Thursday, 23 January 2014

விமர்சனங்கள்!


ஒரு வெள்ளுடுப்பில்,
நெற்றியில்
சிறு கீற்றுச் சந்தனத்துடன்
கேரளத்துக் குட்டியாகவும்,

கால்சராயில், கண்மறைக்கும்
கண்ணாடியில் -
கிறிஸ்தவப் பெண்ணாகவும்,

கோவிலின் வாசலில்
வியர்வையில் விழுந்து விட்ட
நெற்றிப் பொட்டினினால்,
முகமதியரின் மகளாகவும்,

குலம் அறிந்து
கொண்டவர்களுக்கு
அப்பனின் பெண்ணாகவும்,

சாதி அறிய
முடியாதவர்களுக்கு
வேற்றுக் கிரக வாசியாகவும்,

எடுத்த முடிவை
மாற்றிக்கொள்ள மறுக்கையில்
திமிர் பிடித்தவளாகவும்,

எதிர்த்துக் கொஞ்சம்
பேசுகையில்,
சம்பாதிக்கும்
தினவெடுத்தவளாகவும்,

நீங்கள் துயருரும்போது
நினைவில்
வரும் தோழியாகவும்,

ஏதோ ஒன்றில்
பெண்ணை உருவகப்படுத்தி,
என்னைக் கடக்கும் நீங்கள்,  
இனி எப்போதும்
அறியப்போவதில்லை - 
யாதொரு உள்ளத்தையும்,
உங்கள் ஆழ்மன
அடிமைக் கூட்டிலிருந்து 
முயன்று நீங்கள்,
வெளியேறும் நாள் வரை!

 

1 comment:

  1. உண்மை தான்...

    விமர்சனங்களை ஒதுக்கி தள்ள வேண்டும்...

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!