Tuesday 17 September 2013

பேரழகி!


நாள்தோறும் வெயிலில் உழைத்து
கல்லுடைத்து மண்சுமந்து - மகனை
சுமக்கிறாள் அவள்!

குடித்து விட்டு சீரழியும் குடும்ப
தலைவனையும் பொறுத்து - வம்பு
பேசித் திரியும் வல்லூறுகளைத் தவிர்த்து
மகனுக்காக உணர்வு கொல்கிறாள்

இளமையில் கொடிய வறுமை
மகனை அண்டாமல் - காம்பு
வற்றிய மார்பில் இருந்து தன் உதிரம்
தருகிறாள் - மகனுக்காக உண்டிச் சுருக்கி
உயிரை  வளர்க்கிறாள்

வெயிலிலும் மழையிலும் வாடிய மங்கை
பால் போல் வண்ணமில்லை - அவளின் 
வற்றிச் சுருங்கிய தேகத்தில்
பஞ்சு போல் மென்மையுமில்லை -
உணர்வு அழித்து உண்டி சுருக்கியவள்
உங்கள் பார்வைக்கு அழகியும் இல்லை

எனினும்
பெண்மை போற்றும் ஒரு நல்லவன்
நாளை - உங்கள் முன் வருவான்
வண்ணத்தில் ஏதுமில்லை,
வடிவத்தில் மோகமில்லை
புறத்தில் நாட்டமில்லை,
அகம் கொண்ட அன்பே பெரிது,
பெண்ணே தெய்வம் என்பான்
தாய்மை நிறைந்தவளே பேரழகி
என்றொரு  உண்மைக் கூறுவான்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!