Tuesday 27 June 2017

மரணத்தின்_வெளிச்சம்!

Image may contain: one or more people

பட்டாபிக்கு ஏத்த ஜோடியென்று
அலமு மாமி நெட்டுயிர்த்ததில்
அத்தனை சிலிர்த்தது
ஏன் என்று இன்றுவரை
எனக்கு புரியவில்லை

ஒரே அலுவலகத்தில்
வேலைப்பார்த்தும்
கீதாவிடமோ மாலாவிடமோ
உனக்கு வராத காதல்
என்னிடம் ஏன் வந்தது
அவா வேறு சாதியென்றாய்
நினைவிருக்கிறது
பின்னாளில் அத்தைப் பெண்
பாக்கியத்திற்குச்
சொத்திருந்தாலும்
அதைப் பிரிக்க உடன்பிறந்தார்கள்
உயிருடன் இருந்தது
உனக்கு பிடிக்கவில்லை
அத்தைப் பாக்கியத்துக்கும்
அது புரியாமலில்லை

புக்ககத்தில் காலடியெடுத்து
வைத்த வேளையில்
அத்தையின் கண்களிலும்
அவளின் பெண்ணின் பார்வையிலும்
தப்பித்தலுக்கான ஆசுவாசத்தை
நீ பொறாமையென்றாய்
உன் விரல் தீண்டலில்
உன் பார்வையின் குரூரத்தை
நான் கவனித்தேனில்லை

ஒன்றாய் பணியிடத்தில்
வேறு வேறு பணி செய்தாலும்
உன்னைவிட அதிகமாக
உழைத்தாலும்
அதிகமான ஊதியத்தின்
கால்காசு பெற
உன் கால்கள் பற்ற வைத்தாய்
அடுத்திருக்கும் தங்கைகளுக்கு
அப்பனின் சம்பாத்தியம்
போததென
உன் முதல் தாக்குதலை
சகித்துக்கொண்டேன்
அது தோல்வியில்லை

காலையில் பெட் காபியில்
நீ தொடங்க
நான் அவ்வேளையில்
மதிய சமையலை முடித்திருப்பேன்
உன் பள்ளியெழுச்சிக்குப் பின்
உன் மடிப்புக் கலைந்த
சட்டைக்காக
என்னை சோம்பேறியென்றாய்
நிறைந்த வயிற்றுடன்
நீ முன்னே செல்ல
வயிற்றில் கால்பங்கு உணவுடன்
நான் பின்னே வர
"என் ஆத்துக்காரிக்கு மேக்கப்
செய்யவே நேரம் போதலை!"
என்று சுப்புவிடம் விட் அடித்துக்
கொண்டிருந்தாய்
என் வயிற்றில் எரிந்த நெருப்பை
கழுத்தில் இருந்த மாங்கல்யம்
தாங்கிக் கொண்டது
உள்ளே குவிந்த வெப்பத்தை
நீ அறிந்ததேயில்லை

அடுத்த சீட்டு
பங்கஜம் வற்புறுத்தி
வாங்கச் செய்த சேலையை
"யாரை மயக்க
இதுவெல்லாம்" என்ற நீ
சாதாரண சேலைக்கும்
"நான் என்ன பிச்சைக்காரனா
ஏண்டி வேஷம்?"
என்று துவேஷித்தாய்
சேலையில்லாமல்
நடுத்தெருவில் நின்றால்
உன் ஆண்மை பறிபோகுமா
என்ற குரூரம் ஏன் உதித்தது
நான் யோசிக்கவில்லை

கடும் காய்ச்சலில்
நானிருந்தாலும்
காலையில் காபி தொடங்கி
இரவில் புணர்ச்சி வரை
உன் உலகம் வழக்கம்போல்
இயங்கியது
"ஏன் லீவ் போடுறாய்
டிராமா பண்ணாமே கிளம்புடி"
என்ற உனக்கு
உன்னை தொற்றிய காய்ச்சலிலோ
உலகமே நின்றுவிட்டது
ஆருயிர் உனக்கு அலுவலகம்
செல்ல மனமில்லை
உடன் உனக்கு
பணிவிடை செய்ய
"ஆத்துக்காரிக்கும் தொத்துஜீரம்"
என்று இரட்டை அர்த்தத்தில்
கெக்கேபிக்கவேன இளித்து
எனக்கும் சேர்த்து
நான் நடத்தாத
நாடகத்தை
நீ அரங்கேற்றினாய்
எனக்கு சகிக்கவில்லை

பால்காரனிலிருந்து
கீரைக்காரத் தாயம்மா வரை
போலிகளில் ஒளிந்த
உன் உருவத்தில்
நீ காவியத்தலைவன்
நானுன் அடங்கா
அசட்டுக்குதிரை
அலுவலகம் செல்லும்போதும்
மேலாதிகாரியின் நினைவில் கூட
உன் வன்புணர்ச்சி
காவியக்கூடலாக விரியும்வண்ணம்
உன் வர்ணனைகள்
என்னை முகஞ்சுளிக்க வைக்கின்றன
முணுக்கென மூக்கில் விடைத்த
கோபம் கூட
சட்டென கரைந்துவிட்டது
இன்னமும் நான் கருவுறவில்லை!

காலத்தின் மாறுதலில்
உன் வஞ்சமும் வன்மமும்
உன்னை மரணமாய்
தழுவிய நாளில்
அலமுவுக்கும் அத்தைக்கும்
பொங்கிய கண்ணீரில்
சில துளிகள் கடனாய் தர
அவர்கள் சித்தமாய் இருந்தார்கள்
நானோ சித்தத்தில் இருந்த
சிறுதுளி பித்தத்தையும்
விரட்டிக்கொண்டிருந்தேன்
அழுது கரைய விரும்பவில்லை

காவியத்தலைவனின்
ஆண்மையில் குறையென்று
உறுதிசெய்த நாளில்
உன் நண்பனுடன்
நீ செய்த
காரியத்தில் எனக்கு தெளிவில்லை
எனினும்
கருப்பைக்குள் உன் ஆணாதிக்கம்
உருண்டு திரண்டிருக்கிறது
ஊரறியா ரகசியத்தை
என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

அழு அழு என்கிறது உலகம்
வயித்துப்பிள்ளைக்காரி வாய்விட்டழு
என்கிறாள் அத்தை
அவள் பெண்ணைக் காப்பாற்றிய
சாமர்த்தியத்தில் அவள் சிறு
துளி எனக்கு ஈந்தாளில்லை
இப்போது அவளின் இந்த ஈரத்தில்
எனக்கு உடன்பாடில்லை

மாப்பிள்ளையின் மரணம்
மைத்துனனின் மரணம்
என்று உறவுகள் உன் மரணத்தில்
கரைந்துக்கொண்டிருக்க
உள்ளுக்குள் எனக்கும் கரைந்து
குருதிக் கொப்பளிக்க
ஓரே நேரத்திலடைந்த
இரு விடுதலையில்
உலகம் சூட்டப்போகும்
பட்டப்பெயர்கள் பற்றிய கவலையின்றி
நான் வெடித்துச்சிரிக்கிறேன்
மன்னவா மறந்தும் நீ வந்துவிடாதே!!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!