Tuesday, 6 January 2015

இறுதியில் விழிக்கும் மனம்!

அந்தச் சவக்குழியில்
அவன் மலரை நிரப்புகிறான்
அவள் கேட்டு அவன்
கொடுக்காமல் விட்ட,
அந்த ஒற்றைப் பூவிற்காக!

நண்பனது இறுதிக் காரியத்தின்
செலவுகளை அவன் செய்கிறான்
வாழும்போது உயிர்காக்கும்
உதவியை மறுத்துவிட்ட மனசாட்சிக்காக!

நடுவீட்டில் படையல் போட்டு
வருந்தி அழைக்கிறான் மகன்
அம்மாவை நினைத்துக் காகத்தை,
வாழும்போது பசிக்க விட்ட வயிற்றுக்காக!

மனைவியின் இறுதி ஊர்வலத்திற்கு
அவன் வந்திருந்தான் - சாம்பல்
ஆகும்வரை நின்றிருந்தான்
வாழ நினைத்து அவள் வருந்தி அழைத்து
வராமல் விட்ட வருடங்களுக்காக!

எழுந்து நிற்கும் தாஜ்மஹாலுக்குப் பின்னும்
குழிகளை நிரப்பும் மலர்களுக்குப் பின்னும்
நிரம்பி வழிகிறது பணம் - 
வாழ்வதற்கும் சாவதற்கும் ஆன இடைவெளியில்
மறைத்துவைத்த அத்தனையும் 
ஒரு பெருங் கருணையாய்ப் பெருகி அவசரமாய்
பாய்கிறது இரு விழிக்குழிகளில் இருந்து
உற்றவரின் சவக்குழிக்குள், மறந்துவிட்ட மனங்களுக்காக!
 

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!