Saturday, 14 February 2015

சமையல் என்பது ஆரோக்கியத்தின் காதல்!



அரிதாய்க் கிடைத்த ஒரு பொழுதில், பதப்படுத்தபட்ட உணவு வகைகள், அதனுடைய ஆபத்து, கலப்படம் பற்றிப் பத்திரிகையில் படிக்க நேர்ந்தது, நெடுநாட்களாக எழுத நினைத்த சமையல், ஆரோக்கியம் பற்றிய சில குறிப்புகள், குடும்பத்தை, ஆரோக்கியத்தை நேசிப்பவர்களுக்காக இங்கே;

 1. ஏழை எளிவர்கள், நடுத்தரக் குடும்ப மக்கள் பெரும்பாலும், சமையலுக்குத் தேவையான இட்லிமாவு, புட்டு மாவு போன்றவைகளை, மசாலாப் பொருட்களை , மிளகாய்த் தூள் உட்பட, தேவைப்படும்போது,மொத்தமாய் அரைத்து வைத்துக் கொள்வது வழக்கம், உண்மையில் பணம் இருப்பவர்கள் கூடச் செய்ய வேண்டிய காரியம் இது, பணம் கூடக் கூடப் பலருக்கு சோம்பலும் கூடுகிறது. சூப்பர் மார்க்கெட் சென்று, கிடைக்கும் மசாலாத் தூள்களை, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை வாங்கி, சமையலை விரைந்து முடிப்பதாக நினைத்து நீங்கள் முடிப்பது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தைத் தான். உடல் உழைப்புக் குறையும்போது உங்கள் ஆரோக்கியமும் கெடும்

 2. ரீபைண்ட் எண்ணெய் என்று நீங்கள் எடுத்துக்கொள்வது மறுபடியும் இயற்கையைச் சிதைத்த ரசாயனக் கலவையைத்தான். கூடுமான வரையில் எண்ணெயை அளவோடு சேர்த்துக் கொள்வது நலம். சுவை விரும்பிகள், சமையல் அறையில், சுத்திகரிக்கப்படாத (அன்-ரீபைண்ட்) கடலெண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகெண்ணெய் என்று மாற்றி மாற்றிச் சமையலில் சேர்த்துக் கொள்வது நலம்.

 3. காய்கறிகள் எதையும் கழுவியபின் நறுக்குதல் நலம், காய்களை நறுக்கியப்பின் கழுவினால் அதனின் சத்துக்கள் வீணாகும். சமைக்கும்போதும் பாத்திரத்தில் மூடி போட்டுச் சமைப்பது, சத்துக்கள் வீணாவதைத் தடுத்து, விரைந்துச் சமையலை முடிக்கவும் உதவும்.

 4. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி, சிறிதளவு மஞ்சளைத் தாளிப்பில், சமையலில் சேர்த்துக்கொள்வது நலம்.

 5. சமைத்த உணவுப் பதார்த்தங்களை ப்ரிட்ஜில் வைத்து அடிக்கடி சூடு செய்து சாப்பிடும் போது, சத்துக்கள் வீணாகி, வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும். புளித்த ஏப்பம், வாயுத் தொந்தரவு ஏற்படும்.

 6. பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில், அதாவது எந்த உணவையும் உட்கொள்ளும் முன்பு எடுத்துக் கொள்வது நல்லது. பழங்களைச் சாப்பிட்டப் பின், திட உணவை நீங்கள் எடுத்துக் கொள்ளக் குறைந்தது அரைமணி நேரமாவது ஆக வேண்டும். உணவை உட்கொண்டப்பின் பழங்களைச் சாப்பிடுகையில் ஜீரணக்கோளாறு உண்டாகும்.

 7. சுவையாய் இருக்கிறது என்று நாம் ஓடும் படோபடமான பிட்சா கடையென்றாலும், சாலையோர பரோட்டா கடை என்றாலும், அவர்கள் அலங்கரித்துத் தருவது வெற்று மைதா குப்பையை மட்டுமே இருள் அகற்றும் ஒளிக்கும், காட்டை அழிக்கும் தீயுக்கும் உள்ள வித்தியாசம்தான் கோதுமைக்கும் மைதாவுக்கும் உள்ள வித்தியாசம். சுவை விரும்பி நோயை நாட வேண்டாமே?

 8. கோக், பெப்சி போன்ற எந்தக் குளிர்பானமும், உறைய வைத்த உணவுகளும், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளவிப்பவையே. வீட்டில் பழங்களை நன்றாகக் கழுவி, பழச்சாறு செய்து பருகுவதோ அல்லது பழமாகவே சாப்பிடுவது உங்கள் பணத்தை மருத்துவச் செலவில் இருந்து பாதுகாக்கும்.

 9. நீங்கள் விரும்புவதை உண்டு, குளிர்பானங்களைப் பருகி, உங்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது ஒரு மிகப்பெரிய கேலிக்கூத்து. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு மிகமுக்கியம். சத்துமாவுக் கஞ்சி முதல் பலவிதமான காய்கறிகள், கீரை வகைகள், கடல் உணவுகள், முட்டை, கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சிப் போன்றவை உங்கள் சமையல் பட்டியலில் இடம் பெறட்டும்.

 10. ஒரே மாதிரி சமைப்பது உங்களுக்கும் அலுத்துவிடும் குழந்தைகளுக்கும் அலுத்துவிடும். நேரமிருப்பவர்கள் சமையல் கலைப்  புத்தங்கங்கள், நம் உறவுகள், நட்புகள் என்று பலரிடம் கேட்டு விதவிதமாய்ச் சமைக்கலாம், அல்லது வார விடுமுறை நாட்களில் செய்யலாம், அது உங்களுக்கு உற்சாகத்தையும் உண்பவர்களுக்கும் ஒரு மாறுதலையும் தரும்.

 11. இப்போதையக் குழந்தைகளுக்கு ஏற்றார் போல், சமைப்பது மட்டுமல்லாமல், அவர்களை ஊக்கபடுத்தும் விதமாக, சமைக்கும்போது ஏதேனும் ஒரு சிறு வேலையில் அவர்களை ஈடுப்படுத்தலாம். வார விடுமுறை நாட்களில் புதிதாய்ச் சமைக்கலாம் அல்லது சிறிது மாற்றம் செய்து புதிய பெயர் வைத்து அழகாய் பரிமாறலாம். உதாரணத்திற்குக் காய்கறிகளைச் சேர்த்துச் செய்த பொரியலை, என் மகன் தள்ளி வைக்க, அரிசி மாவை வறுத்து, இனிப்புப் பூரணம் வைக்காமல், பொரியலில் கொஞ்சம் மாற்றம் செய்து, அதையே பூரணமாக வைத்து, காய்கறிக் கொழுக்கட்டையை அவனை அருகில் இருத்தி அவனுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே, கொழுகட்டையின் பெயரை "டப்ப்ளிங்" என்று பெயர் மாற்றம் செய்து தட்டில் வைக்க, என் செல்ல சுட்டிக்கு அது ஆறும் வரை கூடப் பொறுமையில்லை!

 12. ஆரோக்கியம் என்று வரும்போது குழந்தை முதல் பெரியவர் வரை அடிக்கடி வரும் உடல் உபாதைகள் என்று பார்த்தால், முக்கியமான மூன்று, காய்ச்சல், சளி, வாந்தி மற்றும் பேதி. முதலில் காய்ச்சல், அது ஒரு அறிகுறிதானே தவிர அதுவே ஒரு பிணியல்ல, ஏதோ ஒரு கோளாறு உடலில் ஏற்பட, உடல் தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு உடல் வெப்பத்தை அதிகரிக்க நமக்கு வருவதே காய்ச்சல். அது உடல் சோர்வினால், சளியினால், வயிற்று உபாதையினால், மற்றும் ஏதோ ஒரு நோய்க்கூற்றினால் ஏற்படுகிறது.

13. எப்போதும் சிறந்த மருத்துவரை பார்ப்பது நலம், இருப்பினும் நம்முடைய உபாதைகளுக்கு நம்முடைய உணவு முறையும், ஒய்வு முறையுமே காரணம். தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால், உடல் சோர்வினால் சளிப்  பிடிக்கும், சளிப் பிடிக்கையில் காய்ச்சல் வரும், ஒவ்வாத, ஆரோக்கியமில்லாத உணவு வகைகளை உட்கொள்ளும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்  குறையும், குறைகையில் உடல் தளரும், சிறு தூசுக்கும் காய்ச்சல் வரும்...

14. ஏகப்பட்ட ஆன்ட்டிப் பயோட்டிக் மருந்துகளை உண்பதைத் தவிர்த்தல் நலம். பெரும்பாலான சளி இருமலுக்கு, துளசியும், கர்ப்பூர வள்ளியும், தேனும் பயன் தரும். வயிற்று உபாதை ஏற்பட்டால், நல்ல தயிரை மட்டும் இட்லியில், சாதத்தில் கலந்து, சிறிது கல் உப்பிட்டு சாப்பிடவும். வயிற்று உபாதை நிற்கும் வரை தயிரைத் தவிர வேறு எதையும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நலம், முக்கியமாக, பால், கோதுமை, சர்க்கரை, கீரை, இறைச்சி, மீன் வகைகளைத் தவிர்த்தல் நலம், தயிரே உங்கள் வயிற்றை நலமாக்கும்.

 15. சிறு காயங்களுக்கு, சூட்டுக் கொப்புளங்களுக்கு, சிராய்ப்புகளுக்கு, கற்றாழைச் செடியின் சாறு அல்லது நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சுத்தமான கற்றாழைச் சாறு பயன் அளிக்கும். உங்கள் சமையல் அறையில் இது இருக்கட்டும்.

 16. காலை இரவு பல்துலக்குதல், உப்பு கலந்த சுடுநீரில் வாய் கொப்பளித்தல், கருப்பு மிளகை ஒன்றிரண்டு வாயில் போட்டு மென்று விழுங்குதல் தொண்டையின் ஆரோக்கியத்தைக் காக்கும்.

 17. எத்தனையோ ஆரோக்கியக் குறிப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம், எனினும் எல்லாவற்றிலும் மேலானது, ஆணோ பெண்ணோ யார் சமைத்தாலும், அக்கறை  கொண்டு சமைத்திடுங்கள், சரியான பொருட்களைக் கொண்டு சரியான முறையில் சமைத்திடுங்கள் , சமைக்கையில்,  சமையலில் கொஞ்சம் அன்பையும் சேர்த்தால் உங்கள் உணவு சுவைக்கும், குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படும், உணவே மருந்தாகும்!


வாழ்க வளமுடன்!!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!