கண்ணன் பெரிய ஆளாயிட்டான் - நம்ம
ரமேஷுக்கு இரத்த புற்றுநோயாம் - நாளைக்கு
காலையில் கவிக்கு ஒரு புதுத்துணி
எடுக்கணும் - அவர் என்னமா பேசுறார் ?
நம்ம வைத்தியை அடிச்சிக்கவே முடியாது
தனியா அவன் பையனை பெரிய ஆளாக்கிட்டார்
வரவர நம்ம தெரு மெஸ்சுல சாப்பிடவே முடியல
அடடா மறந்தே போயிட்டேன் - நிறைய வேலை இருக்கு
அப்புறம் பார்ப்போம் - நகர வீதியின் பரபரப்பில்
பட்டாபிக்கு - பலநூறு மைல் கடந்து வந்த
ராஜன் - எதற்கு வந்தான் என்ற ஒரு கேள்வி
கேட்க நேரமில்லாமல் போனது!
கேட்டிருந்தால் சொல்லி இருப்பான்
"நண்பா, பாரம் சுமந்து களைத்து - பல
இரவில் இமைகளில் அழுத்தும் நீர்
விடியலில் மண்டைக்குள் மறைந்து போகும்
மாயம் என் மூளையில் ஒரு கட்டியாய்
விளைந்து - கூட்டை விட்டு என்னை
வெளியே பிரிக்க காத்திருக்கிறது,
மரணத்தை சற்று எட்டி இருக்கச் சொல்லி
நட்பை காணவந்தேன்,
நீயோ தூர இருப்பவர்களை
நினைவில் கொண்டிருக்கிறாய்
எதையோ அடைய முயன்று
எதுவும் முடியாமல் - எப்போதும்
பரபரப்பாய் இருக்கிறாய் - நாளை
நான் மரணித்த பிறகு - இப்படி சொல்லுவாய்,
"ராஜனை நான் கடைசியா பார்த்தப்போ நல்லாத்தானே
பேசிகிட்டு இருந்தான் - பாவிப்பய கடைசிவரை
என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லவேயில்லையே?"
No comments:
Post a Comment