Monday, 14 December 2015

மலர்ப்பலிகள்


ஆந்திராவில் மூன்று வயது குழந்தை மின்தூக்கியில் (லிப்ட்) மாட்டிக் கொண்டு இறந்து விட்டது. இப்போது மிக முக்கியக் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 
ஏன் மின்தூக்கியை இயக்கும் ஊழியர் இல்லை?
வேறு யாரும் ஏன் உடன் இல்லை, ஏன் கேமரா இல்லை?
மழலையர் பள்ளிகளுக்கு மின்தூக்கி அவசியமா?
இந்தக் கேள்விகளை எழுப்ப ஓர் உயிர் போயிருக்கிறது. 

டெங்கு காய்ச்சலில் சில குழந்தைகள் பலியானப்பின்னரே சில பள்ளிகள் கொசுக்களை ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டது. மிகுந்த பணம் பறிக்கும் பள்ளி அது, இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலில் இறந்த பிறகு, ஏன் இப்படி என்ற கேள்விக்குப் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களைக் கொசு மருந்து வாங்கித்தரச் சொல்லி இருக்கிறது! 

குழந்தைகளைப் பள்ளிக்கு படிக்க அனுப்பும்போது அவர்களுக்கு இவையெல்லாம் நாம் சொல்லி கொடுக்க வேண்டி இருக்கிறது; 

 1. குட் டச் பேட் டச் என மற்றவர்கள் குழந்தையின் உடலில் எந்தப் பாகங்களில் தொடலாம் தொடக்கக் கூடாது என்று,
 2. வெள்ளித் தங்கம் என்று எதுவும் வேண்டாம், அது உனக்கு ஆபத்தாய் முடியலாம் என்று,
 3. பள்ளி விட்டவுடன் வீட்டில் இருந்து அம்மாவோ, அப்பாவோ, உறவினரோ வரும்வரை வேறு யாரும் அழைத்தாலும் போகக்கூடாது என்று,
 4. விளையாடும்போது ஒருவரை ஒருவர் தள்ளிவிடக் கூடாது, அடிபட்டுவிடும் என்று,
 5. நீச்சல் குளத்தில் விளையாடும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை என்று,
 6. ஆசிரியரை எதிர்த்துப் பேச வேண்டாம், அமைதியாய் இரு, பெற்றவர்களிடம் சொல் என்று...

பள்ளிகளே இன்னமும் எத்தனை சொல்ல வேண்டும் எங்கள் பிள்ளைகளுக்கு? 
சொல்லாமல் விட்டதும் இருக்கிறது. பெற்றவர்களின் இயலாமையில் இரண்டு வயதிலேயே உங்களைப் பள்ளிக்குத் துரத்துவோம் அல்லது புறாக்கூண்டு போன்ற கட்டிடங்களில் பள்ளி என்று சேர்ப்போம். அங்கே உங்களுக்குத் தீ விபத்து ஏற்பட்டால், யாரேனும் வெடிகுண்டு வைத்துவிட்டால், புதியதாய் உன் பள்ளியின் மின்தூக்கியில்... பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கும் முடியாது எங்களுக்கும் தெரியாது!

 ஒன்றாம் வகுப்பில் படித்த என் மகன், வீட்டுப் பாடங்களை எழுதுவதில்லை, வகுப்பில் பாடங்களையும் எழுதுவதில்லை, இரண்டையும் எழுத வையுங்கள் என்று ஆசிரியை எனக்குக் கடிதம் அனுப்பினார். என்னவென்று சொல்லுங்கள் வீட்டுப்பாடங்களை எழுத வைக்கிறேன். வகுப்பில் எழுத வேண்டியதை நீங்கள்தான் எழுதவைக்க வேண்டும் என்று பதில் கடிதம் எழுதினேன். வந்து சந்திக்குமாறு அழைப்பு வந்தது. சில பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு நான் என்ன செய்வது ஒரு வகுப்பில் ஐம்பது பிள்ளைகள் என்று சொல்லிய அவரின் நிலைப் பரிதாபமாய் இருந்தது. பள்ளிகளில் இதுபோன்று ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களைத் திணித்தால் குழந்தைகளின் மீது அக்கறையும் கவனமும் எப்படி வரும்? நாமும் பெரிய பள்ளிகள் என்ற மாயையில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்! 
   
பணம் பறிக்கும், விளையாட்டை மறுக்கும், பெற்றவர்களை அடிமைப்போல் நடத்தும், பிள்ளைகளை எந்திரங்களாக நினைத்து அடக்கும் பள்ளிகளைப் பெரிய பள்ளிகள் என்று கொண்டாடுகிறோம். அங்கீகாரமே இல்லாத பள்ளிகளைக் கூட மிகப்பெரும் பின்புலம் கொண்ட முதலாளிகளின் கவர்ச்சி விளம்பரங்களில், பள்ளிக்கூடத்தில் திரைப்பட நடிகை நடிகையரின் பங்கேற்பு எனும் கவர்ச்சியில் பிள்ளைகளைக் கொண்டு போய்த் திணிக்கிறோம். சிறிய பள்ளிகள் என்றாலும் அங்கும் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை!

கல்வி ஏன் இன்னும் தனியார் வசம்? அரசாங்கப் பள்ளிகளில் சாதிப் பாகுபாடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்  பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. எந்த அரசியல்வாதியின் குழந்தைகளும், அமைச்சர்களின் குழந்தைகளும் அரசாங்கப் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளில் அரசவையில் இருக்கும் அமைச்சர்களே நம்பிக்கைக் கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காத போது பெரும்பாலான மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?

 தமிழ்த் தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் ஊட்டி கான்வென்ட்டில் அல்லது அவர்களின் பிரத்தியேகப் பெரும் பள்ளிகளில்!
 அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசாங்கப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள். மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் உண்டு, ஆனால் அங்கே சாமானியனின் பாமரனின் குழந்தைகளுக்கு இடமில்லை.

 இரண்டாயிரம் கோடிகளுக்கு மேல் சாமானியர்கள் டாஸ்மாக்கில் கொட்டுகிறார்கள். அந்தப் பாவத்தில் விளைந்த வருமானதிற்கு ஈடாய் நீங்கள் இலவசக் கல்வியை எந்தப் பேதமுமின்றி எல்லோருக்கும் ஈந்தால் என்ன?

நாம் கடந்த சில நிகழ்வுகள்:
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டுத் தொண்ணூற்று நான்கு இளந்தளிர்கள் உயிரோடு எரிந்துக் கருகினர் கும்பகோணத்தில். பள்ளிகளில் இப்போது தீப்பிடித்தால் அவசரக் கால வழி என்று ஏதும் உள்ளதா? நெருப்பை அணைக்கச் சாதனங்கள் எல்லாப் பள்ளிகளிலும் உள்ளதா, அவை இயங்கும் நிலையில் உள்ளதா? கடைசியாய் அதிகாரிகளே நீங்கள் எப்போது சோதனைச் செய்தீர்கள்?

 அடுத்து மூன்று வருடங்களுக்குப் பின்பு ஒரு குழந்தை, பள்ளி வாகனத்தின் ஓட்டையில் இருந்து விழுந்து இறந்தது? கடைசியாய் நீங்கள் சோதனைச் செய்தது எப்போது? மழையில் அரசாங்கப் பேருந்தில் ஓட்டுனர் குடைப்பிடித்து வண்டி ஓட்டுகிறார், உங்கள் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு நீங்கள் இப்பள்ளிகளை எப்படிக் கேள்விக் கேட்பீர்கள்?

 பள்ளி நீச்சல் குளத்தில் குழந்தை இறந்தது. நீங்கள் கடைசியாய் ஆய்வு செய்தது எப்போது? ஐந்தாயிரத்துக்கு மேல் பிள்ளைகள் இருக்கும் பள்ளியில், ஒரு சேர முப்பது குழந்தைகள் நீச்சல் குளத்தில் இறங்கும் பள்ளியில் எத்தனை நீச்சல் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்?

 பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, கத்திகுத்து, சாதிப்பாகுபாடு... வரிசையாய் நீள்கிறது பட்டியல் உங்களைக் கேட்க எங்களை நாங்களே கேட்டுக்கொள்ள!

 இதற்காகப் போராளி ஒருவன் முளைத்தால் அவனை முடக்கப் பல்வேறு ஆயுதங்கள் உண்டு இங்கே! 

 தனியார் முதலாளிகள், ஆசிரியப் பெருந்தகைகள், பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்று யாருடைய ரௌடிகள் என்றும் யாருடைய ஆணவத்தாலும் அலட்சியத்தாலும், எந்த உயிர் போனாலும் உங்களின் எந்த நிவராணமும் அந்த மழலைகளின் உயிர்களைத் திருப்பித் தாராது!

 ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்காகவும் உங்கள் மனசாட்சியை விற்று நீங்கள் போடும் கையெழுத்தும், வெறும் பள்ளிகளையும் கட்டிடங்களையும் பாலங்களையும் அசைக்கவில்லை பல்லாயிரக்கனக்கான உயிர்களை அசைக்கிறது. அந்த ரூபாய்த் தாள்களை உற்றுப் பாருங்கள் ஏதோ ஓர் உதிர்ந்த மழலையின் கடைசிச் சிரிப்புத் தெரியும்.

போதும்! உங்கள் அலட்சிய ஓட்டைகளைச் சுட்டிக் காட்ட இன்னமும் வேண்டுமா உங்களுக்கு 
ரத்தம் ஒழுகும் மலர்ப்பலிகள்?

http://www.pratilipi.com/read?id=5766040617222144
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!