Friday, 24 March 2017

அங்கீகரிக்கப்பட்ட காமத்திற்கு நிச்சயிக்கப்படும் விலை

பல வருடங்களுக்கு முன்பு ஓர் அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்கு, பெற்றவர்கள் பார்த்துத் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்கள், அவருடைய அப்பா சுயதொழில் செய்து ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருப்பவர், "நான் வேலைக்கு வருவதே பொழுபோக்கத்தான்" என்று அந்தப்பெண்ணே சொல்லியிருக்கிறார், திருமண நிச்சயத்திற்குப் பின்பு அந்தப்பெண் சோகமாயிருக்க, அதன் காரணத்தை மற்றவர்கள் கேட்டபோது, அந்தப் பெண்ணுக்கு சிறுவயதிலேயே இதயத்தில் சிறு ஓட்டை இருந்ததாகவும், அதற்கு ஆபரேஷன் செய்து சரிசெய்துவிட்டதாகவும், ஆபரேஷன் செய்த வடுவினால் தனக்குத் திருமணமே நடக்காது என்று நினைத்திருந்ததாகவும், எப்படியோ மாப்பிளை அமைந்து, திருமணம் நடக்க இருக்கிற வேளையில் தந்தை குழப்பம் செய்வதாகவும் சொல்லி அழுதார்!
அந்தக் குழப்பம் என்பது ஒன்றுமில்லை, மாப்பிள்ளை வீட்டில் அடுக்கிய வரதட்சணையை எல்லாம் கொடுக்க அந்தப்பெண்ணின் அப்பா சம்மத்தித்திருக்கிறார், கல்யாணம் நெருங்கும் வேளையில் மாப்பிள்ளை பையன் புத்தம் புதிய கார் ஒன்றையும் பட்டியலில் சேர்க்க அந்தத்தந்தையால் அதைச் செய்ய முடியவில்லை, "எனக்கு ஆபரேஷன் செஞ்ச வடு இருக்குன்னு தெரிஞ்சும் அவர் கல்யாணம் செய்யச் சம்மதிக்கும், என் அப்பா கார் வாங்கிக்கொடுத்தாத்தான் என்ன?" என்பதே அவர் வாதம், அவர் தந்தை தொழிலின் மேல் ஏகப்பட்ட கடன் வாங்கித்தான் திருமணம் செய்வதாகவும், கார் வாங்கிக்கொடுக்கத் தொழிலை விற்றால்தான் முடியும் என்று சொல்லியிருக்க, "பொண்ணுக்காக அதைச் செஞ்சாத்தான் என்ன ?" என்பதே அந்த அம்மணியின் கூற்று!

"அடடா, அப்பனுக்குச் சோத்துக்கு வழியில்லைனாலும் பரவாயில்லை, கல்யாணம் ஆனால் போதும் என்று இப்படியும் பெண்கள் இருப்பார்களா?" என்று படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே கண்முன்னேயே நிகழ்ந்த இப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்குத் திகிலூட்டி இருக்கின்றன!
இன்றைய "நீயா நானா" வில் பெண்கள் பேசிய பேச்சுக்களைக் கேட்டு அந்தப்பெண்களை வைத்து எல்லோரும் பெண்களை நையாண்டிச் செய்யும்போது, இதுதான் தோன்றியது, "திருமணம் மட்டுமே வாழ்க்கை, நகையும், பணமும் வரதட்சணையும் தந்தால்தான் என்ன?" என்ற அளவிற்குப் பல பெண்களின் சிந்தனை மாறிப்போனது ஏன்?

" உடலில் ஊனம் இருந்தால் அதற்கும் பணம் தந்து ஈடு செய்து, மாப்பிள்ளைக்குக் கொட்டி அழுதால் அந்த ஊனம் மறைந்துவிடுமா? அப்படியொரு திருமணம் தேவையா ?" என்ற சிந்தனை ஏன் பெண்களிடம் இல்லை??
"பெண்களின் சிந்தனைக்குக் காரணம் பெற்றவர்கள்தாமே?" ஆண்களைப் பெற்றவர்கள், அவனை வருமானம் ஈட்டும் எந்திரமாகவும், பெண்களைப் பெற்றவர்கள் அவள் செலவை இழுத்து வைக்கும் கருவியாகவும் நினைத்து வளர்க்கும் முறையும் பாங்கும், இருபதை கடந்துவிட்டாலே, "இன்னமுமா கல்யாணம் செய்யலே?" என்று கேட்கும் சமூகமும் தானே இத்தகைய சிந்தனைகளுக்குக் காரணம்?!

கல்யாணமாகிப் பதினைந்து வருடங்களாகி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான எதிர் வீட்டு அக்கா, தன்னுடைய தங்கையின் திருமணத்தின் போது,
"அவளைப் படிக்க வைத்தது போல் என்னைப் படிக்க வைக்கவில்லை, அவளுக்கு இப்போது செய்வது போல், எனக்கும் செய்ய வேண்டும்" என்று அடம்பிடித்துச் சண்டை இழுத்தது நினைவுக்கு வருகிறது!

அந்த நிறுவனத்தில் நன்கு படித்த ஒரு பெண், அத்தனை அற்புதமாய் வேலைகளைச் செய்யும் பெண் ஒருநாள் வேலையை விட்டுச் செல்கிறேன் என்று சொல்லப்போக, அவளை அழைத்துப் பேசிய போது, "நான் தலித்" என்று அவள் சாதியை முதலில் சொல்லியபோது மிகுந்த அதிர்ச்சியாகவும், அயற்சியாகவும் இருந்தது. "சாதி எதற்கு? இப்போது அதனால் என்ன, அதற்கும் வேலையை விடுவதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டபோது, தன் குடிகார தந்தை தனக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்வதாகவும், சென்னையை விட்டு ஊரியிலேயே அப்பன் பார்த்து வைக்கும் ஏதோ ஒரு குடிகாரனையோ, கூலி வேலை செய்பவனையோ திருமணம் செய்துக்கொண்டு போகப்போவதாகவும், அவர்களும் சொந்த ஊரிலேயே இருக்க விரும்புவதால் உடனடியாக வேலையை விட்டு சென்று விட வேண்டிய நிர்பந்தம் என்றாள், பேசியதில் தெரிந்துகொண்டது என்னவென்றால், அந்தப்பெண்ணின் கல்வி அவளுக்கு முதுகெலும்பை நிமிர்த்தவே இல்லை, "கல்யாணம், குடிகாரனாக இருந்தாலும் அப்பன் சொல்லும் மாப்பிள்ளை போதும், குடும்பம் குட்டி அவ்வளவுதான் வாழ்க்கை, யார்தான் குடிக்கல?" :-(

"நலமாய் இரு!" என்ற வாழ்த்துதலோடு, பிரார்த்தனையோடு வழியனுப்பி வைத்தோம், வேறென்னே செய்துவிட முடியும்?

"ஐம்பது பவுன் நகை, ஹெலிகாப்டர், கார், பங்களா, ஆடைகள்" என்று பெண்களும், அவர்களைப் பெற்றவர்களும் பட்டியலிடும் போது, பணத்தைச் சார்ந்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படும்போது, அந்தப்பணத்தைக் கொண்டு பெண்ணை விற்பதற்குப் பதிலாக, அந்தப்பணத்தை அவளுடைய சுயமுன்னேற்றத்திற்கு, கல்விக்கு ஏன் இந்தப் பெற்றவர்கள் செலவிடக்கூடாது? அல்லது அந்தப்பெண்களே சுயமாய் நிற்க முயற்சிக்கக் கூடாது என்பது எப்போதும் மனதிற்குள் எழும் கேள்வி!
உண்மையில் சொல்லப்போனால் "அங்கீகரிக்கப்பட்ட காமத்திற்கு நிச்சயிக்கப்படும் விலைதான் இவையெல்லாம்!"

கல்வி கொடுத்து, ஆண்மகன் என்ற திமிர் ஏற்றிவைத்தாலும், பெண் கொண்டு வரும் சீதனம் தேவையாய் இருக்கிறது ஆண்களுக்கு, அத்தனை விலைகொடுத்துத் திருமணம் செய்யும்போது, பெரும்பாலான பெண்களுக்கு அவர்களின் கணவன் என்பவன் மற்றுமொரு விலைக்கு வாங்கப்பட்ட பொருளே! அப்படிப்பட்ட பொருள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கும் நினைப்புதான் அவனைப் பெற்றவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறது!

பொருளை வாங்கியவர்கள் நடத்தையை நாம் விமர்சிக்கவும் முடியாது! ஒருபுறம் இப்படியென்றால் மறுபுறம் எல்லாம் கொடுத்தும் நரக வேதனையில் உழலும் பெண்களும் இருக்கிறார்கள், தந்தை கொடுத்த பொருள் எல்லாம் அவர்கள் அடிமை வாழ்க்கையை உறுதி செய்கிறதே தவிர ஒருநாளும் அவர்களுக்குச் சுதந்திரக் காற்றை அது பெற்று தருவதில்லை! தந்தை என்பவனுக்குப் பிறகு கணவன், அவனுக்குப் பிறகு மகன், அப்படியே, அடுப்படியில் முடிந்துவிடுகிறது பலரின் வாழ்க்கை!

பெற்றவர் இதைச் செய்யவேண்டும் அதைச்செய்யவேண்டும் என்று பட்டியலிடும் எந்தப்பெண்ணும் பெற்றோரை அவர்களின் காலத்தில் நாங்கள் பராமரிப்போம் என்று சொல்லவேயில்லை, எத்தனை சுயநலத்துடன் வளர்த்திருக்கிறார்கள் பெண்களையும் ஆண்களையும் இந்தப் பெற்றவர்கள்?

சொத்துபோகக்கூடாது என்று சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டு குறைபாடான குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு புலம்புவர்களைக் கண்டிருக்கிறேன், பணம் பணம் என்று பணத்தைக் கொண்டு திருமணம் முடித்துவிட்டு, பின் அவளின் குணம் சரியில்லை, அவனின் பழக்கம் சரியில்லை என்று உறவுகளை முறித்துக்கொண்டவர்களும், முறித்துக்கொள்ள முடியாமல் குழந்தைகளுக்காகக் குறைபாடான வாழ்க்கையைச் சகித்துக்கொண்டு வாழ்பவர்களையும் கடந்திருக்கிறேன்!

திருமணம் என்பது ஒருநாள் சடங்காக, இத்தனை பணம் வேண்டும், நகை வேண்டும், இந்த விலையில் புடவை வேண்டும் என்று பார்க்கும் பெண்களுக்கு இல்லறம் நல்லறமாக இதுமட்டும் போதுமா என்ற சிந்தனை வேண்டும்! குடிகாரக் கணவன் அமைந்துவிட்டால் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, பிறிதொரு நாளில் பிள்ளைகளை விட்டுவிட்டோ, பிள்ளைகளுடனோ தற்கொலைச் செய்துக்கொள்ளும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள்.

பலகீனமான மனநிலையில் பெண்களை வளர்த்துவிட்டு, செலவு செய்து திருமணம் செய்துகொடுப்பதற்குப் பதிலாக, அந்தப்பணத்தை முதலீடாகச் செய்து அவளுக்குச் சிறந்த கல்வியை, தெளிவைக் கொடுத்தால்கூட நிறையப் பெண்களின் வாழ்க்கைச் சிறப்பாக அமைந்திருக்கும், அமையும்!
"பெண்ணின் பணத்தில் வாழலாம்" என்றும், "எந்தத்தோல்விக்கும் குடியே நிவாரணம்!" என்றும் பலகீனமான நிலையில் ஆண்களை வளர்த்துவிட்டு அவர்களுக்குத் திருமணமும் செய்துவிட்டு முதியோர் இல்லத்தில் தனியே புலம்புவதற்குப் பதில், முதுகெலும்புடன் ஆண்பிள்ளையை வளர்த்து, அவனுக்குச் சரியான "தோழமையாக" ஒத்த சிந்தனையுடன் பெண்ணைத் தேர்ந்தெடுத்தால் இருவரின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்!
அப்படிப்பட்ட சிறப்பான வாழ்க்கையில் மலரும் அடுத்தத் தலைமுறை சிறப்பானதொரு தலைமுறையாக அமையும்தானே?!

பெண்களும் ஆண்களும் ஒன்றுதான், இரு க்ரோமோசோம்கள் இணைந்து, புதிய தலைமுறை படைக்கும் இல்லறத்திற்கு, பணத்தையே துலாக்கோலாக வைத்தால், பிறக்கும் தலைமுறை மாற்றமின்றி அடிமை மனநிலையிலும், ஆண் திமிரிலுமே தொடரும்! முதியோர் இல்லங்களும் பெருகும்! ஆணும் பெண்ணும் சமம், கல்வி, வேலை, திருமணம், சொத்து, உழைப்பு, ஒழுக்கம் என்று எல்லாவற்றையும் இருவருக்கும் பொதுவென வைத்துவிட்டால் "சுரண்டும்" இந்த மனநிலை மாறிவிடும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...