Monday, 24 October 2016

பிள்ளைகளைச் சூழ்ந்திருக்கும் உலகம்



இன்று ஒரு வேலையாகக் கோபாலபுரத்தில் இருக்கும் டி ஏ வி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகள் அமைந்திருக்கும் சாலையைக் கடக்க நேர்ந்தது, இருபக்கமும் வாகனங்களை நிறுத்தி, பெரும் போக்குவரத்து நெரிசல், சென்னையில் பள்ளிகள் அமைந்திருக்கும் எல்லாச் சாலைகளிலும் இதுதான் பிரச்சனை என்றாலும், சிறிய பிள்ளைகள் கூடத் தங்கள் வாகனத்துக்காக அப்படியும் இப்படியும் உடன் பெரியவர்கள் இல்லாமல் ஓடியது அச்சத்தையே தந்தது, அவ்வப்போது காணும் காட்சிகளைக் கண்டும், கேட்கும் நிகழ்வுகளைக் கொண்டும், சில கருத்துக்களைக் குழந்தைகளின் நலனுக்காகப் பகிர்கிறேன்;

1. பள்ளியின் வாகனம் என்றாலும் தனியார் வாகனம் என்றாலும், பெற்றவர் அளவுக்குப் பிள்ளைகளின் மேல் யாருக்கும் அக்கறை இருக்காது! உங்களுக்கு ஒரே பிள்ளை, அவர்களுக்குப் பத்தில் ஒன்று பதினொன்று, அவ்வளவே! அதுதான் விபத்துகள் நிகழும்போது பள்ளிகளின் மற்றும் காவல்துறையின் எண்ணமும்!

2. பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குப் பெற்றோரோ, அல்லது வீட்டில் உள்ள ஒருவரோ அவர்களைப் பள்ளியில் விட உடன் செல்லுதல் அவசியம்!

3. பத்தாவது படிக்கும் மாணவன், ஒரு தனியார் வேனில், விளையாட்டுக்காகப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றதை இந்தச் சனிக்கிழமை காண நேர்ந்தது, உள்ளே உள்ள அவனது மற்ற நண்பர்களுக்கு அது ஒரு விளையாட்டாய் இருந்தது! பெரிய பிள்ளைகளுக்கும் பாதுகாப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். வளர்ந்தப் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கவனியுங்கள்! முடிந்தால் அவர்களின் நட்புகளை அவ்வபோது சந்தித்து நட்புடன் பழகி, தேவையற்ற பழக்கங்களைக் களையலாம்!

4. உங்கள் பிள்ளைகளை வீட்டிலோ தெருவிலோ வாகனம் இறங்கிவிடும் நேரத்திற்கும் முன்பு நீங்கள் அங்கே காத்திருங்கள், உங்கள் பிள்ளையைப் பத்திரமாய்க் கையைப் பிடித்து இறக்கி, பாதுகாப்பான இடத்திற்கு வரும்வரை உங்கள் பார்வையை அவர்கள் மீதும் வாகனத்தின் மீதும் வைத்திருங்கள்! பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு வேகம் மட்டுமே இருக்கிறது, விவேகம் இல்லை!

5. தனியார் ஆட்டோவை ஏற்பாடு செய்தாலும், அதில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்று நீங்கள் கண்காணிக்க வேண்டும். ஒரு பிள்ளையை ஒருவர் ஏற்றிவிட, காலியாய்ச் சென்ற ஆட்டோ, மற்றொரு தெருவில் நிறையப் பிள்ளைகளைப் புளி மூட்டை போல் ஏற்றி, ஆட்டோவின் சீட்டுக்கு மேல் உள்ள சிறிய இடத்தில் கூடப் பிள்ளைகளை அமரவைத்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பணம் மட்டுமே முக்கியம்!

6. பெண் குழந்தைகள் என்றாலும் ஆண் குழந்தைகள் என்றாலும் குட் டச் (நல்ல தொடுகை), பேட் டச் (கீழ்த்தரமான தொடுகை) பற்றிக் கற்றுக் கொடுங்கள்! ஓர் ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்ற பள்ளி வாகனத்தில், பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் அந்தக் குழந்தையைத் தொடக் கூடாத இடங்களில் தொட்டுத் துன்புறுத்தி இருக்கிறான். பிறகு பெற்றவர்கள் சென்று பள்ளியிடம் முறையிட, அந்த மாணவனின் அரசியல் பின்புலத்தால், பள்ளி நிர்வாகம் மெத்தனமாய் இருக்க, அந்தக் குழந்தையை வேறொரு பள்ளியில் சேர்த்தார்கள். வெளியாட்கள் என்றில்லை, பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் எந்த வயதினராலும் எந்தப் பாலினம் என்றாலும் நிகழ்த்தப்படலாம், கவனம் அவசியம்!

7. தெரிந்தவர் அறிந்தவர், பல காலம் எங்களுக்குத் தெரியும் என்று தனியார் ஆட்டோ ஓட்டுனர்களை, பிற வாகன ஓட்டிகளையும் மட்டும் நம்பி சிறு குழந்தைகளைத் தனியே அனுப்புவது தவறு.

என் மகன் ஒன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, அவனைப் பள்ளியில் விட்டுவிட்டு நான் திரும்ப, அப்போதுதான் வந்து நின்ற வேனில் இருந்து, மகனின் நண்பன் இறங்கும்போது கீழே விழுந்தான், அவன் விழுந்ததைக் கவனிக்காமலோ அல்லது கவனித்தும் அந்த வாகனம் சென்று விட்டது, விழுந்த வேகத்தில் அந்தப் பிள்ளை நடைபாதையில் வாந்தி எடுக்க, அவனுக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்து அவன் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களிடம் எந்த அக்கறையையும் இல்லை! சில வருடங்கள் கழித்துச் சமீபத்தில் பேசியதில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த அந்தத் தோழி அவர்கள் வீட்டில் இருந்து தனியே வர அனுமதியில்லை என்றது சற்றே விந்தையாக இருந்தது! யாரோ ஓர் ஓட்டுனரை நம்பி, ஏதோ ஒரு வாகனத்தை நம்பியே அந்தப் பிள்ளை இதுநாள் வரை பயணிக்கிறான்! செல்வம் போனால் சேர்த்துக் கொள்ளலாம், குழந்தைகளுக்கு நேரமில்லையெனில், அவர்களின் பாதுகாப்புக்கு உடன் வர மதம் பெரியவர்கள் பெண்ணுக்கு அனுமதி தரமாட்டார்கள் எனில் பிள்ளைகள் எதற்கு?

எல்லாவற்றையும் தந்தைதான் செய்ய வேண்டும் என்று இல்லை, உங்கள் வீட்டு பெண்களுக்கும் சுதந்திரம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

8. பன்னிரண்டு வயதிற்கும் அந்தச் சிறுமிக்கு, என் பிள்ளைகளுக்காக நான் பள்ளியில் காத்திருந்த போது, அந்தப் பெண்ணின் அருகில் வந்த ஒரு ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்ணின் தோளில் கைவைத்து, பின் கன்னத்தைக் கிள்ளி, "ஏண்டி கழுதை, இங்கே நிக்குறே, சனியனே வா!" என்று அழைத்தான், என்னால் முடிந்தது அன்றைக்கு அவனைக் கண்டித்தது, ஆனால் இதுபோலத் தரக்குறைவாக எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளிடம் பேசுகிறார்கள், தொடுகிறார்கள் என்று உங்கள் பிள்ளைகளிடம் கேட்கிறீர்களா? அவர்கள் மதிப்பெண் என்று மட்டும் கேட்க முடிந்த உங்களுக்கு, பள்ளியில் அவர்கள் படும் அவதியையும், வெளியில் படும் அவதியையும் கேட்டு தெரிந்து, அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவைகளைச் சீர்ப்படுத்துங்கள்! இல்லையெனில் வருங்காலத்தில் துன்பமே மிஞ்சும்!

9. சமீபத்தில் பத்திரிகையில் ஒரு நிகழ்வைப் படித்தேன், அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்ல, அப்பா இரவு நெடு நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்ப, அம்மாவும் நெடுந்தூரம் பயணம் செய்து மாலையில் வரும் போது, மிகுந்த சோர்வில் தன் மக்களிடம் நேரம் செலவிட முடியாமல், வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு உறங்கிவிடுவாராம்.

தன் பெண்ணைப் பள்ளி விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு முதிய உறவினர் ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்று விடுவது தின வழக்கம்! கொஞ்ச நாளாய் மகள் அம்மாவிடம், "அம்மா என்கூடப் பேசு, நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்" என்று சொல்ல, "நாளைக்கு நாளைக்கு" என்று தட்டிக் கழித்திருக்கின்றனர்.

சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த முதிய உறவினர் வீட்டுக்குச் செல்ல மறுத்த மகள், தன் அம்மாவிடம் பூனைக்குட்டிகளை வாங்கித் தர சொல்லி அடம் பிடிக்க அம்மாவும் வாங்கித் தந்திருக்கிறார்! பூனைக் குட்டிகள் வந்த சில நாட்களில் மகளிடம் பெரிய மாற்றம், அது அம்மாவுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. இருந்தாலும் மகள் வளர்க்கும் பூனைகளைக் காணும் பொருட்டு அவள் அறைக்குச் செல்ல, அங்கே அந்தப் பூனைக் குட்டிகளைச் சங்கிலியில் பிணைத்தும், ஒன்றின் காதுகளை வெட்டியும், குட்டிகளின் உடல் முழுதும் குண்டு ஊசியால் குத்தியும், அதன் ரோமங்களைத் தீய்த்தும் வைத்திருந்திருக்கிறாள், பக்கத்துக்கு வீட்டில் உள்ள பெண்மணிகளும் அவளிடம் வந்து, "உன் மகள் அந்தப் பூனைகளைக் கொடுமை படுத்துகிறாள், இப்படியே விட்டால் அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும்!" என்று சொல்ல, அப்போதுதான் அம்மாவுக்கு மகளின் மனநிலைப் புரிந்தது!

ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல, மகள் தன்னை அந்த முதிய உறவினர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும், தன் அம்மா தன்னிடம் காது கொடுத்து, பேச மறுத்ததாகவும், அதனால் அந்த முதிய உறவினரின் நினைவு வரும்போது, இந்தப் பூனைக்குக் குட்டிகளைக் கொடுமைப்படுத்துவது அவளுக்கு அந்த உறவினரையே துன்புறுத்துவது போலத் தோன்றுவதால் அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் சொல்லி இருக்கிறாள்!

உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் காதுகளும், மனமும் நேரமும் வேண்டும், இல்லையென்றால் ஏதோ ஒரு உயிர் உங்கள் பிள்ளைகளின் துன்புறுத்தலுக்கு ஆளாகும்! நாயை கல்லால் அடிப்பது, பூனையைத் துன்புறுத்துவது, பட்டாம் பூச்சியைப் பிய்த்து எறிவது என்று பிள்ளைகள் செய்யும் செயல்களை ஊக்குவிக்காதீர்கள், அது அவர்களின் மனச்சிதைவின் ஆரம்ப அறிகுறி! இப்படியே வளரும் பிள்ளைகள் சிறந்த கணவனாகவோ, மனைவியாகவோ ஆதல் அரிது!

10. வெளியில், தெருவில், பக்கத்துக்கு வீட்டில் விளையாடச் செல்லும் பிள்ளைகளிடமும் கவனம் அவசியம்!

11. இன்று மொத்த எலக்ட்ரானிக் பொருட்களையும் பிள்ளைகளிடம் கொடுக்கிறீர்கள், அதில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கிறீர்களா? அதில் அவர்கள் நல்லதையும் தெரிந்து கொள்ளமுடியும், தேவை இல்லாத குப்பைகளையும் காண முடியும், வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.

12. வெளி உலகை, பாதுகாப்பு நிறைந்ததாக நாம் மாற்ற முடியாது, முடிந்தவரை நம்மில் இருந்து வந்த உயிரை, நாம் சரியாக வழிநடத்தலாம், பாதுகாப்பை உறுதி செய்யலாம்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...