Wednesday, 23 December 2015

உயிர்கள் இலவசம்


தடை செய்த மருந்துகளை
 எளிய உயிர்களிடம்
 தாராளமாய் விற்கலாம்
தொழிற்சாலைகளை மூடி
 கட்ட மறுத்த வரிப் பணத்தோடு
 நாடு திரும்பலாம்

 அணுவுலைகளை அமைத்து
 மனிதர்களை வீதியில் நிறுத்தி
 மாளிகையில் நிம்மதியாய் உறங்கலாம்
 நடுஇரவில் வெள்ளக்காட்டை உருவாக்கி
 பிணங்களை மிதக்க விடலாம்
 அதை உயரே இருந்தும் பார்த்து ரசிக்கலாம்

 வீதியெங்கும் சாராயக்கடைகளை
 திறந்து வைத்து
 குடிமகன்கள் நலம் காக்கலாம்
போராடும் பிள்ளைகளைப்
போட்டுத் நசுக்கலாம்

 போர்க்கொடிப் பிடிப்பவர்களின் பையில் 
 கஞ்சா  நிரப்பலாம்
 போர்ப்பரணிப்  பாடுபவனை
 குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்

ஓங்கும் குரல்வளைகளின் கழுத்துக்களை
குண்டர்களின் கையில் கொடுத்துவிடலாம்
ஒன்றுக்கூடினால் தடியடிக் கொண்டு
மண்டைகளை உடைக்கலாம்
ஒற்றுமை ஓங்கினால்
சாதி மதக் கலவரங்களில் கொன்று விடலாம்

மன வக்கிரங்களை நியாயப்படுத்தி
இசையில் வடிக்கலாம்
 அதற்கு விருதும் வழங்கலாம்

 ஆழ்துளைக்  கிணறுகளில்
 பூமியின் வளம் உறிஞ்சலாம்
 நீர்வற்றிச் சாகும்போதும்
நிவாரணம் தரலாம்

 நிலங்களை மலடாக்க
நஞ்சை விதைக்கலாம்
 உயிர் கொள்ளும் பானங்களுக்கு
 நீரையும் தாரை வார்க்கலாம்

 புதை மணலில் கூட
 வீடு கட்டப் பட்டா வழங்கலாம்
 பின் புதைந்துப் போன வீட்டுக்கும்
 வரி கேட்டு கழுத்தை நெரிக்கலாம்

 நீண்டுக்கொண்டே போகும் இந்த
 பட்டியலில் நீங்கள் உங்கள்
குரூரத்தை நிரப்பிக் கொள்ளலாம்
இங்கே உயிர்கள் இலவசம்
எங்களிடம் ஆடும்  மரண விளையாட்டை
நீங்கள் விரும்பும்வரைத்
தொடரலாம்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!