அந்தப் பூவைக் நீ கொடுத்தபோது
அந்த முள்ளில் குருதி வழிந்து
கொண்டிருந்தது,
எனக்காக நீ சிந்திய ரத்தமோ
என்று துயருற்றேன்,
பின் அந்தச் செடியின் துயரில்
உண்மை அறிந்து கொண்டேன்
அளப்பரிய அன்பை நீ
விதைத்தப்போது உன் கண்கள்
கண்ணீரில் கரித்தது
நெகிழ்ச்சியில் ஏற்பட்ட
ஆனந்தமென்று கண்ணீர் துடைத்தேன்
பின்னாளில் ஓர் அலட்சியப் பொழுதொன்றில்
அது உன் சாகச சிரிப்பில் விளைந்ததென்று
நீ சொல்ல தெரிந்துக்கொண்டேன்
மங்கள நாண் ஒன்றை
ஆரமாய் என் கழுத்தில் நீ
பூட்டியபோது இதமாய்க் காற்று
வீசியது - இயற்கையின்
வாழ்த்தென்று அகமகிழ்ந்தேன்
உன் அகத்தின் வெளிச்சத்தில்
கண்கூசிக் கண்ணீர் உகுத்தபோது
மழைக்காற்றின் சாரலில்
காற்று என் கண்ணீர் துடைக்க வந்ததென்று
புரிந்து கொண்டேன்
அள்ளி அணைத்துக் காதலென்று
நீ முயங்கித் தணிந்த காலமெல்லாம்
உண்மையென நினைத்தேன்
வயிற்றுப் பிள்ளையோடு
கலங்கி நின்று கருக்கலைந்தபோது
உன் சுயநலக்கூற்றைத் தாங்காமல்
அதுவும் கலைந்தது நல்லதென்று
கருதிக் கொண்டேன்
பேசாமல் பாராமல்
தவித்து நின்றக் காலமெல்லாம்
கானலாய்ப் போயிற்று
மனைவியென்றெ ஆனாலும்
விலைமகளாய் எனைக் கருதி
நீ உபயோகித்து வீசி எறிந்த காகிதமாய்
இந்த நீதிமன்றத்தில் நான்
உன் மணவிலக்குப் பத்திரத்தில்
கையொப்பம் இடுகிறேன்
அன்பெனும் அட்சயப்பாத்திரத்தை
பிச்சைக்காரகள் ரசிப்பதில்லை
தன் பசி தீர்ந்ததும் அவர்களுக்கு
அதுவும் ஒரு ஓட்டைப் பாத்திரமே
ஒரு பிச்சைக்காரனுக்கும் முட்டாளுக்குமான
ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது
ஒரு முட்டாளாய் நான்,
இப்போது சிரிப்பது என்முறை!
No comments:
Post a Comment