பலரது பதிவுகளைப் படிக்கும்போது, சாதி, மத வரலாற்றை எவ்வளவு தூரம் ஆய்வு செய்து இருக்கிறார்கள் என்பது புரிகிறது, சில மேம்போக்காய், சில புனைவுகளுடன், சில அதிப் பயங்கரக் கற்பனைகளுடன்!
அருகில் இருந்து பார்த்தவர்கள் போலவே எழுதுவதைப் படித்தால் நூற்றாண்டுகளைக் கடந்து இங்கே வாழ்பவர்களோ இவர்கள், என்ற சந்தேகம் வருகிறது. வரலாறு நமக்கு மிகவும் முக்கியம், ஆனால் வரைமுறையின்றி வாழ்ந்து மறைந்தவர்களைப் பற்றி இப்போது நீங்கள் தூற்றி என்ன ஆகப்போகிறது?
சாதியினாலும் மதத்தினாலும் நீங்கள் அவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் உங்கள் சாதியை நீங்கள் உங்கள் பெயருக்குப் பின்னால் சுமந்துத் திரிய வேண்டாமே? அல்லது இப்போது உள்ள சாதித் தலைவர்களையும், ஊழல் அரசியல்வாதிகளையும் சாடித் தீர்க்கலாமே?
மறைந்தவர்களைப் பற்றிப் பேசுவது நமக்கு எளிதாய் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் யாரும் தங்கள் தரப்பு வாதத்தை வைக்க இப்போது எழப் போவதில்லை, குண்டர்களையும், தொண்டர்களையும் அனுப்பி வன்முறையில் ஈடுப்படப் போவதில்லை. சாதிகளும் மதங்களும், மனிதனின் வாழ்வியல் சார்ந்து, தொழில்முறை தொடங்கி, மனிதனின் சுயநலம் பொருத்து வளர்ந்தும் தேய்ந்தும் வந்திருக்கிறது, கடந்து போன சங்கடங்களை, வன்முறைகளை, அறிந்து கொண்டு, நடந்து கொண்டிருக்கும் கயமைகளை நொறுக்குவதே, நாளை சமூகத்திற்கு நல்லதொரு விடியலைத் தரும்.
அதைவிடுத்து, பெயருக்குப் பின்னால் சாதியையும், ஊர் சார்ந்த சாதிப் பாசம் என்று தேடித் தேடி நட்பு பாராட்டுவதையும், தன் சாதிச் செய்யும் தவறுக்கு ஊமையாகவும், பிற சாதிச் செய்தால் பொங்கி எழுந்து கழுவி ஊற்றுவதையும், எந்தச் சாதி என்றாலும் பெண் என்றாலே ஆபாசமாய்ப் பேசுவதையும், நீங்கள் நிறுத்திக் கொண்டாலே சாதிக் கொடுமைகள் கொஞ்சமேனும் ஒழியும்.
உண்மையில் இங்கே பணத்தைத் தாண்டிப் பெரிய சாதியோ, பதவியைத் தாண்டிப் பெரிய மதமோ இருந்துவிடப் போவதில்லை. உங்கள் நிலைத் தாழ்ந்துப் போகும் போது, எந்த வித பிரதி உதவியும் எதிர்பாராமல் எவனொருவனும் அல்லது எவலொருவளும், உங்களுக்கு வந்து உதவிக் கரம் நீட்டபோவதில்லை, அவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராய் இருந்தாலும், மதத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும்.
உங்களை நேசிக்கும் ஒருவரோ, நட்புப் பாராட்டும் ஒருவரோ, அல்லது மனிதத்தன்மை கொண்ட ஒருவரோ தான் உங்களுக்கு உதவப் போவது, அப்போது நீங்கள் உங்கள் சாதியிலேயே உறுதியாய் இருந்து உதவியையும் அன்பையும் மறுத்து விட்டால், உண்மையிலேயே நீங்கள்தான் சாதிமான். ஆனால் என்ன செய்வது, பிற சாதியை மறுத்து, மதத்தை மறுத்து நீங்கள் உங்கள் காலைக் கடனைக் கூடக் கழித்து விடமுடியாது, நீங்கள் உபயோகப்படுத்தும் பற்பசையும், சோப்பையும் கூட உங்கள் சாதிதான் தந்தது என்று உங்களால் சொல்லி விட முடியுமா? நிற்க உதாரணங்கள் ஆயிரம் உண்டு சாதி இல்லை என்று சொல்ல, ஆயினும் சாதியப் போராட்டம் தேவையாய் இருக்கிறது பல இடங்களில், மனிதர்களின் அடிப்படை வாழ்வதாரத்துக்காக.
இங்கே சாதி வேண்டுமா வேண்டாமா என்று விவாதிக்க வரவில்லை, ஆனால் சாதிக் கொடுமைகள் தெரிந்துக் கொண்டபின், இனி அவை போன்ற கொடுமைகள் நிகழா வண்ணம் தடுக்க வேண்டும், அதை விடுத்து, உன் பாட்டன் ஒரு புறம்போக்கு, உன் முப்பாட்டன் ஓர் அடிவருடி என்று காழ்ப்புகளில் மூழ்கி வசவுகளில் இறங்கினால், இன்றைக்குச் செய்ய வேண்டியவை நீர்த்துப் போய், நாளை சந்ததிகள் நம்மையும் வசவுகளில்....திட்டித் தீர்க்கும்!
சாதியை மேனியிலும், மொழியிலும் பார்க்காமல், ஆணோ பெண்ணோ, கசப்பை நீக்கிச் சக உயிராய்க் காண்போமே? வரலாற்றைத் தெரிந்து கொண்டு, தூற்றுவதை நிறுத்தி ஆக்கபூர்வமான செயல்களைச் செய்தால், வருங்காலச் சந்ததிக்கு இதுபோல் கழுவி ஊற்றும் வேலையேனும் மிச்சமாகும், நாளை நல்லதொரு விடியலாய் அவர்களுக்கு அமையும்!