Friday, 6 June 2014

எஸ்தரின் கதை!

 இது எஸ்தரின் கதை, உண்மைக் கதை, எஸ்தரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும், கர்த்தரின் கருணைக்காக தினம் இந்தத் தேவாலயத்தில் வந்து மண்டியிடும் குப்புசாமியின் மகள்.

 தன் கடைசி நிமிடங்களை இழுத்துக் கொண்டிருக்கும் பன்னீர் சோடா பாட்டில் கம்பெனியில் குப்புசாமி வண்டி இழுத்துக் கொண்டிருக்கிறான், மூத்த தாரத்தின் மகள்தான் எஸ்தர். அவளின் ஐந்து வயதில் அவள் அம்மா இறந்து போனாள், பெயர் தெரியாத வியாதியால்!  குப்புசாமி மகளுக்காகவென ரோசியைத் திருமணம் செய்து அழைத்து வந்தான்.

 உங்கள் கற்பனையில் இப்போது ரோசியின் கொடுமையில் எஸ்தர் விக்கி விக்கி அழுவது போல் தோன்றினால், நீங்கள் அதிகமாய்த் தொலைக்காட்சித்  தொடர்களைப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். நிற்க!
 ரோசி, எஸ்தருக்கு அன்னையாகவே வாழ்ந்தாள். குப்புசாமிக்கும் மனைவியாக வாழ்ந்ததால் எஸ்தருக்கு ஒரு தம்பியும் தங்கையும் அடுத்தடுத்து வாய்த்தார்கள்.

 எஸ்தருக்கு அழகான கண்கள், மான் விழிகள் போன்று மருண்டு ஓடும் என்று சொல்லலாம், ஆனால் எஸ்தர் யாரைக் கண்டும் மருண்டு ஓடுவதில்லை, குப்பத்தில் வளர்ந்தப் பெண்ணுக்கு, கர்த்தரைத் தவிர யாரிடமும் லயிப்பில்லை.

 வண்டி இழுத்துக் கொண்டிருந்த குப்புசாமி இழுத்து இழுத்து விட்டப்  புகையில், எமனும் ஒருநாள் அவன் உயிரை இழுத்துக் கொண்டார் அல்லது கர்த்தர் அவனைத் தன் மந்தையில் சேர்த்துக் கொண்டார், எதற்கு இந்தக் கதையில் ஒரு மதக் கலவரம்?!

 பள்ளியிறுதி மட்டும் படித்த எஸ்தருக்கு, வேலை கிடைக்கவில்லை, ஏதோதோ சாதிக்கும் ஆசையை மட்டும் தந்திருந்தது, தம்பி தங்கையைத் தொடர்ந்து படிக்க வைக்கும் ஓர் உறுதியைத் தந்திருந்தது...

 சிறு சிறு வேலைகள் செய்து வந்த எஸ்தர், அன்று நெடுநேரம் கர்த்தரிடம் மண்டியிட்டு உருகிக் கரைந்துக் கொண்டிருந்தாள். புனித மேரியின் திருவிழா ஏற்பாடுகளில் குப்பம் நிறைந்திருந்தது, சாராயக் கடைகள் அன்னையின் திருவிழா என்று காரணம் சொல்லி, குடியில் இன்பத்தை நிறைத்துக் கொண்டிருந்தார்கள்....

 சாராயக் கடைகளைத் தாண்டிச் செல்வதே எஸ்தருக்கு பெரும் பாடு, அடிக்கடி வம்பிழுக்கும் மாரிச் சாமியையும், ஆளுங்கட்சியில் இருந்த செபஸ்டினையும் தவிர்த்து அன்றும் அவசர அவசரமாய் நடையை எட்டிப் போட்டாள்

 திருவிழாவில், குப்பத்தைச் சாராயத்தில் குளிப்பாட்டி, ஒரு சின்னத் தீப்பொறியில் மேலிடம் சொல்லிய மதக் கலவரத்தை உருவாக்குவதற்கும், அப்படியே தங்கள் இச்சைகளைத் தணிப்பதற்குத் திட்டம் தீட்டிய அவர்களின் திட்டத்தை எஸ்தர் கேட்டது கர்த்தரின் கருணையோ, அல்லது அவளின் கேட்ட நேரமோ, கர்த்தரே என்று அதிர்ந்த அவளின் குரல், கர்த்தருக்குக் கேட்டதோ இல்லையோ அந்த இருவருக்கும் கேட்டது.

 ந்தா, ஒழுங்கா வூடு போய்ச் சேரு என்று மாரிசாமி மிரட்ட செபஸ்டின் கண்களில் மட்டும் ஒரு மின்னல்.....

 அதிர்ந்துப் பதறி வந்த எஸ்தருக்கு, அவர்கள் இச்சையின் பொருட்டுச் செய்யத் துணிந்தக் காரியங்களைப் பற்றி மட்டும் என்னிடம் கூறவில்லை....தடுக்க வேண்டும் என்றே புலம்பிக் கொண்டிருந்தாள்....

 காலையில் எஸ்தரின் வீட்டுக்குப் போலீஸ் வந்தது, ந்தா யாரு இங்கே எஸ்தரு, நேத்துச் சாயந்திரம், தொழில் பண்ணப் போய் இருந்தியா....எழுத முடியாதா வசவுகளில் பதறிப் போன ரோசியை அழைத்து, புள்ளையைக் கண்டிச்சு வை, இல்லைனா நாளைக்கு உன் வீட்டில் இருந்து கஞ்சா எடுப்போம் என்று மிரட்டியவர்களின் காலில் விழுந்து விடுதலைப் பெற்றாள் ரோசி.....

 கர்த்தரிடம் மண்டியிட்டுத் திரும்பிய எஸ்தருக்குப் புரிந்தது, தன் அன்னை கஞ்சா விற்பவள், தானும் தங்கையும் தொழில் செய்பவர்கள், தம்பி திருட்டுப் பயல், அப்படிதான் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் அவர்கள் சொல்லி சொல்லி, பத்திரிக்கைகள் எழுதி எழுதி என்று.......

 ஊழியம் செய்த தேவலாயதிற்குச் சென்று, யாரின் யாரின் கால்களிலோ விழுந்து, எஸ்தர் இரண்டே நாட்களில், சிற்றன்னையையும், தம்பியையும், தங்கையையும் ஓர் இரவில் யாரும் அறியாமல் அந்த ஊரில் இருந்த இல்லத்தில் அனாதைகள் எனச் சேர்த்து விட்டு, வீடு திரும்பினாள்.

 போலீஸ் வந்து சென்ற மறுநாள், போதையில் செபஸ்டின் உளறியது அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.....கலவரத்தையும், அவர்களின் மற்ற பிற கேடு கெட்டத் திட்டங்களையும் தடுப்பேன் என்று எஸ்தர் சொல்லியது, செபஸ்டின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது...

 எஸ்தர் கதவுகளை மூடிக் கொண்டாள்,  செபஸ்டின் நினைத்தபடிப் போலீஸும் காலையில் எஸ்தரின் வீட்டிற்குச்  சென்றது, வரவேற்றது என்னவோ அப்போதும் அசராது நிலைகுத்திய கண்களோடு ஊசலாடிய எஸ்தரின் உடலே!

 அவள் எழுதி வைத்த இருவேறு கடிதங்களில், ஒன்று உபயோகப்படுத்தப்பட்டு, காதல் மோசடி என்று செபஸ்டின் உள்ளே வைக்கப்படவும், இன்னொன்று அழகாய் மறைக்கப்படவும்.......அவள் நிறுத்தி வைத்த கலவரம் கலவரம் இன்னும் நிகழவில்லை....
 
ஆனால் யாரிடம் மோசம் போனாள் எஸ்தர், செபஸ்டினடமா இல்லை மாரிசாமியிடமா? ரோசி யாருடனோ தன் பிள்ளைகளுடன் ஓடிப் போனதால்............பல்வேறு கிளைக் கதைகளுடன் புதிதாய் எஸ்தரின் புனையப்பட்ட கதை இங்கே துவங்குகிறது........
 
கதைகள் கற்பனைக்கேற்ப
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!