Monday 6 July 2015

சுதாமர்கள்


 



அளவோடு பெற்று 
நலமோடு வாழ்ந்த சுதாமன் 
பங்களாவில் வசித்த கண்ணனைக்
காண ஆவல் கொண்டு
நண்பனுக்கெனப் பழைய நினைவில்
அவலெடுத்து வந்தான் -

வாயிலில் சில பெரியமனிதர்கள்
வரவேற்பறையில் உறவினர்கள்
நிமிடங்களில் பணக்கணக்கு
நாளுக்கொரு புகழ்க்கணக்கு
எனப் பரபரப்பான அந்த நாளில்,
நண்பனென்று வந்த
விருந்தினன் வருகையில்
கண்ணனின் மனைவி சிடுசிடுக்க
கண்ணனுக்கோ கடுகடுத்தது,
தொல்லையென்று இந்த நேரத்தில்
வந்த உனக்கு நான் இல்லையென்றே
சொல்லவேண்டி உள்ளது சுதாமா
எதுவும் கேட்டிட வேண்டாம்
நொடிகளையும் வீணாக்க நான் விரும்பவில்லை
வந்த வழிச் சென்றிடு என்ற
நண்பனின் கூற்றில் நொடியில்
ஏழையானான் சுதாமன்!

கண்ணா வேண்டிட வரவில்லை
அளித்திடவே வந்தேன் -
பொன்னையும், பொருளையும் அல்ல -
அன்பையும்  நட்பையும் மட்டுமே -
அவல் கொடுத்து, பொன் பெற வந்த
சுதாமன் அல்லவே நான் - எனினும்
உன்னிலைக் கண்டு வருந்தினேன்
நீ இன்னும் இன்னும் உயரம் போ
பொன்னும் பொருளும் புகழும்
நிறைந்திருப்பினும்,
அவை போதாமல் - நீ
பாராரியாய் நிற்கிறாய் கண்ணா
நான் அல்லவே ஏழை
நீயன்றோ ஏழை - உன் நொடிகள் கூட
உன் வசத்திலில்லை
எந்தப் பொருளும்
உன் மனதை நிறைக்கவில்லை,
மேலும் மேலும் உயரம் போ கண்ணா
என்றாவது இதில் அலுப்பாயானால்
சுதாமனிடம் வா - அன்போடு
அவலும் வைத்திருப்பேன் என் கண்ணனுக்காக
அப்போதும்என்ற சுதாமனின்  கூற்றில் 
கையறு நிலைக்கொண்டான் கண்ணன்!


 

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!