Tuesday 20 January 2015

ஒரு பயணம்!

ஆறு, பத்து, மேல்நிலை வகுப்பு என ஒரே பள்ளியில் ஒன்றாய் படித்த நண்பர்கள் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்து, ஒருவர் மூலம் இன்னொருவர் என, கிட்டத்தட்ட ஆண்கள் முப்பது, பெண்கள் பத்து என்ற அளவில் நாற்பது பேர் சேர்ந்து படித்த வகுப்புத் தோழர்களில், 29 பேரை மொத்தமாய் ஒரு குழுவில் சேர்த்து, அவர்களில் 20 பேர் ஒன்றாய் சந்தித்து ஒருநாள் முழுக்கச் சுற்றித்திரிந்தோம் மாமல்லபுரத்தில்!

 ஒவ்வொரு நொடியும் அழகானதாய் அமைந்தது!  இருபது வருடங்களுக்கும்  மேலான நாங்கள் கடந்த வந்த பாதையை முழுதாய் பேசித் தீர்க்க அந்த ஓர்நாள் போதவில்லை, சிரித்து, அடித்து, உதைத்து, கேலி செய்து என அந்த ஓர்நாள் ஒரு  நொடி போலப் பறந்து போனது. வெளிநாட்டில் இருந்தும், வெளியூரில் இருந்தும் தோழிகள் வந்து சேர, உள்ளூரில் இருந்தவர்கள் தங்கள் வேலைகளையும் ஒதுக்கி, குடும்பத்தினர் அல்லாத நண்பர்கள் மட்டும் நிறைந்த முதல் சந்திப்பு, பல வருடங்களுக்குப் பின்பு, இனி வரும் காலங்களில் குடும்பங்களின் சங்கமம் நிகழும்!

 இந்தச் சந்திப்பு அத்தனை சுலபமாய் நிகழ்ந்து விடவில்லை, சிலருக்கு விபத்து, உடல்நிலையில் மந்தம் எனச் சில பல தடைகளைத் தாண்டி, திட்டமிட்டப்படி சந்தித்தோம், பயணம் அதன்போக்கில் அமைந்தது அழகாக!

 நீண்டதொரு அழகிய பயணக்கட்டுரையாக இதை எழுதும் ஆவல் எழுந்தது, எனினும் நேரமின்மையாலும், சுகவீனத்தாலும் அதை விட முக்கியமாக, என்னுடைய பரக்கா வெட்டி நண்பர்கள் குழு இதற்கு மேல் புகைப்படங்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரிவதாலும் இப்பொழுதே இதை எழுதி பகிர்ந்து விட எழுதுகிறேன்! :-)
(எப்படியும் ஓர்நாள் முழுக்க இதற்காக மண்டகப்படி நடக்கும் எனக்கு) :-))

அயராதுப் படித்து, முன்னேறினார்கள் என்று எழுத முயன்றால், மனசாட்சி இவனுகளுக்காகப் பொய் சொல்லாதே, என்னம்மா இப்படிப் பண்ணறியே மா என்று அழுகிறது, எழுதாமல் போனால் ஸ்டார்ட் மியூசிக் என்று இவர்கள் செய்யப் போகும் அலப்பரையை நினைத்தால் இப்பவே கண்ணுக் கட்டுதே!

 நண்பர்களைப் பற்றி எழுத முற்படும் நேரத்தில், இந்த நட்பு அழகாய், கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நீடித்திருப்பதற்கு எனக்கு இரண்டு காரணங்கள் தோன்றுகிறது, ஒன்று பால்யத்தில் இருந்தே தொடங்கிவிட்டதால் ஆண் பெண் என்ற பேதமில்லை, எப்போதும் நாங்கள் தோழியும், தொழனும்தான், இரண்டு நாங்கள் யாரும் செழிப்பானதொரு பின்புலத்தைக் கொண்டிருக்கவில்லை, அவரவர்க்குத் தாண்ட வேண்டிய துயரங்களும் துன்பங்களும் பல இருந்தன, வறுமையைத் தகர்க்க பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு உழைக்க வேண்டி இருந்தது, எந்தச் சூழ்நிலையிலும் இந்த நண்பர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை, பூஜியத்தில் இருந்து எழுந்து, , அரசியலில், தொழிலில், மருத்துவத்தில், குடும்பப் பொறுப்பில், கடல் கடந்த வேலைகளில் எனத்  தன் ராஜ்யத்தை அமைத்துக் கொண்ட நட்பின் குழு இது, இந்த மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் என்று நிலைத்திருக்கட்டும்!

மதியம் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை நொடியில் ஒரு பரிசுப்பொருளில் அச்சிட்டு, மாலையில் எல்லோருக்கும் நினைவுப்பரிசாய், நண்பன் ஒருவன் தந்த ஆச்சரிய நெகிழ்ச்சியில் இனிதாய் நிறைவுற்றது பயணம்! 

 ( எவ்வளவு பீல் பண்ணி எழுதினாலும், ஸ்கூல் லையே ஒழுங்கா படிக்காத சில நல்லவங்களாம் இப்பவா படிச்சுக் கிழிக்கப் போறாங்க அப்படின்னு மைண்ட் வாய்ஸ் சொல்லுது :-) .......... நோ நோ பேட் வோர்ட்ஸ், அப்புறம் நான் ரெண்டு நாள் லீவு எங்கே தேடினாலும் கிடைக்கமாட்டேன்) :-))

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!