Tuesday, 5 February 2013

வெற்றி என்பது

வெற்றி என்பது
-----------------------
வெற்றி என்பது தானாய் வருவதில்லை, அது தனித்தும் வருவதில்லை! அயராத உழைப்பு வெற்றியை தரும் வேளையில், அதை தக்க வைத்துக்கொள்ள, பலனை அதிகமாக்கிக் கொள்ள என ஓட்டத்தை அதிகப்படுத்தி, கூடுதல் சுமையையும் தரும்!

எது வெற்றி என்பது அவரவர் தேவையைப் பொறுத்து, மனநிலையைப் பொறுத்து மாறும்! ஒருவரின் வெற்றி அடுத்தவரின் அடிப்படைத் தேவையாகலாம், சிலரின் தேவை அடிப்படையைத் தாண்டியும் இருக்கலாம்!

நோக்கம் என்பது எதுவாக இருந்தாலும், அதில் தெளிவு இருக்க வேண்டும், திட்டமிடல் இருக்க வேண்டும், செயல்படுத்தும் திறன் இருக்க வேண்டும்! ஒரு நிமிடத்தில், ஒரு நாளில், ஒரு மாதத்தில், உங்கள் இலக்கு மாறிவிடும் என்றால் ஒன்று அது உங்கள் இலக்கு இல்லை, அல்லது உங்கள் இலக்கில் உங்களுக்கு தெளிவில்லை!

எல்லாம் தெரியும், என்னால் முடியவில்லை என்றால், ஒன்று ஏதோ ஒரு அயர்ச்சி, அல்லது இலக்கை அடைவதற்கு நமக்கு தகுதியில்லை என்பதே உண்மை!

நம்முடைய தகுதி என்பது நாம் தீர்மானிப்பது, நாம் எதுவாக நம்மை நினைக்கிறோமோ அதுவாக அமைவது! நம் சிந்தைனையில் ஊற்றெடுக்கும் ஒரு நம்பிக்கை, தினம் தினம் வளர்ந்து, நாம் தகுதியாக மாறி, செயற்கரிய செயலை செய்ய வைக்கும்! சிந்தைனையில் சோம்பி இருக்கும் ஒருவர், செயலை செய்வது என்பது சாத்தியமில்லாதது, சிந்தனை மிகுந்த ஒருவர், கனவு மட்டும் கண்டு கொண்டிருந்தால் அங்கேயும் வெற்றி சாத்தியமில்லை!

தினம் தினம் நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கையையும், மனிதர்களையும் நாம் மாற்றிவிட முடியாது, ஒரு அடி நாம் முன்னே வைத்தால் பல அடி சிலர் நம்மை பின்னே இழுக்கலாம், கடலில் நீந்த வேண்டும் என்றால் எதிர்நீச்சல் செய்யத்தான்  வேண்டும், நமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை தவிர்த்து, இலக்கை நோக்கி அயராது பயணிக்க வேண்டும்!

ஒரு பெரிய இலக்கினை அடைய வேண்டும் என்றால், சில சிறிய இலக்குகளை வகுத்துக் கொள்ள வேண்டும், சிறிய சிறிய இலக்கினை அடையும் போது, நின்று அதை மகிழ்வுடன் கொண்டாடுங்கள், அந்த கொண்டாட்டம் என்பது, மேலும் முன்னேற ஒரு அடித்தளம் ஆக வேண்டும், மாறாக சிறிய சிறிய கொண்டாட்டத்தில் மனம் தேங்கி நின்று விட்டால், சும்மா இருந்தே உடல் சுகம் கண்டு விடும்!

வெற்றிக்கான பாதையில், உழைப்பு இருந்தால், எது வெற்றி என்ற தெளிவு இருந்தால், ஒரு சிறு துரும்பும் உங்களுக்கு உதவும்! எப்படிப்பட்ட வெற்றி என்றாலும், அடுத்தவரை துன்புறுத்தி, தாழ்த்தி, கொடுமை செய்து, கொலை செய்து, இன்ன பிற கயமைகளை செய்து அடையும் வெற்றியால் ஒரு போதும் நிம்மதி கிடைக்காது!  அனைவரையும் அரவணைத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடி, தோல்வியையே காரணமாக்கி தேங்கி நிற்காமல் செல்லும் பயணத்தில், அடைவது வெற்றி மட்டுமில்லை, நிறைந்த நிம்மதியும் தான்!

இறுதியாக ஒரு கதை,  ஒருவன் இறைவனை அதிகமாக நம்பினான், ஒருநாள் அவன் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்து, அனைவரும் தப்பிச் செல்கையில், இவன் மட்டும் கடவுள் வரட்டும் என்று காத்து இருந்தான், ஒருவன் படகில் வந்து அழைத்தான், ஒருவன் சுழலூர்தி கொண்டு அழைத்தான், எதிலும் ஏற மறுத்து, இறைவன் வர வேண்டும் என்று சொல்லி இறுதியில் மூழ்கிப் போனான், சொர்க்கத்தில் கடவுளை கண்டு "ஏன் என்னை காப்பாற்ற வரவில்லை," என்று கேட்க, நான் மூன்று முறை வந்தேனே, மூன்று வெவ்வேறு நபர்களாக என்றாராம்! இதுபோலவே நாமும் நம்மை தேடி வெற்றி வரவேண்டும் என்று நினைத்திருந்தால், நாமும் சும்மா இருந்து சுகம் காணலாம்!

ஒரு ஊரில் இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள், அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந்தார்கள், ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு சாது வந்தார், எல்லோருக்கும் நன்மை செய்தார், வழக்கம் போல இவர்கள் இருவரும், அவரை முட்டாளாக்கக் கருதி, ஒரு சிறு பறவையை கையில் எடுத்துக்கொண்டு அவர் முன்னே சென்றனர், பறவையை தங்கள் பின்னால் மறைத்துக் கொண்டு, "எங்கள் கையில் ஒரு பறவை உள்ளது, அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா?" என்று கேள்வி எழுப்பினர் (உயிருடன் என்று சொன்னால் கொன்று விடும் திட்டம், இல்லை என்றால் பறக்கவிட எண்ணம்)...சாது சொன்னார் "அது உங்கள் கையில் தான் இருக்கிறது" என்று! 

தெளிந்த நீரோடை போல சென்று கொண்டேயிருங்கள், தோல்வி என்னும் தடைக்கற்கள், உங்களின் அயராத முயற்சியினால், மெருகேற்றப்பட்ட படிகற்கள் ஆகட்டும்! வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுடையதாகட்டும்! 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!