Wednesday, 4 May 2016

மரணமெனும் விடுதலை


நடு இரவில்
நடுமார்பில் நறுக்கென
தைத்த வலியை
யாரிடம் சொல்வதென 
யோசிக்கையில்
 பூட்டிய கதவுகளின்
 பின்னே இருந்தது
 பூட்டிய மனங்களே யென
உணர்ந்தபோது
அவனுக்கு  
 வியர்க்க ஆரம்பித்திருந்தது 

 உற்றத்தோழனிடம்
 உரைக்கவும் மனமில்லை
 அவனுக்கு வெற்றிடமில்லை
 இவன் போனால் இன்னொருவன் 

 உறவுகளிடம் கடனில்லை
 அவர்களுக்கும் சுமையில்லை
 பதினாறு நாள் காரியத்தில்
 எல்லாம் கரைந்துவிடும் 

அப்படியும் இப்படியுமாக
 ஒவ்வொரு கதவுகளையும்
 அந்தக் கடைசி நிமிடங்களில்
 மனதின் வழியே திறந்து பார்க்கிறான்
 தோற்ற பாடம் முதல்
 கற்ற  பாடம் வரை
 அந்திமத்தின் நிழல்கள் படிகிறது 

 தனித்திருந்த அந்த இரவின் இருளில்
 பின்னோக்கியக் காட்சிகளை விட
 மரணம் அத்தனை பயங்கரமாய் இல்லை
 அவனுக்கு 

 வாய்க்கு ருசியாய் ஓர் உணவும்
 காதுக்கு இனிமையாய் ஒரு பாடலும்
 காதலில் தோற்காத ஒரு பொழுதும்
 சாய்ந்து கொள்ள ஒரு தோளும்
 இனி வந்தாலும் அவனுக்கு நேரமில்லை 

 மனதில் தட்டிய கதவுகள் அத்தனையும்
 சுயநலக் கூட்டுக்குள் ஒடுங்கியிருக்க
 அவனுக்கு மூச்சிரைத்தது
 அவனின் வேதனை பொறுக்காமல்
 அவனின் ரத்தம் மட்டும் இதயம் விட்டு
 மூக்கின் வழி எட்டிப்பார்க்க
 ஒரு கடைசிப் புன்னகையில்
 உயிர்விட்டான் அவன்
 விடியலில் திறக்கப்போகும்
 அத்தனை கதவுகளுக்காகவும்


 

இரவின்_விடியல்





அந்த தேவாலயத்தில்
இரவின் கருமையை
மெழுகுவர்த்தியொன்று
மெதுவாய்
தின்றுக் கொண்டிருந்தது

பரமபிதாவின் பாதங்களில்
ஏனையோர் இறக்கி வைத்த
பாவச்சாம்பலும்
கரைந்துக்கொண்டிருந்தது

பசியால் துவண்ட நாயொன்று
வாயிலில் யார் வரவையோ
எதிர்நோக்கி
கண்ணயராமல் காத்திருந்தது

சட்டென்று வீசிய காற்றில்
மெழுவர்த்தி அணைய
காட்சிகள் மறைந்தன
தீர்க்க முடியாச் சுமைகளில்
பரம பிதா இருளில் கரைய
மண்டியிட்டு மடிந்திருந்த நான்
வாசலில் உள்ள நாய்க்கு
அன்னமிடச் சென்றேன்
மெல்லிய வெளிச்சக்கீற்றில்
மனம் மட்டும் விடிந்தது!

#இரவின்_விடியல்

‎அந்நிய_தே‬(நே)சம்

பெயர் அறியா
மெல்லிய மலரொன்று
காற்றில் உதிர்ந்து தவழ்ந்தது

காற்றில் பயணித்து
கடந்துபோன சிலரின் முகம்
வருடியபோது
அது தூசியென்றானது


பூங்காவில் உலவிய குழந்தையின்
கையில் அது விளையாட்டு
தோழனானது

யாரோ ஒருவனின் காதலியின்
கன்னம் தடவிச் சென்றபோது
அது அவனின் கவிதையானது

தாவித் திரிந்த நாயின் கண்களுக்கு
அது தன்னைப்போல்
மற்றுமொரு உயிரானது

யாரின் மொழிகளிலும்
தனக்கொரு பெயரிடா
தன் தன்மையறியா
பயணிகளை விட்டு
மலர் மலராய்
அதன் பயணம் முடித்தது
ஒரு மரத்தினடியில்!

‪#‎அந்நிய_தே‬(நே)சம்

மறதியே_கொடை‬

அலைக்கற்றை ஊழலில்,
கும்பகோண மகாமகத்தையும்,
கல்யாண அட்டகாசத்தை மறந்தோம்,
பின்பு பத்திரிகை அலுவலக எரிப்பில்
உயிரிழந்த ஊழியர்களை மறந்தோம்,

ஒற்றைக்குடும்பம்,
தமிழ்நாட்டின் கோடீஸ்வர
முதலாளிகள் ஆனதை மறந்தோம்,
பேருந்து எரிப்பில்
உயிரிழந்த மாணவிகளை மறந்தோம்,

வயதில் மூத்த மருத்துவர்
அவமதிக்கபட்டதை மறந்தோம்,
பள்ளிக்குழந்தைகள்
உயிரிழந்ததை மறந்தோம்,
பள்ளிக்கல்வியின்
குறைபாடுகளை மறந்தோம்,
சமஸ்கிருத வாரம் கொண்டாடியதை
திருவள்ளுவர் சிலையில் மறந்தோம்,

ஈழப்படுகொலைகளை மறந்தோம்,
ஒருமணி நேர
உண்ணவிரதக் கூத்துக்களை மறந்தோம்,
சொத்து வழக்குகளை மறந்தோம்,
தொழில்கள் நலிந்து போனதை மறந்தோம்,
விவசாயிகளின் தற்கொலைகளை மறந்தோம்,
9000 கோடியை
எளிதில் இழந்ததை மறந்தோம்,

வருமானத்தின் சேமிப்புத்தொகையை
திரும்பப்பெற நிர்ணயித்த
வயதுவரம்பு கேலிக்கூத்தை மறந்தோம்
கூடங்குளத்தை மறந்தோம்,
கெய்யிலுக்கு இட்ட கையெழுத்தை மறந்தோம்,
நியூட்ரினோவை மறந்தோம்,

மக்களுக்கு எதிராக
உதிர்த்தப் பொன்மொழிகளை மறந்தோம்,
பெட்ரோல், டீசல், பால், பேருந்து
கட்டண உயர்வுகளை மறந்தோம்,
போபர்ஸ், சவப்பெட்டி,
ஆதர்ஷ் வீடுகள் என எல்லாவற்றையும் மறந்தோம்,

கொலைகள், ஊழல்கள், கொள்ளைகள்
என அவ்வப்போது மறந்தோம்
இவர்கள் அவர்கள் என எல்லோரும்
நாம் தண்ணீரில் மூழ்கியபோது
ஓடிப்போனதையும் மறந்தோம்

கழுத்தைப்பிடித்து வரிகளை வசூலித்து
மலிவான தரமற்ற பொருட்களில்
இலவசமானது நம்
மானமென்பதையும் மறந்தோம்

அட மறந்தால் என்ன?
அடிக்கும் வெயிலில் நாம்
மூழ்கடித்த வெள்ளத்தை
மறப்பது இயல்புதான்
இந்த வெயிலில் நிகழும்
மரணங்களை
பின் ஒரு பூகம்பத்திலோ
ஆழி வெள்ளத்திலோ
மறக்கப்போவதும் அப்படித்தான்

மரங்கள், மலைகள் வளங்கள்
அழிந்து கொண்டியிருக்கும் தேசத்தில்
வண்ணத்திரை ஊழியர்களின்
சந்தர்ப்பவாத அரசியல் அறிமுகத்தில்
நாம் எல்லாவற்றையும் மறப்போம்

 குடிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
சாராயம் நிறைந்திருக்கும் போதையில்
நாம் மதியை இழப்போம்
சாதியும் மதமும் கொம்பு சீவிவிட்டு
வருகையில் நாம் உயிரையும் இழப்போம்

இந்த தேர்தலில்
வருகிறவர்கள் வரலாம்
இது இலவச ஏல பூமி
பாடங்களை பள்ளியில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
மறந்துப்போகும் மனிதர்கள் நிறைந்த பூமி

எங்கள் ஒருவிரல் ஆயுதத்தை
நாங்கள் உணரும்வரை
எங்கள் முதுகெலும்பு நிமிரும்வரை
வருகிறவர்கள் வரலாம்
அதுவரை எங்களின் (மக்களின்) ‪#‎மறதியே‬
உங்களின் (அரசியல்வாதிகளின்) கொடை!!!
‪#‎மறதியே_கொடை‬

கீச்சுக்கள்!

எதிர்ப்பார்ப்புகளை உடைத்துப் போட்டுவிட்டு, ஏமாற்றங்களை விழுங்கிக் கொண்டு நாம் கடந்துபோகையில், ஜென் நிலையில் இருப்பதாக மனது நினைக்க, "மாட்டிக்கிட்டான் ஏமாளி", என்று நினைக்கிறது உலகம்!

*************************

தேர்தல் பரபரப்பில், ஒருவரின் பெயரிலோ பழக்கத்திலோ, அல்லது எழுத்தின் மூலமாகவோ ஒருவரின் சாதியைப் பற்றித் தெரிந்துக் கொண்டோ, அல்லது வெளிப்படுத்திக் கொண்டோ இங்கே கூடிக்கொண்டு கொண்டாடுபவர்களும், அடுத்தவர்களை இழிவாகப் பேசுபவர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்!
இருவேறு கட்சிகளின் மீதான தங்கள் அபிமானங்களை, இங்கே சாதியத்தின் வழியாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள், இதில் ஒன்றை இவர்கள் அனைவரும் மறந்துப் போகிறார்கள், அது, எந்தச் சாதியினராக இருந்தாலும், உங்கள் சாதியைக் கொண்டு நீங்கள் இங்கே போற்றிப்புகழும் தலைவர்கள் எல்லாம், தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் பொதுவானவர்களே, அந்தப் பொதுவானவர்களின் வாசல், உருகிய உங்கள் சாதியப் பாசத்துக்காக ஒருபோதும் திறக்காது, பணம் என்ற மிகப்பெரும் சாவி மட்டுமே தேவை!
ஆகையால், சாதியக் கூப்பாடுகளைத் தவிர்த்துவிட்டு, கட்சிப் பாகுபாடின்றி, தொகுதிக்கு நன்மை செய்யும் ஒருவருக்கு வாக்களியுங்கள், சிறிது ஜனநாயகம் மலரட்டும்!

************************

அரசியல் பேசாதே என்பார்கள்
அரசியல் செய்யாதே என்பார்கள்
அரசியலால் அடிமைப்பட்ட மக்கள்

கீச்சுக்கள்!

மே 16 நிச்சயம் ஓட்டுப்போடுங்கள், அப்படியே அன்றைய தினம் ஒரு மரக்கன்றை நட்டு வையுங்கள், அடுத்த ஐந்து வருடங்களில் மரங்கள் பலன் தரும், இந்தப் பூமியை தேற்றும்! 🤔
*******************
அன்பை வெளிப்படுத்தும் சிறிய மெனக்கெடல் கூட இல்லாத எந்த நட்பும் உறவும் நீடிப்பதில்லை!

*****************************
பேருந்து ஓட்டை என்றாலும், பள்ளிக் கட்டிட இடிபாடு என்றாலும், மின்தூக்கியில் மரணம் என்றாலும், கட்டும்போதே இடிந்து விழுந்த வீடுகள் என்றாலும், சாலைப் பழுதில் நடக்கும் விபத்துக்கள் என்றாலும், நடக்கும் எல்லா விபத்துக்களுக்குப் பின்னாலும் யாரோ ஓர் அரசு ஊழியனின்/அதிகாரியின்/வியாபாரியின் மெத்தனமும், அலட்சியமும், ஆணவமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? மறுக்க முடியாதெனில் இந்த விபத்துக்கள் அனைத்தும் கொலைகளேயன்றி வேறென்ன?

**********************


சில நாட்களுக்கு முன்பு, பிறந்து சில மாதங்களேயான ஒரு பெண்குழந்தையை ஒருவன் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகப் படித்தேன், அவன் ஜாமீனில் வந்தபோது, அந்தக் குழந்தைப் பெற்றவன், அந்தப் பாதகம் செய்தவனின் கைகளை வெட்டியதாகவும் செய்தி, இன்று பெங்களூரில் ஆட்டோவில் ஏறிய பெண்ணிடம், ஆட்டோ டிரைவர் நீ ஒழுங்காய் உடை அணிந்து இருக்க வேண்டும், ஒரு வேசியைப் போல் உடை அணிவது தவறு என்று காலச்சாரக் காவலனாய் மாறிய அவலமும் செய்தியாக!
மேலை நாட்டில் இருந்து எல்லாவற்றையும் கற்கும் நாம், அவர்கள் தம் நாட்டுப் பெண்களை மதிக்கும் பாங்கை மட்டும் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை. ஆடை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன், இதைப் பற்றிப் பெண்களும், பெண்மை போற்றும் ஆண்களும் எழுதிப் பேசி சலித்துப் போய் இருப்பார்கள்.
சாலைகளில் குடித்து விட்டு ஆடைகளற்று இருக்கும் எந்த ஆண்மகனையும் எந்தப் பெண்ணும் வன்புணர்ச்சி செய்வதில்லை , லுங்கி, வேஷ்டி, பெர்மூடாஸ் என்று தொடைகள் தெரிய உடைகள் அணிந்து, மேல் சட்டையும் இல்லாமல் சாலையில் திரியும் எந்த ஆண்களிடமும் எந்தப் பெண்ணும் அவனின் உடைப் பற்றிய எந்தப் புகாரும் சொல்வதில்லை!
கருப்பை என்ற ஒன்றை ஆண்களுக்கும் வைத்துவிட்டால் ஆணின் மனப்பாங்குச் சிறிதேனும் மாறலாம். ஆண்களின் சுதந்திரத்தை, பெண்கள் பறிப்பதில்லை, ஏற்கனவே தறுதலையாய் திரிபவர்களைச் சட்டம் சரி செய்யட்டும் , இனியேனும் நம் வீட்டு ஆண்களையும் பெண்களையும் அவரவர் சுதந்திரத்தை மதிக்கும் நல்ல மனிதர்களாய் வளர்ப்போம்

மே 16

மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப்போதே தயாராகிக் கொள்ளலாம், ஜெயிக்கும் கட்சியைப் பொறுத்துக் காட்சிகள் மாறும், அல்லது கூடும்;

1. வெயிலில் பறந்த அலுப்புத் தீர ஏதாவது ஒரு பழைய எஸ்டேட்டில் அல்லது புதிதாய் ஒன்றை விலைக்கு (?!) வாங்கி ஒய்வு!

2. ஏதோ ஒரு வாரிசுக்கோ பிறக்கப் போகும் ஏதோ ஒரு பேரனுக்கோ பேத்திக்கோ புதிதாய் ஒரு தொழில் தொடங்க, அல்லது மத்தியில் வாய்ப்புக் கேட்டு டெல்லி பயணம்!

3. திரை நட்சத்திரங்களின் போற்றிப் புகழும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்!
4. ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் கொடுக்கப் போகும் ஏதோ ஒரு டாக்டர் பட்டம்!

5. முதுகு வலிக்கு மருத்துவரிடம் சிகிச்சை (இங்குக் கூட்டம் அதிகமாய் இருக்கும்)!


6. பதவி ஏற்பில் தொடங்கி அடுத்த ஐந்து வருடங்களுக்கு அலுவலகம் செல்வதற்கும், கட்சி அலுவலகம் செல்வதற்கும் சாலை போக்குவரத்து, பலமணி நேரம் நிறுத்தப்படும், சென்னை மக்கள் வெயிலில் கறுத்து, பின்வரும் மழை வெள்ளத்தில் வெளுப்பார்கள்!

7. எல்லாத் தொலைக்காட்சிகளும் இங்கே அடித்தார் அங்கே அடித்தார் என்று காமெடி தர்பார்களாய் மாறிப்போகும்!

8. திடீரென்று கூட்டணிகள் உடையும், எங்காவது இடைத்தேர்தல் வரும்!

9. புதிதாய் ஊழல் வழக்குகள் பாயும்!

10. பழைய வழக்குகள் புத்துயிர் பெரும், அல்லது பரணில் ஒளித்து வைக்கப்படும்!

11. கோடிக்கணக்கில் புதிய திட்டங்களின் அறிக்கைகள் மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு வரும்!

12. இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்கள், மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் எல்லாம் அடுத்தத் தேர்தல் வரை அப்படியே காத்திருக்கும்!
முக்கியமாய் "மக்களே" என்று யாரும் நம்மை உருகி உருகி அழைக்க மாட்டார்கள்!!!

மனதறியும் நேசம்

சோர்ந்த விழி பார்த்து
பசியறிவதற்கும்
கையின் குளிர் உணர்ந்து
அரவணைப்பதற்கும்
நலமே என்று ஒலிக்கும்
குரலில்
பொய்யுணர்வதற்கும்
தேவையொரு
மனதறியும் நேசம்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!