யாரோ யாரையோ
தினம் கடந்து
போகிறார்கள்
சிலரும் பலருமாக
சிலர் முகம் பார்க்க
மறுக்கிறார்கள்
பலர் குரல் கேட்கத்
தவிர்க்கிறார்கள்
சிலர் பார்த்து விடத்
துடிக்கிறார்கள்
பலர் பழகிய பின்
மறைகிறார்கள்
சிலர் நம்பிக்கையை
விதைக்கிறார்கள்
பலர் நயவஞ்சகம்
புரிகிறார்கள்
சிலர் அறிந்தபின்
பிரிகிறார்கள்
பலர் அறியாமலேயே
தொடர்கிறார்கள்
சிலர் கேட்டதும்
ஒளிகிறார்கள்
பலர் கேட்காமலே
அருள்கிறார்கள்
சிலர் மருந்தைத்
தருகிறார்கள்
பலர் மருந்தாய்
அமைகிறார்கள்
சிலர் புறமுதுகில்
சாய்க்கிறார்கள்
பலர் பொன்னாய்
காக்கிறார்கள்
சிலர் கண்ணீரில்
நனைக்கிறார்கள்
பலர் செந்நீரையும்
துடைக்கிறார்கள்
சிலர் மலராய்ப்
பூக்கிறார்கள்
பலர் புயலாய்ச்
சாய்க்கிறார்கள்
பலரும் சிலரும் -
பார்த்துப் பழகிய
சில பல வேளைகளில்
அன்பைக் கடத்தி
அனுபவம் சுமத்தி
எதிர்பாரா ஏதோ
ஒரு தருணத்தில்,
பலர் யாரோவாகிப்
போகிறார்கள்
சிலர் யாதுமாகி
நிற்கிறார்கள்!