மேல்தளத்தின் வெற்றுப்பரப்பின்
சுவற்றில் சாய்ந்துக்கொண்டு
பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த
தன் பக்கத்துவீட்டுக் கடைக்குட்டியும்
தான் பெற்ற ஆறு பெண்களின்
மூன்றாவது மகளின்
தோழியுமான மீனுவின்
கன்னம் கிள்ளி "படிக்கிறியா கண்ணு?"
என்று கேட்டான்
ஐம்பதின் விளிம்பிலிருந்த பரந்தாமன்
"ஆமாம் அங்கிள்" என்று சொன்ன
பன்னிரண்டு வயது குழந்தையின்
தோள் தட்டி கழுத்தில் வருடி
நெஞ்சுத் தொட்ட நொடியில்
அவன் கையைத்தட்டிச் சுவற்றில் தள்ளி
உமிழ்ந்துவிட்டு ஓடினாள் மீனு
மீனுவைக் காண வந்த
பரந்தாமனின் மகள்
அப்பா அப்பா என்று உருகி
எப்போதும் போல
அப்பாவின் புராணம் பாட
தன்னை விட வயதில் மூத்த
தோழியிடம் சொல்ல ஏதுமின்றி
அமைதியாய் சிரித்தாள் மீனு
அவ்வப்போது
வீட்டிற்கு அழைத்த தோழியின்
அழைப்பை மறுக்க
நட்பையே துறந்து
அப்பாவிடம் அழுது
வீடு மாற்றிப் போனாள் மீனு
எப்போதும் போல்
எல்லோரிடமும்
அப்பாவின் புராணம் பாடுகிறாள்
மீனுவின் தோழி பானு!
No comments:
Post a Comment