Saturday 25 July 2015

நிகழாதது ஆனால் நிகழ்வது!



ரோஹிணிக்கு கல்யாண வயது, அம்மாவும் அப்பாவும் அவளுக்கு ஒவ்வொரு மாப்பிள்ளையாய்ப் பார்த்தாலும், அவளுக்கு ஒவ்வொருவரையும் நிராகரிக்க ஒவ்வொரு காரணம் இருந்தது, ஒருவனுக்குக் கருப்பு நிறம், ஒருவனுக்கு வளைந்த மூக்கு, ஒருவன் கொஞ்சம் குள்ளம், ஒருவன் ரொம்பவே உயரம், ஒருவனுக்குச் சமைக்கத் தெரியவில்லை, ஒருவனுக்கு உடன்பிறந்தவர்கள் நிறையப்பேர், ......அப்படியே எல்லாம் பிடித்துப் போனாலும் அவளுடைய அம்மா அப்பா கேட்ட வரதட்சிணையைப் பிள்ளை வீட்டினரால் கொடுக்க முடியவில்லை ....

 ஒருவழியாய் ரோஹிணிக்கு ஒருவனுடன் திருமணம் நடந்தது, அவனுக்கு அடுத்து இரண்டு வயது வித்தியாசத்தில் ஒரு தம்பி இருந்தாலும், அவன் அழகாய் இருந்ததால், பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று ரோஹிணி திருமணத்துக்குச் சம்மதித்து விட்டாள் ....


 ரோஹிணியின் கணவன் பெயர் சரவணன்.  திருமணத்தன்று, சரவணனுக்கு ரோஹிணியின் தோழிகளுக்குக் கைக்குலுக்கிக்  கைவலி எடுத்துவிட்டது, ரோஹிணியின் உறவினர் கால்களில் எல்லாம் விழுந்து எழுந்து அவனுக்கு முதுகு வலியும் வந்து விட்டது, அவன் பெற்றோர் தருவதாய்ச் சொன்ன சில லட்ச ரூபாய் வரதட்சணை எப்படியோ கடைசிச் சமயத்தில் வந்ததால் தான் ரோஹிணி, சரவணன் கழுத்தில் தாலியே கட்டினாள்......எப்படியோ சரவணுக்கு எல்லாம் சரியாய் நடந்தது!

காலையில் அடுப்படியில் வேலை செய்து, அவனும் பணிக்குச்  சென்று, பிறகு வந்து ரோஹினியின் பெற்றோர்களுக்குத் தேவையானதை செய்து , ரோஹிணி அலுவலகத்தில் இருந்து வரும்முன் இரவு உணவையும் தயார் செய்து, இரவில் ரோஹிணியின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும், எப்படியோ கர்ப்பப்பையை இன்னமும் கடவுள் ஆணுக்கு மாற்றவில்லை, இல்லாவிட்டால் அதையும் சேர்த்து சுமக்க வேண்டும் என்று அவ்வப்போது ஆறுதல் அடைந்த சரவணுக்கு, அடிக்கடி ரோஹியிணின் பெற்றோர் ரோஹிணியை அழைத்துத் தனியாகப் பேசியது கலக்கத்தை வரவழைத்தது ....

 திருமணம் ஆகி இரண்டு வருடங்களில், சரவணன் பயந்து எதிர்பார்த்த இடியை அன்று ரோஹிணி அவன் தலையில் இறக்கினாள்,
 "நீ உன் அம்மா வீட்டுக்குப் போ சாரு"
 சாரு என்றதில் அவனுக்குத் தலையில் பனிக்கட்டியை வைத்தது போல் இருந்தாலும், குரல் பிசிறடிக்க
 "ஏங்க நான் வீட்டு வேலை, வெளி வேலை எல்லாம் சரியாதானே செய்யுறேன், வரதட்சிணைக்  கூடச் சொன்ன மாதிரி செஞ்சுட்டாங்களே, எனக்கு அடுத்து தம்பி இருக்கான் .........எனக்கு ரொம்பப் பயமா இருக்கு , என்னை வீட்டை விட்டு அனுப்பாதீங்க ப்ளீஸ் ....
 அதற்கு மேல் சாரு என்ற சரவணனால் பேச முடியவில்லை......கண்ணீர் ஆறாகப் பொங்கியது ...

 சாரு ப்ளீஸ் அழாதே, கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு, இன்னும் நான் அம்மா ஆகலே, சோ ......என்ற ரோஹிணியை, சட்டென்று இடைமறித்தான் சாரு
 ஏங்க நீங்களும் டெஸ்ட் பண்ணிக்கிட்டா சரி பண்ணிடலாம்ன்னு டாக்டர் சொன்னாரே என்று சாரு சொல்லிக்கொண்டிருக்கும் போதே பளாரென்று ஓர்  அரைச் சாருவின் கன்னத்தில் விழுந்தது மாமனாரிடம் இருந்து ....

 புள்ளைக்கொடுக்க வக்கில்லை, பேசுற பேச்சப் பாரு ...நான் அப்பவே சொன்னேன் அந்தச் சுப்பையாப்  பையனையே கட்டிக்கச் சொல்லி கேட்டாதானே ....என்ற அப்பாவை இடைமறித்தாள் ரோஹிணி

 அப்பா ப்ளீஸ் , நா பேசிக்கிறேன் .....இங்கே பாரு சாரு, நீ வீட்டை விட்டு போக வேண்டாம், நான் சொல்றதை கேட்டா நாம எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம், உன் அப்பா அம்மா சுமையும் குறையும் .........

 கண்களில் ஆர்வம் மின்ன "சொல்லுங்க" என்றான் சாரு

 ம்ம்ம் உன் தம்பி சரியா படிக்கலை, சரியான வேலையும் இல்லை, அவனுக்கு யாரு பொண்ணுக்கொடுப்பா சொல்லு? உனக்கும் ஆண்மை இல்லை, அதனால நான் அவனை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன் .....

 என்னங்க ....என்று அலறினான் சாரு ......நான் உங்களுக்கு என்ன குறை வெச்சேன், ப்ளீஸ் நீங்க டெஸ்ட் பண்ணிக்க வேண்டாம், நாம ஒரு குழந்தையத்  தத்து எடுத்துக்கலாம் .....

 சரிதான் யார் வீட்டு சொத்தை யார் அனுப்பவிக்கறது என்று நொடித்தாள் ரோஹிணியின் அம்மா...

 இங்கே பாரு சாரு , நான் உங்க அம்மா அப்பாகிட்டே பேசிட்டேன் , உன் தம்பியும் ஒத்துகிட்டான் ....நீயும் ஒத்துகிட்டா எல்லாரும் ஒண்ணா இருக்கலாம் இல்லைனா உன்னை விவாகரத்து செய்யறதைத் தவிர வேற வழியில்லை ....நான் இப்போ ஆபீஸ் கிளம்புறேன், நீ வேணும்னா ஆபீஸ் போகாம லீவ் போட்டுட்டு யோசிச்சுப் பாரு என்று கிளம்பினாள் சாரு ....

 அழுது கொண்டே இருந்தான் சரவணன், என்னமோ அவனுக்கு வாழ்க்கையே இருட்டிக் கொண்டு வந்தது, தம்பியும் ஒத்துக்கொண்டான் என்றதை அறிந்ததும் அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ......அழுது அழுது தூங்கிப் போனான்

 மாலையில் வீடு திரும்பிய ரோஹிணிக்கு வீட்டு வாசலில் அதிர்ச்சிக்  காத்திருந்தது.....சாரு என்கிற சரவணன், மனைவியின் ஆசைக்காக, தம்பியின் வாழ்க்கைக்காக,  தனக்கு ஆண்மை இல்லாத ஏக்கத்தில் தற்கொலைச்  செய்துகொள்வதாகக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டு நிரந்தரமாய்ப் பிரிந்து விட்டிருந்தான்

 விசாரணைகள் விசாரிப்புகள் முடிந்த ஆறாவது மாதத்தில், சாரு என்ற சரவணின் தம்பி, நீரு என்ற நிரஞ்சனை மணமுடித்த ரோஹிணி பின்வருமாறு கூறினாள்;

 "நீரு, அண்ணன் போட்டோவை கும்பிட்டுக்க....உன் அண்ணனோட வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது, அவனோட ஆசிர்வாதத்தை வாங்கிக்க!" 

:-) :-) :-)

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!