Sunday, 23 November 2014

யார் பணம்?

 
தெரிந்தவர் ஒருவர் தன் மகளின் மருத்துவக் கனவை நிறைவேற்ற, உள்ளுரில் இடம் கிடைக்காமல், அல்லது கிடைத்த இடத்தில் கேட்ட அதிகப்படியான லஞ்சத்தைச் செலுத்த முடியாமல், ஏதோ ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில், தன்னிடம் இருந்த நகைகளை விற்று, பணம் புரட்டி, முதல் வருட மருத்துவக் கல்விக்குக் கட்டணம் செலுத்தி அனுப்பி வைத்தார், இடையில் வங்கிக் கடனுக்கும் கேட்டு வைத்தார், எப்படியும் இரண்டாம் வருடத்திற்குள் வங்கிக் கல்விக் கடன் கொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது, மகளின் கனவு முறிந்தது, ஒரு வருடப்  படிப்புடன் அதற்கு முழுக்குப் போட்டு, தமிழ்நாட்டில் ஓர் ஊரில் இப்போது, ஏதோ ஒரு பட்டப்படிப்பு தொடர்கிறார், அம்மாவிற்குக் கடன் சுமை!

 அலுவலகத்தில், அதன் மூலமாகவும், குழுவின் மூலமாகவும் இயன்ற உதவிகளைச் செய்து வந்த வேளையில், எப்படியோ என் முகவரிப் பெற்று, தினம் தோறும் கல்வித் தொடர உதவிக் கேட்டு, அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் தொழுநோயாளிகளின் குழந்தைகளிடம் இருந்து பல கடிதங்கள்!
 அரசாங்க மருத்துவமனைகளில், உயிர் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் தன் குழந்தைகளுக்காகவும், உறவுகளுக்காகவும், பண உதவிக் கேட்டு வரும் விளம்பரங்கள், தொலைப் பேசி அழைப்புகள். அடிப்படை சுகாதார வசதி இன்றி இயங்கும் அரசாங்கக் கல்விக் கூடங்கள்.

ஒரு மழைப் பொய்த்தாலே, வருமானம் பொய்த்து, தற்கொலைச் செய்து கொள்ளும் விளிம்பு நிலை விவசாயிகள். இந்தியாவின் வருமான விலக்கு அத்தனையும் பெற்று விட்டு, ஓர் அறிவிப்பில் மூடு விழா செய்து தங்கள் நாட்டிற்கு மூட்டைக் கட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள்.

 போபால் விஷ வாயு சாவுகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை, நிவராணம் முழுதாகச் சென்றடையவில்லை, வருமான வரியில் நீங்கள் ஓர்  ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்தாலோ, உங்கள் ஏதோ ஒரு சேவைக்கு ஒரு நூறு ரூபாய் கட்டணம் கட்டா விட்டாலோ, உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நேர்மையான சட்டம் நிறைந்த இந்த நாட்டில் தான் மேற் கூறிய அத்தனையும் நடக்கிறது.

 "அம்மா பசிக்குது, ஐயா தர்மம் பண்ணுங்க" என்ற குரல்களைப் புறம் தள்ளி, ஏதோ ஒரு சாமியார்க்கு அள்ளித் தந்து அவனிடமே பிச்சைக் கேட்கும் மனிதர்கள் தாம் நாம்.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்கு எதுவுமே செய்யாத அரசாங்கம், இன்று ஏழு வெளிநாட்டு வங்கிகள், கடன் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்ட, 60,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்திருக்கும் அதானி குழுமத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடன் கொடுக்கிறது, நாங்கள் இன்னும் கடன் கொடுக்கவில்லை, வெறும் MOU (மெமராண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங்) என அதன் வங்கித் தலைவர் விளக்கம் சொல்கிறார், இத்தனை கோடிக் கடன் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு, முதலில் இந்தக் கடன் உடன்படிக்கைத் தேவைதானா? அரசியல்வாதிகள் தேர்தலில் சுற்றும் பூ போதாதென்று இப்போது பொதுவுடைமை வங்கிகளும் பூ மாலையையே மக்களின் காதுகளில் சுற்றுகிறது. ஏற்கனவே மல்லையா குழுமத்திற்குக் கடன் மேல் கடன் கொடுத்து மொத்தமாய் வாங்கிய நாமம் போதாதா?

 மக்களின் வரிப் பணத்தை வாரி இறைத்து, வரவே வராத இதுபோன்ற கொள்ளைக் கடன்களுக்கு இனி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் வருமானத்தையும், அவர்களின் குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தால் என்ன?  

ஐயா சாமி தர்மம் பண்ணுங்க, இல்லாதப்பட்ட கோடிஸ்வர முதலாளிகளுக்கு மட்டும்!

Wednesday, 19 November 2014

வெறும் கதை!

 
ஓர் ஊரில் நிறைய எலிகளின் தொல்லை, எதையும் அந்த எலிகள் விட்டு வைக்கவில்லையாம், ஒன்று மாற்றி ஒன்று என்று உண்டு கொழுத்து, பின் அவைகளுக்கிடையே யார் தலைவர் என்ற போட்டி வந்து, அவைகள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்துக் கொண்டதாம்.
 பிரிந்து கொண்ட நாட்டாமைகள் அவர்களுக்குள் தேர்தல் வைத்து, மாற்றி மாற்றிக் கொட்டமடித்து ஊரையே காலி செய்தனவாம். இந்த எலிகளின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாத மக்கள், ஒரு பூனையை வளர்த்தனராம். அத்தனை எலிகளின் கொட்டத்தை அடக்கப் பூனைக்கு ஒரு ராஜாங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து, அதை நன்றாகக் கவனித்துக் கொண்டனராம்.

 பூனைக்கும் தனக்குக் கிடைத்த மரியாதையில் மிகவும் உற்சாகமாகிவிட்டதாம். தினம் ஓர் எலியைப் பிடித்து, பூனை உண்டு கொழித்து வந்ததாம், எலிகள் போதாமல் பூனை, ஊர் மக்களின் சமையலறையிலும் புகுந்து உண்டு கொழுத்ததாம், பூனையும் தனக்குக் கூட்டாளிகளை ஏற்படுத்திக் கொண்டதாம், எலிகளுக்காகப் பூனை வளர்த்த மக்கள், பூனையின் வளர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்தனராம்.

 எலிகள் கூடிக் கூடி ஆலோசித்து, பூனைக்கு எதிராகக் கண்டனத்   தீர்மானங்கள் எழுப்பினவாம், மாற்றாக, பூனையுடன் கூட்டுத் திருட்டுத் தீர்மானம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவனாம். ஆனால் அந்தக் கண்டனத் தீர்மானத்தை யாருமே பூனையிடம் கொடுக்க முடியவில்லையாம், கூட்டுத் திருட்டுத் தீர்மானத்தையும் பூனையின் காதுகளுக்குக் கொண்டு செல்ல முடியவில்லையாம், பூனையின் ஒளிரும் விழியில் எலிகளுக்குக் கிலி பிடித்துக் கொண்டதாம்.

 பிரிந்து இருந்த எலிகளின் குழுக்களுக்குள் யார் பூனையிடம் கண்டனத்தைக் கொண்டு செல்வது, ஒன்றுமே செய்வதறியாமல் எலிகள் அகப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் கொள்ளையைத் தொடர, பூனையும் திருட்டையும், அவ்வப்போது எலிகளின் வேட்டையையும் தொடர்ந்ததாம். மக்களும் பூனைக்கும் எலிகளுக்கும் மாறி மாறிப் பயந்து, ஒரு கட்டத்தில் அவர்களும் அந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விட்டனராம்.....

 சரி இந்தித் திணிப்பு வந்தபோது விழுந்துப் புரண்டுப் போராடியத் திராவிடக் கட்சிகள் எல்லாம் எங்கே, இந்த ஊழல் வழக்கெல்லாம் என்ன ஆகும்? அப்புறம் பை தி வே, அடுத்தத் தேர்தல் எப்போன்னு சொல்லமுடியுமா மகாஜனங்களே!

 பி.கு: மேல நீங்க படிச்ச என் பாட்டி சொன்னக் கதைக்கும் நான் கேட்டக்  கேள்விகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை யுவர் ஆனர்

Friday, 7 November 2014

கான்ஸ்டபிள் கந்தசாமி!

சிக்னல் போட்டுப் பார்த்தாச்சு,
 நடுவில் சிமெண்ட் போட்டு
 தடுப்பும் கட்டியாச்சு,
 சாலைக்கு நடுவே
 வெள்ளைக் கலரிலே
 அளந்து அளந்துக் கோடும் போட்டாச்சு
 பறக்குறதைப் பாய்ஞ்சுப் புடிச்சு
 தண்டமும் போட்டாச்சு,
 குறைஞ்சது "எ.பி.சி.டி" தெரிஞ்சிருக்கும்ங்ற
 நம்பிக்கையில "யு" போட்டு வெச்சாச்சு,
 இருந்தும் சிக்னலைப் பார்க்காம
கழைக்கூத்தாடிக் கணக்கா, தடுப்பில் பாய்ஞ்சு
கோட்டுக்கு நடுவே ஒட்டி
"யு" போட்டுப் போற இடத்தில, புதுசா
 ஒரு "வி" போட்டு "வே" (வழி) கண்டுபிடிச்சு
 பொண்டாட்டிக் கணக்கா, போனை
 எப்பவும் காதுலேயே வெச்சுக்கிட்டு
 எப்படிப் பார்த்தாலும் இருக்குற
 முகராசி மாறப்போறதில்லைனாலும்,
 கண்ணாடியிலே தன் முகத்தையே ரசிச்சுக்கிட்டு
 தான் சாவறதுக்கும் அடுத்தவன சாவடிக்கறதுக்கும்
 பாய்ஞ்சுப் போற பக்கிகளையும்,
 ஹெல்மெட் இல்லாமப் பறந்துபோற
 மண்டையர்களையும் - இந்த
 டிராபிக் கான்ஸ்டபிள் கந்தசாமி
 என்னதான் செய்வாரு சொல்லுங்க?!
 

Monday, 3 November 2014

மனம்!

 மறைக்க முடியாத கண்ணாடி
மறைத்துவைக்கும் கிணறு
சிலவேளைகளில்
கண்டறிய முடியாத
புதையல் - இந்த
பொல்லாத மனம்! 

உனதான உன்னுடையது

 எனது என்னுடையது என்று
எதை எதையோ நீ போற்றிப்பேச
அருகில் இருக்கும்
உனதான உன்னுடையது
கொஞ்சம் விலகியே நிற்கிறது
மனம்!

நடிகர்கள் தலைவர்களாகும் தருணம் அமைவது எப்போது?

























விளம்பரத்தில் கோக் குடிக்கச் சொன்னதும், திரைப்படத்தில் கோக்கைச்  சாடியதும் நடிப்பு என்று விஜய்க்கு நன்றாகத் தெரியும். திரைப்படத்தில் ஒரு காதலுக்காகவோ, மனைவிக்காகவோ உருகுவதும், வாழ்வதும் நடிப்பு என்றும், நிஜத்தில் ஒன்று போனால் இன்னொன்று என்று தன் சொந்த வாழ்க்கையை வெளிப்படையாக வாழும் தெளிவும் கமலுக்கு உண்டு. படத்தில் நூறு பேர் வந்தாலும், ஒற்றைப் பாட்சாவின் பெயரில் நடு நடுங்க வைத்து, நிஜத்தில் தன் திரைப்படம் வரும் நேரம் தன் அரசியல் கொள்கைகளை மாறி மாறி அமைத்துக்கொள்ளும் தெளிவும் ரஜினிக்குப் புரியும். 
நடிகர்களோ, நடிகைகளோ அவர்கள் தொழிலில் கவனமாக இருக்கிறார்கள், ரசிகர்கள் நடிப்பை ரசித்து விமர்சித்துப் போகும் வரை எந்தக் குழப்பமும் இல்லை.
 நடிகர்கள் நடிகைகள் தங்கள் ரசிகர்களைக் குறி வைத்து, இந்தக் காபியைக்  குடி, கோக்கைக்  குடி என்று சொன்னாலும், சிகரெட் பக்கெட்டில், புகைப்  புற்றுநோயை வரவழைக்கும் என்று அறிவிப்புச் செய்து வெளியிடுவது போல, நாங்கள் பணத்திற்காகத் தான் இந்த விளம்பரத்தில் நடிக்கிறோம், மற்றப்படிப்  பொருளின் தேவை உங்களின் பொருளாதாரத்தைச் சார்ந்தது, அதன் தரத்திற்கோ, பின்விளைவுக்கோ நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லி விடலாம்.

 படித்தவனோ படிக்காதவனோ நடிப்பினால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய ரசிகன் வழி மாறிச் சென்றுவிடக்கூடாது என்று நினைக்கும் நடிகர்கள் மட்டுமே சமூகத்துக்குப் பணியாற்றுபவர்கள், மற்ற எல்லாரும் பிழைப்பைப்  பார்ப்பவர்கள்.
நடிப்போ, வாழ்க்கையோ தன் கொள்கையில் தனக்கே சந்தேகம் வரும்படியே பலர் நடந்துகொள்கிறார்கள்.  
விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்து அமைச்சர்  கனவு கண்டால், தன் ரசிகர்கள் கோ குடிக்க வேண்டுமா அல்லது கோக்கை எதிர்க்க வேண்டுமா என்று தெளிவுப்படுத்த வேண்டும்.....
 வருடத்திற்கு ஒரு படம் செய்து, திரைக்கு வரும் வேளையில் வெளிச்சத்திற்கு வரும் ரஜினி, பாலபிஷேகம் என்று தங்கள் ரசிகர்கள் செய்யும் அலப்பரையை நிறுத்த சொல்லி, நல்ல காரியங்கள் செய்து தங்கள் அன்பை வெளிக்காட்டச்  சொல்ல வேண்டும், கமல் தன் ரசிகர்களை வழிப்படுத்தியது போல, அல்லது நடிப்பு என் தொழில், மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று விளம்பரங்களை ஒதுக்கிய அஜித் போல் நடிகர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.

 சமூகப் பணிகளில், ராகவா லாரன்ஸ், சூர்யா போன்ற நடிகர்களும், நடிகைகளும் ஈடுபட்டிருந்தாலும், பொதுவாகத் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் நிஜத்திற்கும் நடிப்பிற்கும் உள்ள இடைவெளியைக் aகுறைத்துக்கொள்ள வேண்டும், அல்லது அரசியலுக்கு வரக் கூடிய கனவையாவது மாற்றிக் கொள்ள வேண்டும். சிங்களவன் பணம் என்றாலும், பாகிஸ்தான் பணம் என்றாலும், எங்களுக்குத் தேவைப் பணம், உங்களுக்குத் தேவைப் படம் என்று வெளிப்படையாக அறிவிக்கும் தைரியமேனும் வேண்டும். ஏற்கனவே மந்தைகளாய் மாறியுள்ள தமிழக ரசிகர்களின் கூட்டம் இந்த உண்மையைத் தானாகவேனும் புரிந்து கொள்ள வேண்டும்.

 எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் ஏமாற்றி விட்டு, மக்களின் போராட்டத்திற்கு ஒன்றுபடாமல், தலைவர்களின் கைதிற்கு மட்டும் உண்ணாவிரத நாடகம் நடத்தும் சந்தர்ப்பவாதம், சம்பந்தமேயில்லாமல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைப் பயன்படுத்திச் செய்யும் அரசியல், தன்னுடைய பட வெளியிட்டிற்காக யாரெல்லாம் முதல்வர்களாய் இருக்கிறார்களோ, எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அதற்கேற்றப்படி மாற்றிக் கொள்ளும் சாதுர்யம், தன் படத்தைத் திருட்டு வீ சி டி யில் பார்க்காமல், உழைக்கும் காசில் கொஞ்சம் அரசாங்கத்தின் டாஸ்மாக்கிர்க்கும், மீதத்தைத் தன் தலைவனின்(?!) படத்தை டிக்கெட் வாங்கித் திரையரங்கில் பார்க்கும் ரசிகனுக்குச் செய்ய வேண்டிய மரியாதையை, அரசியல் தலைவர்களுக்குப் பாராட்டு விழா எடுத்து, கூழைக் கும்பிடு போட்டு செய்யும்  வேஷம் என, இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளாத நடிகர்கள், அரசியலுக்கு வந்து மக்களுக்கெனச் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை ரசிக மடையர்களே!

நடிப்பு ஒரு கலை, அது ஒரு தொழில், அதையும் ஒரு தர்மமாகச் செய்தனர் சுதந்திரப் போராட்டக்  காலத்தில், இன்று அது வெறும் தொழில், எங்கோ சில இயக்குனர்கள், வெளியில் வராத சமூக அவலங்களைக் காட்சிப்  படுத்தி நீதிக்காக ஆவணப்படுத்துதல் மட்டுமே எஞ்சி நிற்கும் சமூகத் தர்மம். பொழுதுபோக்கு அம்சம் என ரசிகனை மகிழ்விப்பது, அல்லது நல்ல விதமாய்ச் சிந்தனையைத் தூண்டுவது என்பது மீதமுள்ள தொழில் தர்மம்.

 எந்தத் துறையாய் இருந்தாலும், பெண்களின் நிலை இங்கேயும் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை, நடிகர்களின் நடிப்பை நம்பி ஏமாறும் ரசிகன், தலைவன் என்று போற்றும் ரசிகன், பெரும்பாலும் நடிகையின் நடிப்பை விடத் தோற்றத்தைக் கண்டு ரசிப்பதும் காமுறுவதும் மட்டுமே இங்கே எதார்த்தம், அப்படித்தான், அப்படி ஓர் இடத்தை மட்டும்தான் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் நடிகைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றன.

தமிழர்களைப் போல எளிதில் காட்சி மாயையில் ஏமாறும் கூட்டம் இருக்கும்வரை, எதுவும் திரைப்படமாகும், விஷம் கூட விளம்பரமாகும், நாளை இவர்கள் தலைவர்கள் ஆவர்கள், நம்முடைய பிழைப்பு நாய்ப் பிழைப்பாகும்

ரசிகர்கள் ரசிகர்களாகவே இருக்கும்வரை நடிகர்கள் நடிகர்களாகவே இருப்பார்கள்! ரசிகர்கள் வெறியர்கள் ஆகும்போது நடிகர்கள் தலைவர்கள் ஆகிறார்கள்!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/article6561004.ece?widget-art=four-rel
நன்றி தி ஹிந்து!



Saturday, 1 November 2014

தாய்மையின் பிம்பங்கள்!

 நெடுஞ்சாலையின்
காத்திருப்பின்
சில நொடிகளில்
கடக்கும் வாகனங்களில்
குழந்தையைக் காட்டி
வறுமையின் யாசிப்பில்,
ஓர் இளவயது பெண்!

சற்றேறக்குறைய
மறுபுறம்
நடைபாதையின்
துப்புரவுப் பணியில்,
கூன்விழுந்த பேரிளம்பெண்!

முதியவளிடம் ஒளிர்கிறது
தாய்மையின் பிம்பங்கள்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!