Monday 21 December 2015

வெள்ள மீட்புக் கரங்கள் 'தண்ணீரில்' மூழ்கியோரை காக்குமா?

தினமும் செய்தித்தாளை படிக்கும்போது மதுவால் மடிந்த ஏதோ ஒரு குடும்பத்தின் துயரம் கண் முன் நிற்கிறது. என்னை எந்த வேலையும் செய்யவிடாமல், ஒரு செய்தி என்னைப் பிடித்து உலுக்கியது. திரும்பத் திரும்ப அந்தச் செய்தியோடு சம்பந்தப்பட்டவர்களின் நிலையை நினைத்ததும் நான் உணர்வற்றுப் போனேன். என்னை இப்படி பித்த நிலைக்கு கொண்டுவந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
குடித்துக் குடித்துச் சீரழியும் ஒருவரைக் கணவனாக வாய்க்கப்பெற்ற பெண், தன்னுடைய ஏழு, ஐந்து மற்றும் மூன்று வயது மகள்களைக் காப்பாற்றும் பொருட்டு, அக்கம்பக்கம் வீட்டு வேலைகளைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பற்றி வந்தார். ஆனால், அவரை சந்தேகப்பட்ட கணவர், மதுவில் மயங்கி வாய்ச்சண்டை போட்டார். வாய்ச்சண்டை முற்றிப் போக, கத்தியால் குத்தி கொலை செய்தவர் தன் நிலை உணர்ந்ததும் தலைமறைவாகிவிட்டார். அம்மாவை இழந்த அந்த மூன்று குழந்தைகளும், அம்மாவுக்காக ஏங்கி அனாதைகளாகி கதறி அழுதது பரிதாபத்துக்குரியது.
குடித்துவிட்டு சீரழிபவர், மனைவியையும் கொன்று, பிள்ளைகளையும் அனாதையாக்கும் நிலையை என்னவென்று சொல்வீர்கள்? ஆண் குடிப்பதே பெண்ணால்தான் என்று சொல்வீர்களா?!
வன்கொடுமை என்றாலும், கொலை என்றாலும், தற்கொலை என்றாலும், இவை எல்லாவற்றுக்கும் பின் இரண்டே காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று குடி, மற்றொன்று பெண்.
மேலைநாடுகளில் குடிப்பது தட்ப வெப்ப நிலையை எதிர்கொள்ள அவர்கள் கையாளும் நிலை. அங்கே பொது இடங்களில் குடிப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பதில்லை. அந்த நாடுகளும் அவர்கள் இதுபோன்ற தவறுகளைச் செய்தால் அதற்குக் குடியைக் காரணம் காட்டி அவர்களை விடுவதும் இல்லை. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக குற்றம் செய்தவரை விட்டுவிட்டு அவர்கள் மற்றவர்களைச் சாடுவதும் இல்லை.
இங்கே என்ன நடக்கிறது? படித்தவர், படிக்காதவர் என்ற எந்த வித்தியாசமுமின்றி குடித்துவிட்டுச் சாலையில் அலங்கோலமாக விழுந்துகிடப்பவர்களைக் காண முடிகிறது. குடித்துவிட்டு, தான் பேச நினைத்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் குடியின் பின்னே மறைந்து கொண்டு பேசுவதும், தணித்துக் கொள்ள நினைத்த வேட்கையையும் வெறியையும் அதையே காரணமாக்கி, தீர்த்துக் கொள்வதும்தான் நிகழ்கிறது. குடித்துவிட்டு வண்டியை ஓட்டி உயிர்களை கொல்வதும் இவர்கள்தான்.
குடியில் இருப்பவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன். சாலையில் ஒருவர் ஒருநாள் அவருக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பேசிக் கொண்டு இருந்தார். யார் யாரோ அவரை என்ன சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஒருவர் வந்து ஓங்கி ஓர் அறைகொடுக்க, குடிகாரர் அதற்குப் பிறகு பேசிக் கொண்டு அந்த இடத்தில் நிற்கவில்லை. நிச்சயம் அவர்தான் வாங்கிய அடியை அவர் வீட்டில் உள்ள மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ பரிசளித்திருப்பார். அந்தக் குடியிலும் அவருக்கு வீடு எது என்று தெரிகிறது. அவருடைய மனைவி, பிள்ளைகள் என்று யார் மீது வன்முறையைச் செலுத்த வேண்டும் என்ற தெளிவும் இருக்கிறது. இவர்களை எப்படிக் குடியின் ஆதிக்கத்தில் ஒன்றுமே தெரியாமல் தவறு செய்பவர்கள் என்று சொல்ல முடியும்?
மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் பெண்கள் உடையணிந்தால் தவறு என்று பொங்கி, லெக்கின்ஸ் என்ற உடைக்காகப் பெண்களைப் படம்பிடித்து விமர்சிப்பவர்கள், ஏன் டாஸ்மாக் கடை வாசலில் ஆடை விலகி விழுந்து கிடப்பவரைப் படம் பிடித்து ஆடை கலாச்சாரம் பற்றி அல்லது குறைந்தபட்சம் குடியின் விளைவுகளைப் பற்றி பேச முயற்சிப்பதில்லை? நாளை ஒருவேளை நீங்களும் அப்படி விழுந்திருக்கும் நிலை வரக்கூடும் என்ற பயம்தான் காரணமா?
காதல் தோல்வி என்றால் குடி, வேலை கிடைக்கவில்லை என்றால் குடி, விரக்தி என்றால் குடி, சந்தோஷம் என்றால் குடி, குறிப்பிட்ட இலக்கை எட்டினால் குடி, ஊதிய உயர்வு என்றால் குடி, சுற்றுலா என்றால் குடி, சம்பளம் போட்ட முதல் நாள் என்றால் குடி, சனிக்கிழமை இரவு என்றால் குடி, திருமணம் என்றால் குடி, பிறந்த நாள் என்றால் குடி, இப்படியேதான் திரைப்படங்களும் திரை நாயகர்களைக் காட்டுகிறது.
எல்லாவற்றுக்கும் குடியை நாடும் இத்தனை பலவீனமான மனதைக் கொண்ட கதாநாயகர்கள்தான் தன்னை விட வலுவான வில்லனைப் புரட்டி புரட்டி எடுக்கிறார்கள்... திரையில் சேவை செய்கிறார்கள். தங்கள் காதலிகளைப் பற்றிக் காதலைப் பற்றி கசியவிடக்கூடிய பாடல்கள் எழுதுகிறார்கள். குடித்து, புகைத்து அதை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தவர்கள்தாம் பின்னாளில் தலைவர்கள் என்று சாதாரண ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். எந்த ரசிகனுக்கும் 'குடிக்காதீர்கள்.. புகைக்காதீர்கள்' என்று முன்னணி நடிகர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதாக இதுவரை நான் கேள்விப்படவேயில்லை.
இன்னும் சொல்லப்போனால், சில நடிகர்கள் ''நான் திரையில் மட்டுமே புகை பிடிக்கிறேன். நிஜ வாழ்வில் புகைப்பிடிப்பதில்லை. வேண்டுமானால், நீங்கள் நிஜ வாழ்வில் உள்ள என் கேரக்டரைப் பின்பற்றுங்கள்'' என்று புகைப்பிடிப்பது குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறார்கள்.
'தலைவா தலைவா' என்று விளம்பர பதாகைகளுக்குப் பால் ஊற்றுபவர்கள் வீட்டில் பசியோடிருக்கும் தன் பிள்ளைகளுக்குப் பால் வேண்டுமே என்று நினைக்கிறார்களா?
பெண்களைத் தாறுமாறாய் எழுதும் எவரும் தன் வீட்டில் பெண் உறவுகள் இருக்கிறார்கள், அவர்களையும் சேர்த்தே இழிவு படுத்துக்கிறோம் என்று நினைக்கிறார்களா?
உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், ஆண்கள் உலகம் பெண்களைச் சார்ந்தே இயங்குகிறது. ஆனால், அத்தகைய பெண்களை இழிவுபடுத்தியே பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனவக்கிரங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதற்கு குடியென்ற ஒன்றை, துணைக்கு அழைக்கிறார்கள். இறுதியில் தன்னையும் அழித்துக் கொண்டு குடும்பத்தையும் அழிக்கிறார்கள்.
அரசாங்கம் மூடுகிறதோ இல்லையோ குடிமகன்கள் தான் குடிக்கக் கூடாது. தம் பிள்ளைகளை அனாதையாக்கி சமூகத்தில் அவர்களை நிராதரவாய் விடக்கூடாது என்று நினைத்தால் மட்டுமே விடியல் சாத்தியம்.
அதுவரை தினம் தினம் அப்பாவை, அம்மாவை இழந்துத் தவிக்கும் பிள்ளைகள் பெருக்கிக்கொண்டேதான் இருப்பார்கள், அவர்கள் அனைவருக்கும் அம்மாவாய், அப்பாவாய் மாற, அரவணைத்துக்கொள்ள இங்கே அத்தனை தாயுள்ளத்தோடும் கருணையோடும் எந்த அரசியல் தலைமையும், அமைச்சர்களும் இல்லை.
ஆனால், எனக்கு இப்போது ஒரு நம்பிக்கை முளைத்துள்ளது.
மழை - வெள்ளத்தில் நமக்கு நாமே உதவி செய்துகொண்டதைப் போல, இதற்கும் ஒவ்வொரு குடிமகனும் மனதுவைத்து களம் இறங்கினால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும்.
மக்களைக் காக்க வெள்ளத்தில் நீண்ட உதவிக்கரங்கள், நம் குடிமக்களைக் காக்க 'தண்ணீரில்' தத்தளிப்போரை மீட்க நீளூமா?

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article8004498.ece#comments

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!