Thursday, 20 April 2017

கொண்டாடுங்கள்!

சிவப்புச் சிக்னலில் நிற்க வேண்டிய
சில நொடிகளைக் கூட வீணடிக்காமல்
மக்கள் விரைகிறார்கள்
மதி மந்திரிகளும் உடன் வலது இடது கைகளும்
போக்குவரத்தில் கலக்காமல் பறக்கிறார்கள்

பிரதமர் அவர்கள் உலகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்
பிரதமரும் மந்திரிகளும் புதிதுப்புதிதாய்த் திட்டங்களை அறிவித்துக்கொண்டு மட்டுமே வாழ்கிறார்கள்

நூறு ரூபாய் சம்பாதித்து எண்பது ரூபாய் செலவழித்து
இருபது ரூபாய் சேர்த்தவர்கள்,
டிஜிட்டல் இந்தியாவில் செலவுக்கும் சேர்த்து
பிளாஸ்டிக் அட்டைக் கம்பெனிகளுக்குக்
கப்பம் காட்டுகிறார்கள்

தடுக்கி விழுந்தால் கூடத் தெருவெங்கும்
பன்மதச் சின்னங்கள் - ஆலயங்கள்
மக்கள் நாள்தோறும் கூடுகிறார்கள்
அத்தனை கடவுளர்கள் இருந்தும்
சாமியார்கள் இருந்தும்
சாதி மதக் குற்றங்களில் சாகிறார்கள் மனிதர்கள்

பள்ளிக்குச் செல்லும் வயதில்
பணிக்கு விரைகிறார்கள் பிள்ளைகள்
எத்தனை குடிகள் அழிந்தாலும்
டாஸ்மாக் குடி அழியாமல்
பார்த்துக்கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்

எத்தனை வரிகள் கட்டினாலும்
தேய்த்துக்கொண்டே போகிறது வாழ்வாதாரங்கள்
என்ன ஆடை அணிந்தாலும்,
எங்கே இருந்தாலும்
புணரப்பட்டுச் செத்துக்கொண்டே இருக்கிறார்கள் வயதுவித்தியாசமில்லாமல் இந்தப்பெண்கள்

அதானிகளும் அம்பானிகளும்
வளர்ந்துக்கொண்டே இருந்தாலும்
தேய்ந்து கொண்டேயிருக்கிறார்கள் விவசாயிகள்
சுத்தத்திற்குத் திட்டம் என்று பிரதமர் சொல்லியும்
இன்னமும் கழிவறை இல்லாமல்
வறண்ட ஏரிப்பக்கம் ஒதுங்குகிறார்கள்
கொழுப்பெடுத்த ஏழை மக்கள்

சுவிஸ் வங்கி இந்தியர்களின் பணத்தைச்
சேர்ந்துக்கொண்டே இருக்க,
நான்காயிரம் ரூபாய்க்கு
ஓட்டுக்களை விற்கிறார்கள் இந்தியர்கள்
இந்த மக்களின் மந்திரிகளின் அயராத உழைப்பில்
இந்தியா வல்லரசாகி பலகாலம் ஆகிறது,
கொண்டாடுங்கள்!

Wednesday, 12 April 2017

வருங்கால தேசத்தை போராட்டங்களில் மட்டுமே காப்பாற்ற முடியும்

ஒன்று நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகம் அழிய வேண்டும் என்று நினைக்கிறது போலும் மத்திய அரசு, அணுவுலைகள் ஆரம்பித்து, தங்களுக்கு வேண்டாம் என்று பிற மாநிலங்கள் சொன்ன அத்தனை திட்டத்தையும் தமிழகத்தில் திணிக்கிறது!

மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களே பெரும்பான்மை, தனியாரில் இருந்து அரசு எந்திரம் வரை மக்களின் மொழி மற்றும் மாநில உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து ஒன்றுப்பட்டு நின்று மாநிலத்தை பாதுகாத்துக்கொள்கிறது!

தமிழகத்தில் நிலைமை தலைகீழ், அரசு எந்திரங்களில், அதிகாரங்களில் சிறிது சிறிதாக மற்ற மாநிலத்தவர் புகுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள், ஆள்பவர்களுக்கு அவர்களின் பதவியையும் சொத்துக்களையும் காப்பாற்றவே கவலை, செய்த ஊழல்கள் அவர்களை மிரட்டி வைத்திருக்கிறது, அல்லது அழிவுக்காக பேசப்பட்ட பேரம் கண்ணை மறைக்கிறது! 

"எது எப்படி இருந்தாலும் தமிழகத்திலிருந்து நியூட்ரினோ திட்டத்தை மாற்றும் எண்ணமேயில்லை அதை செயல்படுத்தியே தீருவோம்" என்று அத்தனை அழுத்தமாக சொல்லும் மத்திய அரசு, வேறு எந்த மாநிலத்தை நோக்கியாவது இப்படிச் சொல்ல முடியுமா? குறைந்தபட்சம் "காவிரி ஆணையத்தை அமைத்தே தீருவோம், கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் தந்தே ஆகவேண்டும் என்று தன் சுட்டுவிரலை நீட்டமுடியுமா? " தமிழகத்தில் மட்டும்தான் குள்ளநரிகள் ஆட்டம் போடும், இங்கே ஆடுகள் சிதறிக்கிடக்கின்றன, ஆடுகளுக்கு காவலாக ஓநாய்கள் ஆட்சி செய்கிறது! தண்ணீர் இல்லையென்றால் தரமாட்டோம், விவசாயம் அழிந்தால் என்ன வளங்களை உறிஞ்சிக்கொள்வோம் என்ற ரீதியில் தமிழகம் நடத்தப்படுகிறது!

இங்கே மக்கள் போராடினால் காவல்துறையும் அதை தனிப்பட்ட போராட்டமாகவே காண்கிறது, இந்த மாநில மண்ணைக் காப்பாற்றும் போராட்டம் எல்லோருக்குமானது என்று அதிகார மையமும் மக்களும் உணர்வதில்லை, மண்ணிற்கான போராட்டங்களில் கூட சாதியம் புகுந்தப்பட்டு மக்களைப்பிரிக்க மத்திய மத அரசு காய் நகர்த்துகிறது! சிதறிக்கிடக்கும் மக்களை ஒன்றுதிரட்டவே இங்கு போராட வேண்டிய நிலைதான்! ஒருவேளை இந்தப்போராட்டங்களில் தமிழக மக்கள் தோற்றுப்போனால் தமிழகம் முழுமையான அடிமை தேசமாக மாறிவிடும்!
மீண்டும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் சிக்கியது போல், மத்தியத்தின் மதவாத ஆட்சியில் காலனியாக தமிழகம் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு, சுதந்திரத்திற்கு முன்பான அத்தனை கொடுமைகளும் மீண்டும் நிகழலாம்!

கல்வியும் வெளிச்சமும் மக்களின் அவசியத்தேவை, எந்தக்கட்சி சாதியப்பாகுபாடுகளுக்கு அவசியமின்றி, அனைவருக்கும் "தரமான கல்வி" "இலவசம்" என்று சொல்லி செயல்படுத்துகிறதோ, அந்தக்கட்சி மட்டுமே தமிழக மக்களுக்கு அறிவு வெளிச்சம் தரமுடியும், அந்த வெளிச்சம் பட்டித்தொட்டி முதல் பாய்ந்து விட்டால், அதன்பிறகு "பகுத்தறியும்" பண்பை மக்கள் பெற்றுவிடுவார்கள்!

ஆனால் இங்கே பயணம் அதைநோக்கியதாக இல்லை! எதையெதையோ புறக்கணிக்கும் மக்களுக்கு சாராயத்தை புறக்கணிக்க முடிவதில்லை, ஒன்றில் ஊறிப்போனபின் விட்டுவிடுதல் கடினம் என்று மக்கள் நினைப்பதுபோல, ஆட்சியாளர்களும் ஊழலில் ஊறிப்போய் கிடக்கிறார்கள்!
கடுமையான சட்டங்களில் முதலில் நம் தேசம் துபாயைப் போல் மாறி, பின் படிப்படியாக சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட ஜப்பானிய மக்களின் தேசமாக மாற வேண்டும்! அந்த நாளை படிப்படியான போராட்டங்களால் என்றாவது ஒரு தலைமுறை காண நேரிடும், அதுவரை இந்த மாநிலத்தை, வருங்கால தேசத்தை போராட்டங்களில் மட்டுமே காப்பாற்ற முடியும்!
#கூடங்குளம் #கெயில் #நியூட்ரினோ #ஹைட்ரோகார்பன் #மீத்தேன் #காவிரி #முல்லைப்பெரியாறு

கீச்சுக்கள்

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் சிறுவாடுகளைச் சுரண்டிய அரசு, இப்போது ஆர் கே நகரில் கோடிகளில் கொட்டப்படும் புது ரூபாய் தாள்களுக்கு எந்தக் கணக்கு வைத்திருக்கிறது? சேர்த்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க அளவும், அதற்கு வரிகளும் விதிகளும் விதித்த வங்கிகளில் எந்த வங்கியில் இருந்து இவர்களுக்கு மட்டும் இத்தனை கோடி நோட்டுக்கள்? நாசிக்கில் இருந்து நேராகவே வந்துவிட்டதோ? இதைப் பற்றியெல்லாம் கைநீட்டிப் பிச்சை வாங்கும் மக்களுக்கும் கவலையில்லை, ஊழல் பணத்தைக் கொட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கவலையில்லை, வரிகளைக் கொட்டிக்கொடுத்துவிட்டு இன்னமும் நல்லது நடக்கும் என்று நம்பி இதே ஓட்டை தேசத்தில் விழிபிதுங்கி நிற்கும் மக்களுக்குத்தான் அத்தனை கவலையும்!
#RKNagar #Election2017 #Tamilnadu

இந்தியாவில் இருக்கும் தண்ணீரை எடுத்து சுத்திகரித்து இந்தியர்களுக்கே விற்கும் அமெரிக்க நிறுவனங்கள், மக்களுக்கு சுத்தமான நீரைக்கூட கொடுக்க முடியாத கையாலாகாத அரசு, குடிக்கும் தண்ணீரை எடுத்துப்போகாமல் தண்ணீர் பாட்டில் வாங்கி பிளாஸ்டிக் கழிவுகளை சேர்க்கும் மக்கள், தண்ணீரை காசாக்கும் திருடர்கள், தண்ணீரில் முதலீடு செய்திருக்கும் பண முதலைகள், காடழித்துக் கொண்டிருக்கும் சாமியார்கள், எல்லாவற்றிலும் பயனடையும் அரசியல்வாதிகள், எங்கே போகிறது இந்த தேசம்? ஒரு மாபெரும் தண்ணீர் யுத்தத்திற்கு உலகம் தயாராகிறது!
மரம் வெட்டுவது, கருவேலங்களை அகற்றாமல் பாதுகாப்பது, உயிர்களைக் கொல்லுவது, தண்ணீர் விற்பது, பிளாஸ்ட்டிக் கழிவுகளைச் சேர்ப்பது, தண்ணீரை வீணாக்குவது, தனியாருக்கு தாரை வார்ப்பது, குடிக்க நீரில்லாவிட்டாலும் கோக்குக்கும் பெப்ஸிக்கும் ஆதரவாக நீதிமன்றங்கள் செயல்படுவது, சாராயத்துக்கு ஆதரவாக அரசு அரணமைப்பது இதெல்லாம் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல, வருங்கால சந்ததியினரின் பிரச்சனை! முன்னோர்கள் ஏற்படுத்திய நீர்நிலைகளை அழித்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தை முயன்று நின்று தடுக்காவிடில் மற்றுமொரு சோமாலியாவாக இந்தியா மாறும், அம்பானிகளும் அதானிகளும் அப்போது நிச்சயம் "பியோ" என்று தண்ணீரை இலவசமாக தர மாட்டார்கள்!

****

ஒரு பாரளுமன்ற உறுப்பினரை, குறைந்தபட்சம் ஒரு வார்டு கவுன்சிலரை, தரக்குறைவான சேவை அளித்ததற்காக, அல்லது தொடர்ந்து செய்யும் ஊழலுக்காக, பொது மக்களில் யாரவது ஒருவர் அடித்திருந்தால், பாஜகவின் இந்தப் பாராளுமன்றம் அமைதியாய் இருந்திருக்குமா? இந்நேரம் அவர் தேசத்துரோகியாக, அல்லது கஞ்சா வைத்திருந்த குண்டனாக உருவகம் செய்யப்பட்டு....முடித்துவைக்கப்பட்டிருப்பார்! ஆனால் சேனா எம்பி????!
இதுதான் மத்திய அரசின் மக்களாட்சி, சேனா எம்பி யாரையும் செருப்பால் அடிக்கலாம், இங்கே மக்கள் இலவசம்!
***

தவற விட்ட அழைப்பின் பட்டியல் பார்த்து, ஓர் எண்ணை அழைத்தேன், "நீங்கள் தொடர்பு கொண்ட (!) வாடிக்கையாளர் "இப்பொலுது" "வேற காலில்" இருக்கிறார், நீங்கள் பிறகு கால் செய்யவும்!" அதைத்தொடர்ந்து ஆங்கிலம் பிறகு இந்தி, அதெல்லாம் தெள்ளத்தெளிவாக!
முதன்முதலாகத் தொலைத்தொடர்பில் இப்படி ஒலிக்கும் தமிழ்க்குரலை கேட்க நேர்ந்தது, ஒருவழியாய் எண்ணுக்குரியவரைக் அழைத்து அந்தத் தேமதுரத் தமிழோசையைத் தந்த, தொலைத்தொடர்பு அலுவலகம் எது என்று விசாரிக்க, "ரிலையன்ஸ்" என்றார்!
ரிலையன்ஸ், பொருட்களை மட்டுமல்ல மொழியையும் "மலிவாகவே" வழங்குகிறது! :-p
#Reliancetelecom #Reliancetelecomrecordedvoice #Tamizh

****

தலிபான்களுக்கும், காவி தீவிரவாதிகளுக்கும் ஆடையும் மதமும் மட்டுமே வித்தியாசம்!

***

மரணமும் விடுதலைதான் நமக்கு நேரும்போது!

****

"நீங்கள் தாக்கல் செய்த கணக்கின்படி நீங்கள் அதிகப்படியான வரி கட்டவேண்டியதில்லை, ஆனால் வேறொரு தாக்கலின்படி நீங்கள் "உடனடியாக" அதிகப்படியான வரியை செலுத்தவேண்டும்", எட்டு மாதத்திற்கு முன்பும், இரண்டு மாதங்களுக்கு முன்பும் வருமான வரித்துறைக்கு விளக்கம் சொல்லி எழுதிய கடிதங்களுக்கும், இமெயில்களுக்கும், நேரில் சென்று கொடுத்த ஆதாரங்களுக்கும் எந்த உபயோகமுமில்லாமல், அதே பழைய பல்லவியை எட்டு மாதங்கள் கழித்து, ஒரு கடிதத்தில் முடித்துக்கொள்கிறார் ஒர் அதிகாரி, அவர் எட்டு மாதங்கள் எடுத்துக்கொண்டு, நமக்கு "உடனடியாக" என்று அவகாசம் தருகிறார்கள்!
இவருக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கு (இன்கம்டேக்ஸ் கமிஷனர்) இமெயில் அனுப்பி, ஒரு வாரமாகிறது, இதுவரை பதிலில்லை, வேதாளத்தைப் பிடிக்க விடாது முயற்சித்த விக்கிரமாதித்தன் போல, தவறான வரியைத் திருத்துமாறு மீண்டும் நேரில் சென்று உயரதிகாரிகளைப் பார்க்க வேண்டும்!
இந்தத்துறை என்றில்லை எந்தத்துறையிலும் அரசு ஊழியர்களுடன் இப்படித்தான் மல்லுகட்ட வேண்டியிருக்கிறது! டிஜிட்டல் இந்தியாவில் இந்த மனிதர்களுக்குப் பதில் எந்திரங்களைப் பணியில் அமர்த்திவிடலாம், அந்த எந்திரங்கள் வேலையும் செய்யும், செய்யாத வேலைக்கு ஊதிய உயர்வும் போனஸும் கேட்டுப் போராடாமலும் இருக்கும்! இந்த மெத்தனமான ஊழியர்களை மாற்றாமல் சூப்பர்சோனிக் கம்யூட்டரைக் கொண்டு வந்து நிறுவினால் கூட இந்தியா டிஜிட்டல் இந்தியா ஆகவே ஆகாது!
முதலில் டிஜிட்டல் இந்தியாவில் அரசாங்க அதிகாரிகளுக்கு மக்கள் அனுப்பும் இமெயில்களை படிக்கவும் முறையாக பதில் சொல்லவும் கற்றுத்தரட்டும் இந்த அரசு!
#Incometax #DigitalIndia

கீச்சுக்கள்

அளவுக்கதிகமாக ஊழல் செய்து பணத்தைச் சேர்த்து வைத்துவிட்டு எதிர்க்கவும் திரணியில்லாமல், முழுதாகச் சரணடையவும் வழியில்லாமல் தான் தவிக்கிறது தமிழகக் கட்சிகள்! பங்குக் கொடுத்தப்பிறகு காட்சிகள் மாறிவிடும்!
#Incometaxraids

தமிழர்களை இலங்கைக் கடற்படைத் தாக்கும்போது நாம் இந்தியர்கள் இல்லை
தமிழர்களை நோக்கி பீட்டா சாவல் விட்டபோது நாம் இந்தியர்கள் இல்லை
இப்போது விவசாயப் பெருங்குடிகளைத் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அடித்து நொறுக்கி, கைது செய்கிறது மாபெரும் "இந்தி" தேசம், இப்போதும் நாம் இந்தியர்கள் இல்லை தான்!
கருப்பாக இருக்கும் நம்மைச் சகித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, ரொம்பவும் சகித்துக்கொண்டுதான் நமக்கு அணுவுலைகளையும், ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் வாரி வழங்குகிறது, போலோ ஜெய் ஹிந்த்(தி)!
#Hydrocarbon #TNfarmers #Racism #koodangkulam

தென்னிந்தியர்கள் கறுப்பர்கள், பாவம் எதற்காக நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் வடஇந்திய தருண் அவர்களே? தென் கொரியா வட கொரியா போல் தென்னிந்தியாவைப் பிரித்துவிட்டால் இந்தக் கறுப்பர்களை ஒரு கருப்பரே ஆண்டுக்கொள்ளலாம், அவர்கள் தென்னிந்திய மொழிகளோடு உலக மொழிகள் கற்றுத்தேர்ந்து நாளை உங்களை முந்திக்கொண்டு வல்லரசாகலாம், அப்போது உங்களுக்குப் பானிபூரியும் பாவ்பாஜியும் விற்க நாங்கள் நிச்சயம் சந்தை வாய்ப்பு வழங்கவே மாட்டோம்! :-p :-) :-)
#Racism

யாரை நாம் முக்கியமாய்க் கருதி, கொண்டாடுகிறோமோ, அவர்களுக்கு நாம் எப்போதுமே முக்கியமாய் இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை!



வியாபாரிகள் ஆட்சியில்

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்த 2017 வரை மெட்ரோ இரயில் பணியால் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன, ஒருமுறைக்கு பலமுறை தவறுகள் நிகழ்ந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று எதையும் செய்தாற் போலில்லை!
2015 -இன் மத்திய அரசின் புள்ளிவிவரக் கணக்குப்படி, வருடந்தோறும் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் இடத்தில் முண்ணனியில் இருப்பது தமிழகம்தான், 69059 விபத்துகள், 14 சதவீதம் விபத்துக்கள் தமிழ்நாட்டில் மட்டும்!

தலைக்கவசம், சீட் பெல்ட், சாலை விதிகள் என்று எதையுமே மக்களும் மதிப்பதில்லை, அரசும் வலியுறுத்துவதில்லை, கடுமையாய் அமல்படுத்துவதில்லை!
இன்றைய காலகட்டத்தில் தலைக்கவசம் இல்லாமல் சாலையில் செல்வோரின் உயிர்கள் எல்லாம் யாரோ சிலரின் "ப்ரேக்கின்" கருணையால் தான் தப்பிப்பிழைத்திருக்கிறது!

தேர்தல் நடந்தால், தலைக்கு எத்தனை ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கவேண்டும், எதைச்செய்து ஓட்டு வாங்கவேண்டும், யார் எந்தத் தொகுதியில் நிற்க வேண்டும், எந்தச் சாதி, எத்தனைப்பேர் என்று இந்தக் கட்சிகள் சேகரிக்கும் புள்ளிவிவரங்களில் காட்டும் முனைப்பை ஆட்சிக்கு வந்தப்பிறகு மக்கள் பணியில் காட்டுவதேயில்லை, வந்தப்பிறகும் கூட எந்தத்துறையில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே கணக்கிடுகிறது, காசுக்கொடுத்து ஓட்டு வாங்கும் ஒருவன் "வியாபாரி"என்று இந்த மக்கள் உணர்வதேயில்லை, வியாபாரியிகள் எதையும் "சும்மா" என்று செய்துவிடுவதில்லை!

இந்த வியாபாரிகள் ஆட்சியில் "ஆய்ந்தறிதல்" என்பதெல்லாம் "பண வரவுக்கேயன்றி" "மக்கள் நலனுக்காக அல்ல!"
நாட்டில் ஒரு சாரார் அணு வேண்டாம், மீத்தேன் வேண்டாம் என்று அலறுவதற்கும் இதுவே காரணம்! மோசமான அரசியல்வாதிகளை மக்கள் உணர்ந்து தெளிய இன்னும் நூற்றாண்டுகளாகும், தெளியாமல் இருக்கவே போதை, எனினும் இயற்கைத் தெளிந்துவிட்டதன் அடையாளமே வறட்சி!
இதைத்தான் வள்ளுவர்;

"துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே; வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு."

(மழைத்துளி இல்லையேல் உலகம் எத்தகைய துன்பம் அடையுமோ, அத்தகைய துன்பத்தை மக்கள் அருள் இல்லாத ஆட்சியினால் அடைவார்கள் என்கிறார்! )

நம்மை பொருத்தவரை மழையும் இல்லை, அருளும் இல்லை, நாள்தோறும் விபத்துக்களும் போராட்டங்களுமே!

"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்"

கீச்சுக்கள்

இந்த நாடு நிர்வாணமடைந்துப் பலவருடங்கள் ஆகிறது
ஓட்டுக்காகக் கையேந்தியே இந்த மக்கள் உடுக்கை இழந்து விட்டார்கள்
அந்த விளைவுதான் இங்கு ஆள்பவர்கள் ஆணவத்துடன் அமைதியாய் இருக்க
விவசாயிகள் வழியறியாமல் நிர்வாணமாய் நிற்கிறார்கள்
தமிழத்தில் முதல்வர் இருக்கிறார்,
டெல்லியில் பிரதமர் இருக்கிறார்
நாடு முழுக்க மக்கள் இருக்கிறார்கள்
ஆனால் சுயம் என்ற ஒன்றைத்தான்
தமிழகம் தொலைத்துவிட்டது!

*****
ஏதாவது ஒரு அரசியல்வாதி அல்லது அவனின் வாரிசு;
சாலை விபத்தில் மிகக் கொடூரமாய் சாகும்போது
புற்றுநோய் தொழுநோய் வந்து அழுகும் போது
தவறான மருந்தின் விளைவால் உறுப்பையோ உயிரையோ இழக்கும்போது
கடத்தப்பட்டு பாலியல் வியாபாரத்திற்கு விற்கப்படும்போது
அணுவுலை விபத்தில் சிக்கும்போது
மீத்தேன் கிணற்றில் விழும்போது
சாராயத்தில் குடல்வெந்துச் சாயும்போது
அரசாங்க மருத்துவமனையில் நாய் படாதபாடு படும்போது
தனியார் மருத்துவமனையில் உறிஞ்சப்படும்போது
கல்விக்காக கால்கடுக்க நிற்கும்போது
தாகத்துக்கு மாசடைந்த நீரைக் குடிக்கும்போது
புழுபுழுத்த அரிசியில் சமைத்து உணவை உண்ணும்போது
ஏதோ ஒரு வெடிவிபத்தில் சாகும்போது
.......

இங்கே மக்களுக்கு நீதிகிடைக்கும், மாற்றம் வரும், வெளிச்சம் வரும், மழையும் வரும்!

***

 

கீச்சுக்கள்

வெறுமனே நிர்வாணமாய் நிற்காமல் நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு கையில் சூலாயுதம் வைத்துக்கொண்டு நின்றிருந்தால் முதல் நாளே பிரதமர் ஓடோடி வந்திருப்பார்!
ஆர்.கே நகரில் நின்றிருந்தால் முதல்வர் வந்திருப்பார்!
சாலையில் தமிழ்நாட்டின் விவசாயியாக நிற்பதால், தனிப்பட்டு நிற்கிறார்கள்!
****

ஒருநாளைக்குச் சராசரியாகப் பத்துப் பிச்சைக்காரர்களைக் கடக்க வேண்டியிருக்கிறது
அதில் நான்கில் ஒரு பகுதியினர் கிழிந்த ஆடையுடனும், மீதி இரண்டுபங்கு உத்தியோகப் பதவித் தோரணையுடனும், கடைசி ஒரு பங்கு தேர்தலுக்காக ஏக்கத்துடனும் காத்திருக்கிறது!

***
"எந்தச் சாதியைச் சேர்ந்தவர் முதல்வராக வந்தால் நேர்மையாகச் செயலாற்றுவார்??"
இந்தக் கேள்விக்கு,
1.. ""நேர்மையா?" அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது" என்று பதில் இருக்குமானால், நாம் ஊழலை ஏற்றுக்கொண்டுவிட்டோம்
2. "எங்க சாதி ஆளுதான்" என்றால் இன்னும் நீங்கள் கிறிஸ்த்துப் பிறப்புக்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கிறீர்கள்
3. "எந்தச் சாதியாய் இருந்தால் என்ன, நல்ல மனிதராய் இருந்தால் போதும் என்றால், நீங்கள் முற்போக்குச் சிந்தனையை முன்னெடுத்து இருக்கிறீர்கள்
4. "நேர்மையாய் இல்லைனா தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும்" என்று வெறுமனே பொங்குவீர்கள் என்றால் நீங்கள் இந்தியச் சிகப்பு சங்கத்தினர்
5. "அவனவன் இருக்குற இடத்தில் இருந்துட்டா, நாடு சுபிக்ஷமா இருக்குமே!" என்றால் நீங்கள் பழைய மனுதர்மத் திண்ணைக்காரர், ஓரமாய் நில்லுங்கள்!
6. "என்னளவில் நான் நேர்மையாய் இருக்கிறேன், மாற்றம் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கும்போது நிச்சயம் நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர் நேர்மையானவர் தான்" என்றால், தயவு செய்து நீங்கள் உடனே கட்சி ஆரம்பித்துவிடுங்கள், இல்லையென்றால் காத்திருங்கள்!
7. "எவனாய் இருந்தால் என்ன, கமிஷன் அடிச்சாலும் கொஞ்சமாச்சும் மக்களுக்கு நல்லது செய்யறவனா இருந்தால் போதும்", என்றால் நீங்கள் ஓட்டுக்கு நிச்சயம் காசு வாங்குவீர்கள், நீங்கள்தான் அந்தத் தேசபக்தர்கள்! :-p :-p
 ***

அந்தப் பெண்ணை அடித்தது காவல்துறை அதிகாரி அல்ல
சாராயக்கடையில் மூழ்கியிருக்கும் இந்தகுடிகாரச் சமூகம்தான்!
திராவிடக் கட்சிகள் வளர்த்துவிட்ட போதையும் காவல்துறையும்
சரியாய் வேலைச்செய்கிறது
இன்னுமா இவர்களுக்கு ஓட்டுபோடப்போகிறோம்?

லஞ்சம்

KTS எண்டர்பிரைசஸில் இருந்து சிலிண்டர் போட வரும் இளைஞர், பில்லுக்கு மேலே இருபது ரூபாய் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள் என்று கேட்கிறார், முதல் மாடியில் ஐம்பது ரூபாய், அதற்கு மேல் நூறு ரூபாய் என்று இந்த "குறைந்தா போய்விடுவீர்கள்" வசனம் அப்படியே தொடரும், இந்த சிலிண்டர் விஷயத்தில் நீ தலையிடாதே என்று வழக்கம் போல் அம்மாவின் உத்தரவு!

யோசித்துப்பாருங்கள், இருபது நூறு ரூபாய் என்பதுதான் அவரவரவர் தகுதிக்கேற்ப ஆயிரங்களாக, லட்சங்களாக, கோடிகளாக ஊழல் பாம்பின் படமாக தலைவிரித்தாடுகிறது, புற்றீசல் போல பெருகி தேசத்தை அரித்துக்கொண்டிருக்கிறது! 

கோடிகளில் நீ கல்வி நிறுவனம் அமைக்க, வியாபாரம் தொடங்க எனக்கு சில கோடிகள் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள் என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கேட்பார்கள், கோர்ட்டுக்கு எதற்கு அலைய வேண்டும், சில நூறு ரூபாய் கொடுத்தால் அலைச்சல் மிச்சம் என்று போக்குவரத்து துறை சொல்லும், பாலம் கட்ட, சுரங்கம் வெட்ட, கட்டிடங்கள் கட்ட இப்படி பெரியதாய் நடப்பதை ஊழலென்றும், சிறிய அளவில் நடப்பதை அன்பளிப்பென்றும் சொல்ல பழகிக்கொண்டோம்!

"எப்படியும் கொள்ளையடிக்கப் போறானுங்க, அதுல சில ஆயிரம் நமக்கு கொடுக்கும் போது, வாங்குறதில் என்ன தப்பு?" என்று ஆர் கே நகர் கேட்பது போலாத்தான் இந்த தேசத்தில் பெரும்பான்மையோரின் மனநிலை!

பிரச்சனை எப்போது வெடிக்கும் என்றால், அன்பளிப்பு, ஊழல், திருட்டு, லஞ்சம் என்று "பிச்சைக்கு" பல்வேறு பெயரிட்டு வளர்த்துவிட்டப் பிறகு, ஒரு இக்கட்டான நேரத்தில் "பிச்சை" கிடைக்கவில்லை என்று அப்பாவிகளின் உயிர் போகும்போது, வேலைவாய்ப்பு மறுக்கப்படும் போது, கல்வி மறுக்கப்படும் போது, சில அயிரங்களுக்கு விற்ற ஓட்டுக்களுக்கு ஈடாக இந்த தேசத்தின் வளங்கள் சுரண்டப்படும்போது, நாடே சுடுகாடாய் மாறும்போது, மழைப்பொய்த்து விவசாயிகள் கோவணத்தாண்டிகளாய் தெருவில் நிற்க, ஆளும் வர்க்கம் அதே தமிழினத்தின் தலைமைகளும் ஏஸி காரில் பவனி வரும்போது வெடிக்கும், மக்களுக்கு வலிக்கும்!

தமிழகம் என்ற தேசத்தில் "வலி" என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரையும் தாக்கும்போதே "பிச்சை" என்பது ஓட்டுக்காக வாங்கினாலும் பிச்சைதான் என்று மக்களுக்குப் புரியும்!

அதுவரை, "இந்த அன்பளிப்பில் குறைந்தா போய்விடுவீர்கள்?" என்ற பிச்சைக்கார மனநிலையை விட்டு மனிதர்கள் வெளியே வரமாட்டார்கள்!
சாலையில் முதிய வயதில் வறியவர் ஒருவர், பசிக்காக பிச்சையெடுத்து உண்கிறார், அதே சாலையில் பெரிய அளவிலான பிச்சையில் கிடைத்த பென்ஸ் காரில் யாரோ ஒரு அரசியல் தந்திரி போகிறான், முந்தைய வறியவரை எனக்கு மரியாதையோடு விளிக்கத்தோன்றுகிறது!

கல்வி கற்க வேண்டிய வயதில் கலவி எதற்கு?

பண்ருட்டியில் திருமணமான 9 நாளில், கணவனுக்கு மண்டையில் முடியில்லை என்று கட்டாயத்திருமணத்தில் வெறுப்புற்று, "பதினெழு" வயது மனைவி இருபத்தெட்டு வயது கணவனைக் கொலை செய்திருக்கிறார்! ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய உறவில் திருமணம் செய்யக்கூடாது, இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் அதிகப்பட்சம் ஆறு வயதுக்கு மேலே இருக்கக்கூடாது என்று மருத்துவத்துறை எத்தனை எச்சரித்தாலும் இது போன்ற திருமணங்கள் நகரத்திலும் கிராமத்திலும் இன்னமும் தொடரத்தான் செய்கின்றன!

பாலியல் உறவுக்கு "இளமையான" பெண் தேடும் ஆண்கள், அதிக வயது வித்தியாசத்தில் மிக விரைவில் அவர்கள் முப்படைந்து விட, பின் தன் இளமையான மனைவியின் மீது சந்தேகம் அடைந்து, இல்லற இயலாமையால் கொலைசெய்யும் செய்திகளுக்கும் குறைவில்லை!

இன்றைய சூழலில் பல்வேறு காரணங்களால் பதினொரு வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள், வயதுக்கு வந்ததையே தகுதியாக வைத்துக்கொண்டு அவசரக் கோலத்தில் நடக்கும் திருமணங்கள் ஏராளம்! நாங்கள் முன்பு குடியிருந்த பகுதிக்குப் பின்பக்கத் தெருவில் குடிசைப்பகுதியில் பதினான்கு வயதிலேயே கையில் குழந்தையுடன் திரிந்தச் சிறுமிகளைக் கண்டிருக்கிறேன், அப்படி இளவயதில் ஓடிப்போய்த் திருமணம் செய்த ஒரு சகோதரி, குடிகாரக் கணவனிடம் போராடிக்கொண்டே குழந்தைகளையும் வளர்க்க எங்கள் வீட்டுப்பணிக்காக வந்தப்போது, படிக்கும்

வயதில் திருமணம் ஏன் என்ற கேள்விக்குக் கூறியது இது, "என்னக்கா பண்றது, அப்பன்காரங் குடிச்சிட்டு உருண்டுக்கிடப்பான், அம்மாக்காரிக் கூலி வேலைக்கோ கொளுத்து வேலைக்கோ போய்டும், சத்துணவுக்காக ஸ்கூலுக்குப் போனாலும், எல்லா டீச்சர்களும் எங்கப் படிப்பு மேல அக்கறை எடுத்துப்பாங்கன்னு சொல்ல முடியாது, இங்கேயும் அங்கேயும் ஆடல்பட்டுட்டு இருக்கறப்போ, இந்தப் பில்லக்காப் பசங்க நம்மகிட்ட அக்கறையா பேசுவானுங்க, யாருமே அக்கறை எடுத்துக்காதப்போ, அவனுங்கப் பேசுறது தேனு மாதிரி இருக்கும், சடார்ன்னு ஒருநாள் ஓடிடுவோம், உடம்பு அரிப்புத் தீந்தப்பிறகு சிலபேர் விட்டுட்டு ஓடிடுவானுங்க, சில பேர் கட்டிக்கிட்டாலும், அவனுங்கக் குடிச்சிட்டு, கும்மியடிக்க நம்ம தாலிய அறுப்பானுங்க, அந்தமாதிரி ஏதும் ஆகிடாம என் பொண்ணுங்கள எப்படியாச்சும் கரைசேர்த்துடணும்" என்றார், அந்தப்பெண்ணின் குழந்தைகளை நான் படித்த பள்ளியிலேயே சேர்த்துவிட்டேன், நன்றாகப் படிக்கிறார்கள்

எல்லா அம்மாக்களும் இப்படியே இருந்துவிடுவதில்லை, இளவயதிலேயே திருமணம் செய்துக்கொண்டு தெரிந்தப் பெண்ணொருவர் தன் வயதுக்கு வந்த பன்னிரண்டு வயது மகளுக்கு மிக விரைவில் திருமணம் முடித்துவிட வேண்டும் என்றார், பல சமயங்களில் அவர் தன்னுடைய இளவயது திருமணத்தால் தன் கனவுகள் கலைந்ததென்று வருத்தப்பட்டிருக்கிறார், வருத்தப்படும் தாய்மார்கள் அதே வருத்தத்தைத் தன் பெண்களுக்கும் திணிப்பதுதான் இந்தியச் சமுதாயத்தின் விந்தை!

வயது வித்தியாசம் அதிகம் என்றால், மிக இள வயதிலேயே திருமணம் செய்துவிடும் வித்தையும் நடக்கிறது, இஸ்லாமிய மதத்தில் கண்டது என்றாலும், எல்லா இனத்திலும் இப்போதும் நடக்கும் நிகழ்வுதான் இது. எனக்குத் தெரிந்த இஸ்லாமியக் குடும்பம் அது, மனைவிக்கு வயது பதினெட்டு, கணவனுக்கு வயது பத்தொன்பது, பள்ளியைப் பூர்த்திச் செய்யாத மனைவியைப் படிக்க வைக்க வேண்டும் என்று கணவன் விரும்ப, "நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்" என்று என்னிடம் வந்தார்கள், படிக்க வலியுறுத்தியபோது அந்தப்பெண், "கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு, இன்னும் குழந்தை இல்லைன்னு எல்லாரும் கேக்குறாங்க(!)" என்று வருத்தப்பட்டார், இல்லற பந்தத்தில் ஈடுபட்டப் பிறகு, படிக்க வேண்டும் என்று துளியும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது அந்தப்பெண்ணுக்கு, பின் ஒரே வருடத்தில் அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தைப் பிறக்க, அந்தக் குழந்தையின் மாமியாருக்கும் ஒரு குழந்தைப் பிறந்தது,
"அம்மா அப்பாவுக்குக் குழந்தையை வளர்ப்பது கஷ்டம், தன் தங்கையைத் தன் பிள்ளையைப் போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனைவிக்கு அறிவுறுத்தி அவர்கள் கூட்டுக்குடும்பமாக ஆனார்கள்!

இளவயதிலோ முதிய வயதிலோ பிள்ளைப் பெறுவது கேலிக்குரியது அல்ல, எனினும் எந்த வயதாய் இருந்தாலும், ஒரு குழந்தையைக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கக் கூடிய உடல் பலமோ, மனபலமோ இல்லாவிட்டால் குழந்தை எதற்கு?
இந்தக் கேள்வி எதனால் எழுகிறது என்ற வினாவுக்கு, அந்தக் குடிசைப்பகுதிப் பெண் சொன்ன பதிலை மீண்டும் படித்துப் பாருங்கள்!

இளவயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, மனமுதிர்ச்சி இல்லாமல், போதிய விழிப்புணர்வு இல்லாமல் குழந்தைகளை இம்சைபடுத்தும் பெற்றோர்களை நாம் இப்போதும் காணலாம், முதிய வயதில் பிள்ளைப் பெற்றுக்கொண்டு உடல் தளர்ந்து, படிப்புக்காக, மருத்துவத்திற்காக என ஆடல் படும் பெற்றோர்களையும் காணலாம்!

சிறந்த கல்வியும், பகுத்தறியும் அறிவும், மனத்துணிவும் இல்லாத ஆணுக்கும் பெண்ணுக்கும், ஓட்டுப்போட வயது பதினெட்டு என்றும், திருமணத்திற்கு வயது இருபத்தொன்று என்றும் பரிந்துரைக்கும் வயதும் கூட இந்தக் காலகட்டத்தில் சரிதான் என்று சொல்லிவிட முடியாத போது, அதிக வயது வித்தியாசத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் முடிச்சுப்போடுவது, சில தீரா முடிச்சுக்களைத்தான் வாழ்க்கையில் ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும்!

கொலைசெய்த மைனர் பெண், "தன்னைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துவைத்தார்கள்", என்று சொன்னதை, யாரும் கண்டுகொண்டது போலவே தெரியவில்லை, மைனர் என்றாலும், ஒருவனுக்கு மணமுடித்துவிட்டால் அவள் காலம் முழுக்க அவனின் வதைகளைத் தாங்கியே தீரவேண்டும் என்பது இந்தியச் சமூகத்தின் எழுதப்படாத விதி, "புருஷன் மண்டையில் முடியில்லைன்னு, அவன் திட்டினானு எவளாவது கொலை செய்வாளா?" என்றுதான் இந்தச் செய்தியைப் படித்ததும் எதிர்வரும் விமர்சனம், பதினேழு வயது பெண்ணுக்குப் பிடிக்காத ஒன்றை நிர்பந்திக்கும் போது, சில சமயங்களில் அது கொலையிலும் கூட முடியலாம் என்பதைத்தான் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்!

கல்வி கற்க வேண்டிய வயதில் கலவி எதற்கு? பெண்ணுக்குத் தாயே எதிரியாவது மாற்றப்பட வேண்டுமானால், இந்தத் தலைமுறைக்காவது "சிறந்த" கல்வி அவசியம், அதுவும் "இலவசமாக்கப்படவேண்டும்!"

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!