனை நான் பேரணியில் முடிச்சுக்குறேன்....நீ ஒரு பொண்ணை ரெடி பண்ணி அதே ட்ராக்கில் போட்டுடு, இந்தப் பயலும் அந்தப் பொண்ணும் காதலோ கள்ளக் காதலோ ஏதோ ஒரு எழவில் செத்துப் போய்ட்டாங்கன்னு உன் ஆளுகளை வெச்சுக் கதையை முடி , முடிச்சுவைய்யு! பொண்ணுக்கு எங்கே போறதுன்னு கேக்காதே, உன் மவன்கிட்டே சொல்லு"

 "
யோவ் இருய்யா நீ பாட்டுக்கு பேசிட்டே போறே? என் ஆளு உன்னைபத்தி ஆதாரங்களை வெச்சிருக்கான் அவனைப் போடப்போறே சரி, உன் ஆளை விட்டா உனக்கு நம்பிக்கையான ஆளு கிடைப்பானா, கொஞ்சம் யோசி", என்ற வேலப்பனை இடைமறித்துச் சொன்னான் எதிர்கட்சி பூமிநாதன்

"
யோவ் இவன் போனா என்ன? இவன் புள்ளை இருக்கான், என்னமோ படிக்கிறான், அப்பன் போனா புள்ளைய புடிச்சுபோட்டா போதும், வெட்டுடான்னு நாம சொன்னா வெட்ட வேண்டிய இந்தப் பயலுகளுக்குப் படிப்பெதுக்கு ...அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ ஜோலியை முடி" என்று சொன்ன பூமிநாதன்

"
யோவ் பி. யே மாடசாமியை கூப்பிடு", என்ற சொல்ல

"
ஐயா!" என்று பவ்வியமாக வந்து நின்றான் கந்தனின் தகப்பன் மாடசாமி, அங்கே ஒரு நாடகம் கச்சிதமாய் அரங்கேறத் தொடங்கியது ........

வீட்டில் பாடப்  புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான் கண்ணன், விதியும் அரசியல் சதியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது! 

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!