Friday, 4 December 2015

வந்தாரை வாழவைத்த சென்னையும், மழையில் முளைத்தவைகளும்!



கடந்து செல்லும் நீரில் இறந்தவர்களைப் புதைக்கவும் முடியாமல், எரிக்கவும் முடியாமல் நீரில் எரிந்து விடும் துயரம் சென்னைக்குப் புதிது, பின்னாளில் இதுதான் எம் முதாதையர்ப் பழக்கம் என்றும் யாரும் சொல்லாமல் இருத்தல் வேண்டும், கங்கையில் பிணங்களை எறியும் பழக்கமும் இப்படித்தான் வந்திருக்குமோ என்று ஒரு விபரீதக் கற்பனைத் தோன்றுகிறது.

மனிதர்கள், கால்நடைகள் என்று பிணங்களைக் கடந்தும், ஒவ்வொரு மனிதனும் சக மனிதனுக்கு இங்கே உதவி செய்கிறான். குளிரில் குழந்தைகள் முதியவர்கள் என்று வீதியில், மண்டபத்தில், பள்ளியில், ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள், ஒருவேளை உணவு, சிறிதளவுக் குடிநீர் எம்மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. யார் கண்ணில் வரும் கண்ணீரும், நிறைந்திருக்கும் நீரை அதிகப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கும் அளவிற்கு வெள்ளம்.

சென்னை, கடலூர் என்று மழையில் பாதித்த இடங்கள் அதிகமே, எனினும் சென்னையைப் பற்றித் தொடர்ந்து பிற நகரத்தில், ஊர்களில் இருந்து வரும் பகடிகளையும் எஞ்சியிருக்கும் நேரத்தில் நாங்களும் படித்துச் சிரிக்கிறோம். தலைக்கு மேலே வெள்ளம் போன பின், கோபத்தையும் வீரத்தையும் உங்களிடம் காட்டி ஆகப்போவதென்ன? அந்த நேரமும் உழைப்பும் யாரோ ஒருவருக்கு உதவி செய்யத் தேவைப்படலாம்!

பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து அதிகசம்பளம்
பெறுகிறார்கள் என்று பொருமியவர்கள் / சொன்னவர்கள் எல்லாம் சற்று வாருங்கள், இந்தப் பன்னாட்டு ஊழியர்களும் தெருவில் தான் இருக்கிறார்கள், கிடைக்கும் இடத்தில் மீட்புப் பணிகளோடு அலுவலக வேலையையும் எப்படியோ முடிந்தவரைத் தொடர்கிறார்கள். என் சாதி என்று விழா எடுத்துக் கொண்டாடியவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறீர்கள், உயிர் போகும் தருவாயில், எந்தக் கையையும் மக்கள் பற்றிக் கொள்கிறார்கள்

வேலைகளின் குவியலில் மீட்புப் பணிகளின் அழைப்புக்களில் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறோம், லெமுரியா கண்டம் போல் சென்னை மூழ்கிப்போகுமோ என்ற உங்களின் அச்சத்தை “நாசா” தந்த ஆய்வறிக்கை என்று எங்களுக்குப் பீதியைக் கிளப்பாமல், நெருங்கியவர் , அறிந்தவர் என்று முடிந்தால் உதவிகள் செய்யுங்கள், இல்லை அமைதியாய் இந்த நிலை மாறப் பிரார்த்தனை செய்யுங்கள் .

உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர், அதிகாரத்திலோ, ஆட்சியிலோ, அரசியலிலோ இருந்தால் கொஞ்சம் அவர்களை மனிதராய் மாறச் சொல்லும் ஓர் உதவிப்  போதும், பாலுக்காய் அழும் பிள்ளைகளையும், தண்ணீரில் செல்லும் சடலங்களையும் அவர்களைக் கொஞ்சம் பார்க்க செய்தால் போதும், இந்த நேரத்தில் கூட எரிகிற வீட்டில் பிடுங்கும் வரையில் லாபம் என்ற ரீதியில் விலைகளைப் பலமடங்கு விற்கும் வியாபாரிகளாய் அவர்களை ஒருபோதும் மாறாமல் இருந்தால் போதும்!

வேதனையில் எங்களுக்கு, எந்தப் பொய்/அவதூறு வழக்கு
வழக்கும் பற்றிய அச்சமின்றி , ஆள்பவர்களைக் கேள்விக் கேட்க இன்று வந்த எங்கள் வீரத்தைக்  கொஞ்சம், வரும் தலைமுறையினருக்குக்  கடத்திவிட்டுச்  செல்கிறோமோ இல்லையோ தெரியாது, எனினும் மனிதர்களுக்குப் பிற உயிர்களுக்குக் கருணை காட்டும் காருண்யம் இருக்க வேண்டும் என்பதை இப்பிள்ளைகள் உணர்ந்து கொள்ளும் ஒரு சிறு செயலை உதவியென்று ஒருவருக்கொருவர் செய்கிறோம்

குளிரில் நடுங்கும் ஓர் இளைஞன், தான் போட்டிருந்த மேலாடையைக் கழற்றி யாரோ ஒரு குழந்தைக்குப் போர்த்துகிறான் , காலில் ஈரத்தில் காலையில் இருந்து இரவு வரை ஓடிய ஓட்டத்தில் ஒருவனுக்குத் தோல் நெகிழ்ந்து உரிந்து ரத்தம் வடிகிறது, இருந்தும் ஓடுகிறான், உணவு, உடை , மீட்புப் பணி, பிரார்த்தனை என்று ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச்  செய்து கொண்டேயிருக்கிறார்கள், சென்னையில் இருந்தும் வெளியூரில் இருந்தும்! 

இந்த மழை உயிர்களைக் கொன்றது, வீதியில் கொண்டு வந்து நிறுத்தியது, இருப்பினும் மனிதத்தை உயிர்பித்திருக்கிறது, நம் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது, அதன் நீர்நிலைகளைக் குறித்துவைத்துச் சென்றிருக்கிறது, கட்சிகளின் ஆட்சியின் அவலத்தை, அதிகாரத்தின் முகத்தைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறது, பலகீனமான பாலங்களைச் சாலைகளை இப்போதே அகற்றியிருக்கிறது, இந்த மழை ஒருவேளை என் உயிரை எடுத்துச் சென்றாலும், மன்னித்துக்கொள்ளுங்கள் இந்த மழையை நான் போற்றுகிறேன்! 

சென்னை என்பது சொந்த மண்ணைச் சேர்ந்தவர்களை மட்டுமல்ல எல்லா ஊர்களில் இருந்தும் வந்தவர்களைப் பிள்ளைகளாகப் பாவித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் தலைநகரம்! இது வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உங்களுக்கு வரலாற்றில் பாடம் கிடைக்கும், வீழ்ந்து எழும்போது இன்னமும் சிறந்த மனிதர்களாய் எழுந்திருப்போம், நாளைப்பொழுது எப்படிப் புலர்ந்தாலும், நாளைப்பொழுது உண்டு என்ற நம்பிக்கையில் சென்னை!

இயற்கையைப் போற்றுதும்!


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!