Saturday 4 January 2014

தாய்மை

 

இரண்டு சம்பவங்கள்:

1. படிக்காத ஒரு கிராமத்துப் பெண், தன் இரண்டு வயது குழந்தையைக் கவனக்குறைவால் கவனிக்காமல் விட, குழந்தைச்  சாலையின் அந்தப் பக்கம் ஒரு கடையில் நின்று கொண்டிருந்த தந்தையை நோக்கி ஓடி, ஒரு காரின் குறுக்கே விழுந்து, எப்படியோ ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் வண்டியில் அடிபடாமல் தப்பியது.....

2. ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், சென்சார் சரிவர வேலை செய்யாத ஒரு லிப்டில், ஒரு படித்த நகரத்துத் தாய், இரண்டு குழந்தைகளை (இரண்டு மற்றும் ஐந்து வயது இருக்கலாம்) அழைத்துக் கொண்டு லிப்டின் உள்ளே வரும்போதும், வெளியில் செல்லும்போதும் குழந்தைகளைப் பின்னே விட்டு விட்டு, அந்தப் பெண் மட்டும் பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே முன்னே சென்றார். குழந்தைகளின் பாதுகாப்புக்காக அந்த லிப்டின் கதவை அவர்கள் வெளியேறும் வரை நான் பிடித்துக்கொண்டு நிற்க, அந்தத் தாயின் அக்கறையின்மை எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்த இருவேறு சம்பவங்களிலும், அந்த இரண்டு பெண்களிடமும் பேசுகையில், கிராமத்துப் பெண் தன் தவறை சரி செய்யக் குழந்தையை அடித்தார், நகரத்துப் பெண் தன் தவறையே உணராமல், பெரும் அலட்சியத்தோடு சென்று விட்டார்.

இருவேறு சம்பவங்களில் என்னுடன் இருந்த உறவும் நட்பும், இவங்க எல்லாம் இப்படிதான், நீ உன்னுடைய வேலையைப் பாரு என்றே  அறிவுறுத்தினார்கள்.
அட, என்னதான் நடக்குது இங்கே, ஒன்பது மாதங்கள் சுமந்துப் பெற்று, அதன் ஒவ்வொரு அசைவுக்கும், அழுகைக்கும் காரணம் தேடி, ஈ, எறும்பு அண்டாமல், கொசு கடிக்காமல் பாதுகாத்து, பிரசவத்திற்கு முன்பும், பால் கொடுக்கும் போதும் குழந்தைக்கு எது சேரும் எது சேராது என்று தன் விருப்பத்தை மறந்து, குழந்தை நலம் ஒன்றே பேணி, பார்த்துப் பார்த்துப் பெற்று வளர்க்கும் போது, எல்லாத் தாய்மையும் இப்படிதானே என்று ஒரு தாயாய் நான் எப்போதும் நினைத்துக் கொள்வது உண்டு. ஆனால் நாகரிகம் வளர வளர குழந்தைகள் என்பதும் இங்கே ஏதோ ஒரு தேவைக்காக ஆகிவிட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

திருமணம் ஆகிவிட்டால் மட்டுமே குழந்தைப் பெற்றுக் கொள்ளும் தகுதி வந்துவிடாது, தாய்மை உணர்ந்து, மனம் முழுக்கத் தாய்மை நிறைந்து, தன்னையும் தன் குழந்தைகளையும் நல்லபடி வளர்க்கும் மனப்பக்குவமும், உழைப்பிற்குச் சுணங்காத உடல் வலிமையையும், தெளிவான சிந்தனையும் இப்போதுள்ள சூழலில் எந்தத் தாய்க்கும் அவசியம்.

சுயநலம் மிகுந்த பெண்கள், தன் அழகை மட்டுமே போற்றிப் பாதுகாக்கும் பெண்கள், உழைக்க மறுக்கும் பெண்கள், வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் நம்பும் பெண்கள், படிப்பறிவே இல்லாமலும், தெளிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாத பெண்கள், கொடுமைப்படுத்தப்படும் பெண்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள், சரியான வழிக்காட்டுதல் இல்லாத பெண்கள் என நீண்டு செல்லும் இந்த வரிசையில், இவர்கள் சுமந்துப் பெரும் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.

இப்படிகூட அம்மாக்கள் இருக்க முடியுமா என்ற கேள்வியில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.....ஒன்று மட்டும் தெரிகிறது, இப்பெண்களுக்குத் ஏதோ ஒரு குறை இருக்கிறது, அவர்களுக்குத்  தேவையான ஒரு வழிகாட்டுதலை, நல்ல முறையில் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களோ, அல்லது கணவன் எனும் உறவோ காட்டுதல் அவசியம்! அல்லது தன்னை மட்டுமே மையப்படுத்திக்கொள்ளும் பெண், இன்னொரு உயிரைப் பிரசவிக்காமல் இருத்தல் நலம்!

பெண்மையைப் போற்றுங்கள், நாளை சந்ததி நல்லபடி வாழ! 

1 comment:

  1. சரியாகச் சொன்னீர்கள்... ஓரிருவர் இப்படி இருப்பதும் உண்மை தான்...

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!