Thursday, 28 March 2013

குல்மொஹர் மகள்கள்

 

அப்பாவின் கைப்பிடித்து
அவள் சென்றதேயில்லை
சகோதரன் தோள் சாய்ந்து
அவள் ஓய்ந்ததேயில்லை
கணவன் நிழல் சார்ந்து
அவள் வாழ்ந்ததேயில்லை
பிள்ளையின் கைப் பார்த்து
அவள் சோர்ந்ததேயில்லை
நட்பின் நிழல் தோற்று
அவள் தூற்றியதேயில்லை
வாழ்ந்த காலம் முழுக்க
அவள் வாழ்ந்த காலமேயில்லை

உறைந்து விட்ட விழிகளில்
கடந்துவிட்ட வலி இருக்கும்
தனியே வந்த  பாதையில் - அவளின்
ஒற்றை மரம் ஒரு சாட்சியாய் காத்திருக்கும்

கூடு பிரிந்த மகளின் குருதி பூக்களில் கலந்திருக்கும்
இரத்த சிதறல்களாய் குல்மொஹர் பூக்கள்
அவள் மேனி போர்த்தி பார்த்திருக்கும்
மண்ணில் மறைந்த மகளின் நினைவில்
மரம் மேனி சிலிர்த்து உயர்ந்து நிற்கும்
பின் தண்டுகளின் கரம் நீட்டி
மேகம் தட்டி ஆர்ப்பரிக்கும்
இறுதியில் அவள் உயிர்த் தேடி
பூக்களில் விரல் விதைத்து
வானம் துழவி வாடிச் சுருங்கும்
மகள் உடல் தேடி பூமியெங்கும்
மலர்த் தூவி மரம் தினம் வாடும்!

நிறத்துக்கு பின்னே நினைவும்
நினைவின் தேடல்கள் தினமும்!





பூமியின் தாகம்

நீர் தரும் கருமேகத்திற்கு
நிறைவைத் தருவது
நிலத்தின் பசுமை மட்டுமே!
மேகம் வற்றி போகையில்
பசுமை சாரல் வீசிடும்
மேகம் மீண்டும் சூல் கொள்ளும்!
சுழற்சி தவறினால் பூமி சுருங்கிடும்!

சிதறல்கள்

நம்மை நேசிப்பவர்களின் கடுமையில்
புத்தி ஒருநாள் பேதலித்துப் போகும்
பேதலித்த இதயத்தில் இருப்பது மௌனமேயாகும்
மௌனத்தை சிதறடிக்க ஒரு அன்பின் தருணம் போதும்!
----------------------------------------------------------
சிறகுகளை உதிர்க்க முடியாமல்
விடைத்துக்கொள்ளும் போது
தானாய் விடைபெற்றுக் கொள்ளும்
உயிர்ப் பறவை!
------------------------------------------------------ 

Tuesday, 26 March 2013

தீராதது!

தினம் பிறக்கும்
மணம் பரப்பும் - மலர்கள்
வாடி உதிரும்வரை!

ஒரே நாள் வாழும்
மகரந்தம் பரப்பும் - பட்டாம்பூச்சிகள்
உயிர் பிரியும்வரை!

நூறு ஆண்டுகள் வாழும்
வன்முறை பரப்பும் - மனிதர்கள்
வாழ்வதேயில்லை கூடு பிரியும்வரை!

ஒருமுறை!

மரணம் என்பது ஒரே முறை
வாழ்க்கை என்பது நாம் வாழும் வரை!

நீண்ட நெடிய தூரம்தான் இந்த வாழ்க்கை
வண்ணத்துபூச்சிக்கும் வானவில்லுக்கும்.......

Ruins!

மக்கள் குருதி சுவைக்கும் எந்த சாம்ராஜ்யமும்
பின்னாளில் ஒரு கறைபடிந்த சரித்திரம் மட்டுமே!

நீர்வற்றிய வேர்கள் உதிரம் கொண்டு வளர்கிறது
கறைப்படிந்த சரித்திரத்தில் தோன்றும் மேலும் ஒரு புரட்சி!

The ruin of fallen empire leaves the rust
Where the blood stint generates warfare!
The bloody desolation instigates revolution
An evolution for the ultimate peace! 

நிதர்சனம்

எல்லோருக்கும் வேண்டியதுதான்
உனக்கும் வேண்டி இருக்கிறது
புன்னகை!

எல்லோருக்கும் தருவதைத்தான்
உனக்கும் தருகிறேன்
பொய்!

Monday, 25 March 2013

இது யார் வாழும் பூமி?

தமிழன் என்று கொல்கிறாய்
முகமதியன் என்று மூர்க்கமாகிறாய்
தலித் என்று தலையெடுக்கிறாய்
பெண் என்றாலே புணர்கிறாய்
குழந்தாய் என்றாலும் மிருகமாகிறாய்
ஏழை என்றே ஏறி மிதிக்கிறாய்
குருதி நிறம் சிவப்பென்று வாதாடவில்லை
நீதி நியாயம் பேசி தீர்க்கவும் நேரமில்லை
பசித்தால் புசித்திடும் மிருகம் கூட
உன்னை கண்டால் ஓடி ஒளிகிறது
பிணம் தின்னும் மிருகத்துக்கு தீருமோ பசி?

தினம் தினம் சாகும் உயிர்களுக்குள்
ஒரே ஒரு கேள்விதான் ஊற்றெடுக்கிறது
எளிதாய் நிமிடத்தில் நிகழும் தவறுக்கு
தீர்ப்பு மட்டும்.................................???
இது யார் வாழும் பூமி?

Sunday, 24 March 2013

தூரத்தில் ஒரு நட்சத்திரம்!


 தூரத்தில் ஒரு நட்சத்திரம்
சில்லென்று ஒரு மழைத்துளி
எங்கோ மிதக்கும் ஒரு இசை
குழந்தையின் சிறுவிரல் தீண்டல்
நன்றியுடன் வாலாட்டும் நாய்
எதிர்பார்த்து நிற்கும் காக்கை
தலைச்சுற்றி பறக்கும் குருவி
தேகம் தொடும் பட்டாம்பூச்சி
யாரோ பரிமாறும் புன்னகை
கூந்தல் கலைக்கும் காற்று
முண்டாசுக்  கவி பாரதி
அம்மா சுட்ட முறுக்கு
பாதி முடித்தக் கவிதை
திறந்து வைத்தப்  புத்தகம்
வார்த்தை காக்கும் மரபு
நீண்டு விரிந்த நிழற்சாலை...........
கால்கள் நடை போட - மனம்
எங்கோ  மறுத்தோடும்
ஒரு துயரை தொலைக்க
பாதி வழி கடக்க - விதி பாதை
மறிக்கிறது - விழிகளில் 
காட்சி விரிகிறது - இயல்பு
கண்ணை மறைக்கிறது....
போன வழிப்  பயணவழியாக
இயற்கை உயிரை மீட்டுது! - வலிமீண்டு
வாழ்வு தொடருது!

Thursday, 14 March 2013

மனிதர்கள் எச்சரிக்கை

காடு அழித்து நாடு செய்து
வழித்தடம் தெரியாமல் வந்து
திரியும்  விலங்குகள்!
பழிவாங்கும் படலம் ஏதுமின்றி
பசிக்கு நம்மை இரையாக்கும்!
உடன் விலங்கு கொன்று
பொங்கியெழும் மனிதக்கூட்டம்
உயிருக்கு உயிர் என்று
நீதி காத்து, மேலும் காடழித்திடும்!

நரி எது நாய் எது புலி எது பூனை எது
யார் எது இம்மனிதத் திரளில்
ஒரு இனம் இரத்தம் சிந்த,
சதை பிண்டமாக பல
உயிர் வதைப்பட - உதிரத்தில்
சாதி, மதம், நிறம் - மொழியும்
கண்டு மௌனமாய் சாகிறது 
உலக நீதியும் சட்டமும்
காடெது நாடெது இங்கே
கவனித்து செல்லுங்கள்,
தடை செய்யப்பட்ட பகுதி 
"மனிதர்கள் எச்சரிக்கை"

Saturday, 9 March 2013

மற்றுமொரு காட்சி!

உஷா அக்காவுக்கு கண்ணை கட்டிக்கொண்டு
வந்தது - அன்று வாங்கிய சம்பளம்
குடிகார கணவனால் திருடப்பட்டிருக்க - மூத்த
குழந்தையின் பள்ளி கட்டணத்திற்கு கடைசி நாள்
விதிக்கப்பட்டிருக்க - இளைய குழந்தையோ
காய்ச்சலால் அழன்று விட்டிருந்தது - பரபரப்பில்
காலையில் குடித்த கஞ்சி வயிற்றுக்குள் காணாமல்
போய் விட்டிருக்க  - துவண்ட கரங்களால்
அண்டை வீட்டு கதவைத்  தட்டினாள்  - மின்னலாய்
வந்த சிறுமி சன்னமாய் ஒரு புன்னகையில்
"அம்மா வீட்டில்  இல்லை அத்தை", என்கிறாள்
சற்று பின்னே வந்த அம்மா,
"போயிட்டாளா? சீக்கிரம் வாடி
சனியனே, இரண்டு மணிக்கு அந்த
கடன்காரன் அபியை இன்னும் என்ன படுத்தப்போறான்னு
தெரியல - அடுத்த வாரம் வர சீன்லயாவது அந்த
பொண்ணுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கணும்"
மனதார வேண்டிக்கொண்டாள்!

மற்றுமொரு நண்பன்

கண்ணன் பெரிய ஆளாயிட்டான் - நம்ம
ரமேஷுக்கு இரத்த புற்றுநோயாம் - நாளைக்கு
காலையில் கவிக்கு ஒரு புதுத்துணி
எடுக்கணும் - அவர் என்னமா பேசுறார் ?
நம்ம வைத்தியை அடிச்சிக்கவே முடியாது
தனியா அவன் பையனை பெரிய ஆளாக்கிட்டார்
வரவர நம்ம தெரு மெஸ்சுல சாப்பிடவே முடியல
அடடா மறந்தே போயிட்டேன் - நிறைய வேலை இருக்கு
அப்புறம் பார்ப்போம் - நகர வீதியின் பரபரப்பில்
பட்டாபிக்கு - பலநூறு மைல் கடந்து வந்த
ராஜன் - எதற்கு வந்தான் என்ற  ஒரு கேள்வி
கேட்க நேரமில்லாமல் போனது!

கேட்டிருந்தால் சொல்லி இருப்பான்
"நண்பா, பாரம் சுமந்து களைத்து - பல 
இரவில்  இமைகளில் அழுத்தும் நீர்
விடியலில் மண்டைக்குள் மறைந்து போகும்
மாயம் என் மூளையில் ஒரு கட்டியாய்
விளைந்து - கூட்டை விட்டு என்னை
வெளியே பிரிக்க காத்திருக்கிறது,
மரணத்தை சற்று எட்டி இருக்கச் சொல்லி
நட்பை காணவந்தேன்,
நீயோ தூர இருப்பவர்களை
நினைவில் கொண்டிருக்கிறாய்
எதையோ அடைய முயன்று
எதுவும் முடியாமல் - எப்போதும்
பரபரப்பாய் இருக்கிறாய் - நாளை
நான் மரணித்த பிறகு - இப்படி சொல்லுவாய்,
"ராஜனை நான் கடைசியா பார்த்தப்போ நல்லாத்தானே
பேசிகிட்டு இருந்தான் - பாவிப்பய கடைசிவரை
என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லவேயில்லையே?"

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!