Saturday, 25 July 2015

நிகழாதது ஆனால் நிகழ்வது!



ரோஹிணிக்கு கல்யாண வயது, அம்மாவும் அப்பாவும் அவளுக்கு ஒவ்வொரு மாப்பிள்ளையாய்ப் பார்த்தாலும், அவளுக்கு ஒவ்வொருவரையும் நிராகரிக்க ஒவ்வொரு காரணம் இருந்தது, ஒருவனுக்குக் கருப்பு நிறம், ஒருவனுக்கு வளைந்த மூக்கு, ஒருவன் கொஞ்சம் குள்ளம், ஒருவன் ரொம்பவே உயரம், ஒருவனுக்குச் சமைக்கத் தெரியவில்லை, ஒருவனுக்கு உடன்பிறந்தவர்கள் நிறையப்பேர், ......அப்படியே எல்லாம் பிடித்துப் போனாலும் அவளுடைய அம்மா அப்பா கேட்ட வரதட்சிணையைப் பிள்ளை வீட்டினரால் கொடுக்க முடியவில்லை ....

 ஒருவழியாய் ரோஹிணிக்கு ஒருவனுடன் திருமணம் நடந்தது, அவனுக்கு அடுத்து இரண்டு வயது வித்தியாசத்தில் ஒரு தம்பி இருந்தாலும், அவன் அழகாய் இருந்ததால், பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று ரோஹிணி திருமணத்துக்குச் சம்மதித்து விட்டாள் ....


 ரோஹிணியின் கணவன் பெயர் சரவணன்.  திருமணத்தன்று, சரவணனுக்கு ரோஹிணியின் தோழிகளுக்குக் கைக்குலுக்கிக்  கைவலி எடுத்துவிட்டது, ரோஹிணியின் உறவினர் கால்களில் எல்லாம் விழுந்து எழுந்து அவனுக்கு முதுகு வலியும் வந்து விட்டது, அவன் பெற்றோர் தருவதாய்ச் சொன்ன சில லட்ச ரூபாய் வரதட்சணை எப்படியோ கடைசிச் சமயத்தில் வந்ததால் தான் ரோஹிணி, சரவணன் கழுத்தில் தாலியே கட்டினாள்......எப்படியோ சரவணுக்கு எல்லாம் சரியாய் நடந்தது!

காலையில் அடுப்படியில் வேலை செய்து, அவனும் பணிக்குச்  சென்று, பிறகு வந்து ரோஹினியின் பெற்றோர்களுக்குத் தேவையானதை செய்து , ரோஹிணி அலுவலகத்தில் இருந்து வரும்முன் இரவு உணவையும் தயார் செய்து, இரவில் ரோஹிணியின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும், எப்படியோ கர்ப்பப்பையை இன்னமும் கடவுள் ஆணுக்கு மாற்றவில்லை, இல்லாவிட்டால் அதையும் சேர்த்து சுமக்க வேண்டும் என்று அவ்வப்போது ஆறுதல் அடைந்த சரவணுக்கு, அடிக்கடி ரோஹியிணின் பெற்றோர் ரோஹிணியை அழைத்துத் தனியாகப் பேசியது கலக்கத்தை வரவழைத்தது ....

 திருமணம் ஆகி இரண்டு வருடங்களில், சரவணன் பயந்து எதிர்பார்த்த இடியை அன்று ரோஹிணி அவன் தலையில் இறக்கினாள்,
 "நீ உன் அம்மா வீட்டுக்குப் போ சாரு"
 சாரு என்றதில் அவனுக்குத் தலையில் பனிக்கட்டியை வைத்தது போல் இருந்தாலும், குரல் பிசிறடிக்க
 "ஏங்க நான் வீட்டு வேலை, வெளி வேலை எல்லாம் சரியாதானே செய்யுறேன், வரதட்சிணைக்  கூடச் சொன்ன மாதிரி செஞ்சுட்டாங்களே, எனக்கு அடுத்து தம்பி இருக்கான் .........எனக்கு ரொம்பப் பயமா இருக்கு , என்னை வீட்டை விட்டு அனுப்பாதீங்க ப்ளீஸ் ....
 அதற்கு மேல் சாரு என்ற சரவணனால் பேச முடியவில்லை......கண்ணீர் ஆறாகப் பொங்கியது ...

 சாரு ப்ளீஸ் அழாதே, கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு, இன்னும் நான் அம்மா ஆகலே, சோ ......என்ற ரோஹிணியை, சட்டென்று இடைமறித்தான் சாரு
 ஏங்க நீங்களும் டெஸ்ட் பண்ணிக்கிட்டா சரி பண்ணிடலாம்ன்னு டாக்டர் சொன்னாரே என்று சாரு சொல்லிக்கொண்டிருக்கும் போதே பளாரென்று ஓர்  அரைச் சாருவின் கன்னத்தில் விழுந்தது மாமனாரிடம் இருந்து ....

 புள்ளைக்கொடுக்க வக்கில்லை, பேசுற பேச்சப் பாரு ...நான் அப்பவே சொன்னேன் அந்தச் சுப்பையாப்  பையனையே கட்டிக்கச் சொல்லி கேட்டாதானே ....என்ற அப்பாவை இடைமறித்தாள் ரோஹிணி

 அப்பா ப்ளீஸ் , நா பேசிக்கிறேன் .....இங்கே பாரு சாரு, நீ வீட்டை விட்டு போக வேண்டாம், நான் சொல்றதை கேட்டா நாம எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம், உன் அப்பா அம்மா சுமையும் குறையும் .........

 கண்களில் ஆர்வம் மின்ன "சொல்லுங்க" என்றான் சாரு

 ம்ம்ம் உன் தம்பி சரியா படிக்கலை, சரியான வேலையும் இல்லை, அவனுக்கு யாரு பொண்ணுக்கொடுப்பா சொல்லு? உனக்கும் ஆண்மை இல்லை, அதனால நான் அவனை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன் .....

 என்னங்க ....என்று அலறினான் சாரு ......நான் உங்களுக்கு என்ன குறை வெச்சேன், ப்ளீஸ் நீங்க டெஸ்ட் பண்ணிக்க வேண்டாம், நாம ஒரு குழந்தையத்  தத்து எடுத்துக்கலாம் .....

 சரிதான் யார் வீட்டு சொத்தை யார் அனுப்பவிக்கறது என்று நொடித்தாள் ரோஹிணியின் அம்மா...

 இங்கே பாரு சாரு , நான் உங்க அம்மா அப்பாகிட்டே பேசிட்டேன் , உன் தம்பியும் ஒத்துகிட்டான் ....நீயும் ஒத்துகிட்டா எல்லாரும் ஒண்ணா இருக்கலாம் இல்லைனா உன்னை விவாகரத்து செய்யறதைத் தவிர வேற வழியில்லை ....நான் இப்போ ஆபீஸ் கிளம்புறேன், நீ வேணும்னா ஆபீஸ் போகாம லீவ் போட்டுட்டு யோசிச்சுப் பாரு என்று கிளம்பினாள் சாரு ....

 அழுது கொண்டே இருந்தான் சரவணன், என்னமோ அவனுக்கு வாழ்க்கையே இருட்டிக் கொண்டு வந்தது, தம்பியும் ஒத்துக்கொண்டான் என்றதை அறிந்ததும் அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ......அழுது அழுது தூங்கிப் போனான்

 மாலையில் வீடு திரும்பிய ரோஹிணிக்கு வீட்டு வாசலில் அதிர்ச்சிக்  காத்திருந்தது.....சாரு என்கிற சரவணன், மனைவியின் ஆசைக்காக, தம்பியின் வாழ்க்கைக்காக,  தனக்கு ஆண்மை இல்லாத ஏக்கத்தில் தற்கொலைச்  செய்துகொள்வதாகக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டு நிரந்தரமாய்ப் பிரிந்து விட்டிருந்தான்

 விசாரணைகள் விசாரிப்புகள் முடிந்த ஆறாவது மாதத்தில், சாரு என்ற சரவணின் தம்பி, நீரு என்ற நிரஞ்சனை மணமுடித்த ரோஹிணி பின்வருமாறு கூறினாள்;

 "நீரு, அண்ணன் போட்டோவை கும்பிட்டுக்க....உன் அண்ணனோட வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது, அவனோட ஆசிர்வாதத்தை வாங்கிக்க!" 

:-) :-) :-)

Tuesday, 21 July 2015

தொலைந்(த்)தவை!

 
மரமாய் நான் இருந்தேன்
காற்றை மட்டுமே உணர்ந்தாய்
காற்றாய் நான் தவழ்ந்தேன்
வானத்தை வெறித்திருந்தாய்
வானாய் நான் விரிந்திருந்தேன் 
தெறித்த நிறங்களில் லயித்திருந்தாய்
நிறமாய் நான் விரவியிருந்தேன் 
கிளியொன்றை வரைந்திருந்தாய்
கிளியாய் நான் பறந்து வந்தேன்
மௌனம் களைந்து நீ மரத்தைத் தேடினாய்
இனியென்ன?
மரணித்துகிடக்கும் இறகுகளை
அணைத்துக்கொள்! 

Monday, 13 July 2015

சில்லறைக் கணங்கள்

காற்றில் கலைந்த சொற்களை
நினைவில் செதுக்கியெடுத்து
விழியினின்று அகன்ற உருவை
இதயத்தினின்று தேடியெடுத்து
சிதைந்த கனவுகளை மீட்க
நான் நின்று கொண்டிருக்கிறேன் 
இந்தக் கடற்கரையோரம்
பல யுகங்களாய் - ஒரு
நங்கூரம் பாய்ச்சியக் கப்பல் போல
நீ வருவதாய்ச் சொன்ன திசைநோக்கி

கேள்வியின்றி நின்றக் கால்களை
ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
தின்று ஓய்ந்து 
பின்பு  என்பு நோக்கிப் பாய்கிறது 
அவை பொடிப்பொடியாகி சிப்பிக்களாய்
மணற் வெளியெங்கும் சிதறும் வேளையில்
அலைக்கடல் அவசரமாய் ஒரு சிப்பியில்
எழுதி வைக்கும் - திரைக்கடல் கடந்து
திரவியம் தேடித் திரும்பிவரும் உன்
கால்களில் மிதிபடுபவை சிப்பிகள் அல்ல
நொந்துபோன ஓர் உயிரின்
பயனற்ற
சில்லறைச் சிதறல்களேயென்று!

Sunday, 12 July 2015

மகன்

 
பிள்ளைகளுடன் நேற்று மாலை கடைவீதியில்...................

 மகன்- அம்ம்மே இந்த ஏ டி எம் ல கூட்டம் எப்போ குறையும் ?
 நான்- இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல பணம் எடுத்துட்டுக் கிளம்பிடலாம்
 ..
 அம்ம்மே டைம் என்ன?
 6:10 டா

 பிறகு இன்னொரு கடையிலும் இதே
 கேள்வி, அம்ம்மே டைம் என்ன?

 அப்புறம் அடையாறு ஆனந்தபவனில், என்னடா உனக்கு என்ன வேணும்,

 அம்ம்மே ஒரு பானிபூரி அப்புறம் ஐஸ்கிரீம் வித் மில்க் ஷேக், ...
சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் நினைவு வந்தவனாய், அம்ம்மே டைம் என்ன என்றான் மறுபடியும்
 6:40 டா என்றேன்

 என்னது ...(ஒரு இன்ஸ்டன்ட் அதிர்ச்சி அவனிடம்) அம்மே நான் உடனே வீட்டுக்குக் போயாகனும்
ஏன்டா இப்படிப் பறக்குறே ?
 அம்ம்மே என் ப்ரண்ட் கிளாஸ் போயிட்டுச் சிக்ஸ் தர்ட்டிக்கு வரேன்னு சொல்லி இருக்கான், நானும் அவனை மீட் பண்றேன்னு சொல்லி இருக்கேன், அதனால நான் போகணும்

அதெல்லாம் அவன் வெயிட் பண்ண மாட்டான் என்று என் அம்மாவும் சகோதரியும் சிடுசிடுக்க, சரி அவனை அழ வைக்க வேண்டாம் என்று, அவனுடன் எல்லோரையும் அனுப்பி விட்டு, மகளுடன் கடைவீதியில் வாங்க வேண்டியவைகளை வாங்கி விட்டு வீடு திரும்பினால், தம்பி அமைதியாய் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்,
என்னப்பா ப்ரெண்டை பார்த்தியா?
 இல்லம்மா, அவன் இன்னும் வரலை
 பார்த்தியா அவனுக்கு வேலை இருக்கும், நான்தான் சொன்னேனே
 அம்ம்மே, அவனுக்கு நான் கமிட் பண்ணிட்டேன், அவன் மிஸ் பண்ணாலும், நான் கமிட் பண்ணதை நான் மிஸ் பண்ண முடியாது ...

 (அப்படியே ஜெர்க் ஆகி, நினைவோட்டத்தில் கருப்பு வெள்ளை பிளாஷ் ஃபாக் சுழற்சியில் பல சமயங்களில் என் அப்பாவிடமும் கணவரிடமும் ஒரு சொல் ஒரு வாக்கு என்று பலமுறை கமிட்மென்ட் முக்கியம் என்று நான் செய்த வாதங்கள் நினைவில் வந்து மோதியது)

 அடடா மகன்டா என்ற பெருமிதத்துடன் செல்லம், அப்படியே ஸ்கூல்க்கும் நேரத்துக்குப் போகணும், டைம் கமிட்மென்ட் இஸ் ஆல்சோ இம்பார்டன்ட் என்றதும் , 
 அம்மே அதான் கமிட்மென்ட் மிஸ் பண்ணாம ஸ்கூலுக்குப் போறேன்லா என்று இன்ஸ்டன்ட் பல்பு கொடுத்தான்

 இன்று காலையில் அவன் செஸ் மாஸ்டர் சொன்னதும் நினைவுக்கு வருகிறது, "மேடம் உங்க பையனோட விளையாடும்போது, அவனைத் தோக்கடிக்க எதிராளிக்கு நானோ மத்தப் பசங்களோ டீம் அப் பண்ணி ஐடியாஸ் கொடுத்தா, கொஞ்சம் கூட அவனுக்குக் கோபமோ பதட்டமோ வரதேயில்லை, எல்லாரையும் பார்த்து சிரிச்சுகிட்டே அமைதியா ஆடி ஜெயிக்கிறான், தோத்தாலும் அவன் யோசிக்கிறானே தவிரக் குறையேதும் சொல்றதில்லை, அவன் நல்லா வருவான்" என்றபோது , மகனை உச்சிமுகர்ந்து இறுக அணைத்துக்கொண்டேன்

எந்தத் தளத்திலும் பிள்ளைகள் இயங்க பெற்றோரால் அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் ஆர்வத்தையும் பொறுத்தே பாதை அமைத்துத் தர முடியும், மற்றப்படி வெற்றியும் தோல்வியும் பிள்ளைகளின் கையில்!

மகனோ மகளோ தோல்வியோ வெற்றியோ அது அவர்களின் கையில், எனினும் இரண்டையும் சரிசமமாகப் பாவிக்கும் பாங்கும், தீர்க்கமான யோசனைகளும், யாரையும் காயப்படுத்தா செயல்களும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதியும் என நாம் எதைக் கற்றுக்கொடுக்கிறோமோ அதையே பிள்ளைகள் பிரதிபலிக்கிறார்கள்

எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே.. ....நல்ல பெற்றோர்களாய் நாம் இருப்பதுதான் முக்கியம்
 

Thursday, 9 July 2015

மண (மன) விலக்கு!




 அந்தப் பூவைக் நீ கொடுத்தபோது
 அந்த முள்ளில் குருதி வழிந்து
 கொண்டிருந்தது,
 எனக்காக நீ சிந்திய ரத்தமோ
 என்று துயருற்றேன்,
 பின் அந்தச் செடியின் துயரில்
 உண்மை அறிந்து கொண்டேன்

 அளப்பரிய அன்பை நீ
 விதைத்தப்போது உன் கண்கள்
 கண்ணீரில் கரித்தது
 நெகிழ்ச்சியில் ஏற்பட்ட
 ஆனந்தமென்று கண்ணீர் துடைத்தேன்
 பின்னாளில் ஓர் அலட்சியப் பொழுதொன்றில்
 அது உன் சாகச சிரிப்பில் விளைந்ததென்று
 நீ சொல்ல தெரிந்துக்கொண்டேன்

 மங்கள நாண் ஒன்றை
 ஆரமாய் என் கழுத்தில் நீ
 பூட்டியபோது இதமாய்க் காற்று
 வீசியது - இயற்கையின்
 வாழ்த்தென்று அகமகிழ்ந்தேன்
 உன் அகத்தின் வெளிச்சத்தில்
 கண்கூசிக் கண்ணீர் உகுத்தபோது
 மழைக்காற்றின் சாரலில்
காற்று என் கண்ணீர் துடைக்க வந்ததென்று
 புரிந்து கொண்டேன்

 அள்ளி அணைத்துக் காதலென்று
 நீ முயங்கித் தணிந்த காலமெல்லாம்
 உண்மையென நினைத்தேன்
 வயிற்றுப் பிள்ளையோடு
 கலங்கி நின்று கருக்கலைந்தபோது
 உன் சுயநலக்கூற்றைத் தாங்காமல்
 அதுவும் கலைந்தது நல்லதென்று
 கருதிக் கொண்டேன்

 பேசாமல் பாராமல்
 தவித்து நின்றக் காலமெல்லாம்
 கானலாய்ப் போயிற்று
 மனைவியென்றெ ஆனாலும்
 விலைமகளாய் எனைக் கருதி
 நீ உபயோகித்து வீசி எறிந்த காகிதமாய்
 இந்த நீதிமன்றத்தில் நான்
 உன் மணவிலக்குப் பத்திரத்தில்
 கையொப்பம் இடுகிறேன்

 அன்பெனும் அட்சயப்பாத்திரத்தை
 பிச்சைக்காரகள் ரசிப்பதில்லை
 தன் பசி தீர்ந்ததும் அவர்களுக்கு
 அதுவும் ஒரு ஓட்டைப் பாத்திரமே
 ஒரு பிச்சைக்காரனுக்கும் முட்டாளுக்குமான
 ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது
 ஒரு முட்டாளாய் நான்,
 இப்போது சிரிப்பது என்முறை!

Monday, 6 July 2015

சுதாமர்கள்


 



அளவோடு பெற்று 
நலமோடு வாழ்ந்த சுதாமன் 
பங்களாவில் வசித்த கண்ணனைக்
காண ஆவல் கொண்டு
நண்பனுக்கெனப் பழைய நினைவில்
அவலெடுத்து வந்தான் -

வாயிலில் சில பெரியமனிதர்கள்
வரவேற்பறையில் உறவினர்கள்
நிமிடங்களில் பணக்கணக்கு
நாளுக்கொரு புகழ்க்கணக்கு
எனப் பரபரப்பான அந்த நாளில்,
நண்பனென்று வந்த
விருந்தினன் வருகையில்
கண்ணனின் மனைவி சிடுசிடுக்க
கண்ணனுக்கோ கடுகடுத்தது,
தொல்லையென்று இந்த நேரத்தில்
வந்த உனக்கு நான் இல்லையென்றே
சொல்லவேண்டி உள்ளது சுதாமா
எதுவும் கேட்டிட வேண்டாம்
நொடிகளையும் வீணாக்க நான் விரும்பவில்லை
வந்த வழிச் சென்றிடு என்ற
நண்பனின் கூற்றில் நொடியில்
ஏழையானான் சுதாமன்!

கண்ணா வேண்டிட வரவில்லை
அளித்திடவே வந்தேன் -
பொன்னையும், பொருளையும் அல்ல -
அன்பையும்  நட்பையும் மட்டுமே -
அவல் கொடுத்து, பொன் பெற வந்த
சுதாமன் அல்லவே நான் - எனினும்
உன்னிலைக் கண்டு வருந்தினேன்
நீ இன்னும் இன்னும் உயரம் போ
பொன்னும் பொருளும் புகழும்
நிறைந்திருப்பினும்,
அவை போதாமல் - நீ
பாராரியாய் நிற்கிறாய் கண்ணா
நான் அல்லவே ஏழை
நீயன்றோ ஏழை - உன் நொடிகள் கூட
உன் வசத்திலில்லை
எந்தப் பொருளும்
உன் மனதை நிறைக்கவில்லை,
மேலும் மேலும் உயரம் போ கண்ணா
என்றாவது இதில் அலுப்பாயானால்
சுதாமனிடம் வா - அன்போடு
அவலும் வைத்திருப்பேன் என் கண்ணனுக்காக
அப்போதும்என்ற சுதாமனின்  கூற்றில் 
கையறு நிலைக்கொண்டான் கண்ணன்!


 

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!