Sunday 23 November 2014

யார் பணம்?

 
தெரிந்தவர் ஒருவர் தன் மகளின் மருத்துவக் கனவை நிறைவேற்ற, உள்ளுரில் இடம் கிடைக்காமல், அல்லது கிடைத்த இடத்தில் கேட்ட அதிகப்படியான லஞ்சத்தைச் செலுத்த முடியாமல், ஏதோ ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில், தன்னிடம் இருந்த நகைகளை விற்று, பணம் புரட்டி, முதல் வருட மருத்துவக் கல்விக்குக் கட்டணம் செலுத்தி அனுப்பி வைத்தார், இடையில் வங்கிக் கடனுக்கும் கேட்டு வைத்தார், எப்படியும் இரண்டாம் வருடத்திற்குள் வங்கிக் கல்விக் கடன் கொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது, மகளின் கனவு முறிந்தது, ஒரு வருடப்  படிப்புடன் அதற்கு முழுக்குப் போட்டு, தமிழ்நாட்டில் ஓர் ஊரில் இப்போது, ஏதோ ஒரு பட்டப்படிப்பு தொடர்கிறார், அம்மாவிற்குக் கடன் சுமை!

 அலுவலகத்தில், அதன் மூலமாகவும், குழுவின் மூலமாகவும் இயன்ற உதவிகளைச் செய்து வந்த வேளையில், எப்படியோ என் முகவரிப் பெற்று, தினம் தோறும் கல்வித் தொடர உதவிக் கேட்டு, அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் தொழுநோயாளிகளின் குழந்தைகளிடம் இருந்து பல கடிதங்கள்!
 அரசாங்க மருத்துவமனைகளில், உயிர் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் தன் குழந்தைகளுக்காகவும், உறவுகளுக்காகவும், பண உதவிக் கேட்டு வரும் விளம்பரங்கள், தொலைப் பேசி அழைப்புகள். அடிப்படை சுகாதார வசதி இன்றி இயங்கும் அரசாங்கக் கல்விக் கூடங்கள்.

ஒரு மழைப் பொய்த்தாலே, வருமானம் பொய்த்து, தற்கொலைச் செய்து கொள்ளும் விளிம்பு நிலை விவசாயிகள். இந்தியாவின் வருமான விலக்கு அத்தனையும் பெற்று விட்டு, ஓர் அறிவிப்பில் மூடு விழா செய்து தங்கள் நாட்டிற்கு மூட்டைக் கட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள்.

 போபால் விஷ வாயு சாவுகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை, நிவராணம் முழுதாகச் சென்றடையவில்லை, வருமான வரியில் நீங்கள் ஓர்  ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்தாலோ, உங்கள் ஏதோ ஒரு சேவைக்கு ஒரு நூறு ரூபாய் கட்டணம் கட்டா விட்டாலோ, உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நேர்மையான சட்டம் நிறைந்த இந்த நாட்டில் தான் மேற் கூறிய அத்தனையும் நடக்கிறது.

 "அம்மா பசிக்குது, ஐயா தர்மம் பண்ணுங்க" என்ற குரல்களைப் புறம் தள்ளி, ஏதோ ஒரு சாமியார்க்கு அள்ளித் தந்து அவனிடமே பிச்சைக் கேட்கும் மனிதர்கள் தாம் நாம்.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்கு எதுவுமே செய்யாத அரசாங்கம், இன்று ஏழு வெளிநாட்டு வங்கிகள், கடன் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்ட, 60,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்திருக்கும் அதானி குழுமத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடன் கொடுக்கிறது, நாங்கள் இன்னும் கடன் கொடுக்கவில்லை, வெறும் MOU (மெமராண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங்) என அதன் வங்கித் தலைவர் விளக்கம் சொல்கிறார், இத்தனை கோடிக் கடன் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு, முதலில் இந்தக் கடன் உடன்படிக்கைத் தேவைதானா? அரசியல்வாதிகள் தேர்தலில் சுற்றும் பூ போதாதென்று இப்போது பொதுவுடைமை வங்கிகளும் பூ மாலையையே மக்களின் காதுகளில் சுற்றுகிறது. ஏற்கனவே மல்லையா குழுமத்திற்குக் கடன் மேல் கடன் கொடுத்து மொத்தமாய் வாங்கிய நாமம் போதாதா?

 மக்களின் வரிப் பணத்தை வாரி இறைத்து, வரவே வராத இதுபோன்ற கொள்ளைக் கடன்களுக்கு இனி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் வருமானத்தையும், அவர்களின் குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தால் என்ன?  

ஐயா சாமி தர்மம் பண்ணுங்க, இல்லாதப்பட்ட கோடிஸ்வர முதலாளிகளுக்கு மட்டும்!

1 comment:

  1. என்ன செய்வது....இங்கிருந்து ஆஸ்திரேலியா போய் எங்க ஊருக்கு டாய்லெட் கட்டித்தாங்கன்னு சொல்றோம்....

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!