Wednesday, 19 November 2014

வெறும் கதை!

 
ஓர் ஊரில் நிறைய எலிகளின் தொல்லை, எதையும் அந்த எலிகள் விட்டு வைக்கவில்லையாம், ஒன்று மாற்றி ஒன்று என்று உண்டு கொழுத்து, பின் அவைகளுக்கிடையே யார் தலைவர் என்ற போட்டி வந்து, அவைகள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்துக் கொண்டதாம்.
 பிரிந்து கொண்ட நாட்டாமைகள் அவர்களுக்குள் தேர்தல் வைத்து, மாற்றி மாற்றிக் கொட்டமடித்து ஊரையே காலி செய்தனவாம். இந்த எலிகளின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாத மக்கள், ஒரு பூனையை வளர்த்தனராம். அத்தனை எலிகளின் கொட்டத்தை அடக்கப் பூனைக்கு ஒரு ராஜாங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து, அதை நன்றாகக் கவனித்துக் கொண்டனராம்.

 பூனைக்கும் தனக்குக் கிடைத்த மரியாதையில் மிகவும் உற்சாகமாகிவிட்டதாம். தினம் ஓர் எலியைப் பிடித்து, பூனை உண்டு கொழித்து வந்ததாம், எலிகள் போதாமல் பூனை, ஊர் மக்களின் சமையலறையிலும் புகுந்து உண்டு கொழுத்ததாம், பூனையும் தனக்குக் கூட்டாளிகளை ஏற்படுத்திக் கொண்டதாம், எலிகளுக்காகப் பூனை வளர்த்த மக்கள், பூனையின் வளர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்தனராம்.

 எலிகள் கூடிக் கூடி ஆலோசித்து, பூனைக்கு எதிராகக் கண்டனத்   தீர்மானங்கள் எழுப்பினவாம், மாற்றாக, பூனையுடன் கூட்டுத் திருட்டுத் தீர்மானம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவனாம். ஆனால் அந்தக் கண்டனத் தீர்மானத்தை யாருமே பூனையிடம் கொடுக்க முடியவில்லையாம், கூட்டுத் திருட்டுத் தீர்மானத்தையும் பூனையின் காதுகளுக்குக் கொண்டு செல்ல முடியவில்லையாம், பூனையின் ஒளிரும் விழியில் எலிகளுக்குக் கிலி பிடித்துக் கொண்டதாம்.

 பிரிந்து இருந்த எலிகளின் குழுக்களுக்குள் யார் பூனையிடம் கண்டனத்தைக் கொண்டு செல்வது, ஒன்றுமே செய்வதறியாமல் எலிகள் அகப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் கொள்ளையைத் தொடர, பூனையும் திருட்டையும், அவ்வப்போது எலிகளின் வேட்டையையும் தொடர்ந்ததாம். மக்களும் பூனைக்கும் எலிகளுக்கும் மாறி மாறிப் பயந்து, ஒரு கட்டத்தில் அவர்களும் அந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விட்டனராம்.....

 சரி இந்தித் திணிப்பு வந்தபோது விழுந்துப் புரண்டுப் போராடியத் திராவிடக் கட்சிகள் எல்லாம் எங்கே, இந்த ஊழல் வழக்கெல்லாம் என்ன ஆகும்? அப்புறம் பை தி வே, அடுத்தத் தேர்தல் எப்போன்னு சொல்லமுடியுமா மகாஜனங்களே!

 பி.கு: மேல நீங்க படிச்ச என் பாட்டி சொன்னக் கதைக்கும் நான் கேட்டக்  கேள்விகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை யுவர் ஆனர்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!