Tuesday 7 March 2017

சிக்னல்_க(வி)தைகள்!

#சிக்னல்_க(வி)தைகள்!
பச்சையும்
சிவப்புமாய்
சிக்னல்
மாறி மாறி
ஒளிர்கிறது
நிறக்குருடர்களாய்
மக்கள்
சாலையில்!
*****************************************
அந்தச் சிக்னலில்
கந்தலாடையில்
முதியவர் ஒருவரும்
லாரியை ஒதுக்கி
ஓரத்தில்
சீருடையில் ஒருவரும்
பிச்சை
எடுத்துக்கொண்டிருந்தார்கள்
******************************************
சிவப்பு விளக்கை
அலட்சியப்படுத்திக் கடப்பவன்
பச்சை விளக்கிற்காக
காத்திருந்தவனின்
நம்பிக்கையையும்
நேர்மையையும்
தகர்க்கிறான்
******************************************
ஆடை
உருவம்
பருவம்
என்றில்லை
பெண்கள்
வாகனங்களில்
முந்தும்போது கூட
ஆண்மை
விழித்துக்கொண்டு
வேகமெடுக்கிறது
*************************************************
விலை உயர்ந்த
மகிழுந்துகளும்
இருசக்கர வாகனங்களும்
வாங்கிவிட்டால்
சாலையில் பறந்துதான்
தீரவேண்டுமாம்
எலிவிஷம்
பத்துரூபாய்தானே?
*************************************************
ஒருவனின்
போதைக்கும்
ஒருவனின்
அலட்சியத்துக்கும்
இடையில்
பேருதவி செய்கிறது
வேகத்தடை!
*************************************************
மலையை அழித்து
குர்தா போட்டு
ஆட்டம் போட்டால்
அவன் ஜக்கி
சிக்னலில்
கிழிந்த ஆடையில்
வயிற்றுக்காக
கையேந்தினால்
அவன் பக்கி!
*************************************************
சிக்னலில்
பிச்சையெடுக்கும்
ஒவ்வொரு குழந்தையிடமும்
தொலைந்த தன்
பிள்ளையின் முகம்
தேடுகிறாள்
தாயொருத்தி!
*************************************************
சாலை
விதிகளை
மதித்துக் கடந்தன
நாய்களும் எருமைகளும்
காட்சிப்பிழையெல்லாம்
இல்லை!
*************************************************
பேருந்துக்கு
கனரக ஊர்திக்கும்
இடையில்
ஆபத்தான இடைவெளியில்
தலைக்கவசம் இல்லாமல்
விரைந்தவன்
சட்டென்று வந்த
தூறலுக்கு
பயந்து
சாலையோரம்
ஒதுங்கினான்
*************************************************

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!