Tuesday 27 June 2017

அப்பா

என் அப்பாவிற்கு நான் ஐந்தாவது பெண், முதல் பெண்ணும் கடைசிப்பெண்ணும் எஞ்சியிருக்க மற்ற இரண்டு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்குழந்தையும் இறந்துப்போனார்கள், பள்ளியில் படித்தப்போதும், அதற்குபின்பும் அவர் இறப்பு வரையில் அவரை எதற்காகவும் கையேந்த வைத்ததில்லை, ஆசைப்பட்ட படிப்பிற்காகவும் அவரை அலைய வைத்ததில்லை, அவரை முதியோர் இல்லத்திலோ, நடைபாதையிலோ விட்டுவிடவில்லை, நான் விருப்பட்டப் படிப்பை படிக்க முடியாமல் போனதற்காக, வறுமையான ஒரு வாழ்க்கை நிலையைத் தந்ததற்காக, குடித்துவிட்டு அவரை அடித்ததில்லை, அவரை அவமானப்படுத்தியதில்லை, சுட்டிக்காட்டி குற்றம்குறைக்கூறியதில்லை, அவரின் இறுதிநாட்கள் என்பது பத்துமாதம் படுக்கையில் கழிந்தது, மூத்திரத்தையோ மலத்தையோ புண்களையோ சுத்தம் செய்ய முகஞ்சுளித்தில்லை, இறந்தப்பிறகு உறவினர் சூழ, தகுந்த மரியாதையோடு, என் உழைப்பின் வருமானத்தைக்கொண்டே கடன் வாங்காமல் மிகச்சிறப்பாக அனுப்பிவைத்தேன், என் திருமணமோ, வாழ்க்கையோ எந்தச் சூழ்நிலையிலும் பெற்றவர்களை விட்டுவிடவில்லை, எந்தத் துயரத்திலும் தோல்வியிலும் தற்கொலைச் செய்துக்கொள்ளவில்லை, இது சுயபுராணம் அல்ல, இது பெண்பிள்ளைகளை வெறுக்கும் தகப்பன்களுக்கான கேள்வி மட்டுமே, எந்தவிதத்தில் என்னைப் பெற்றவர் தாழ்ந்துப்போனார்? 

ஒன்றே ஒன்றை மட்டும் அவர் சிறப்பாகச் செய்தார், "என் முடிவுகளை நானே எடுக்கவேண்டும், அதை எதிர்கொள்ள வேண்டும், கல்வியும் அறிவும் அவசியம், அதைவிட துணிச்சலும் நேர்மையும், உடல் மற்றும் மன பலமும் மிக அவசியம்" என்று என்னை வளர்த்த விதத்தில் "தன்னம்பிக்கை" என்ற பெருஞ் செல்வத்தை எனக்காக விட்டுச் சென்றிருக்கிறார், அதுதான் அவருக்கு கடைசிகாலம் வரை பெண்ணென்ற உருவத்தில் மகளாக தாங்கிப்பிடித்தது, நீங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் எதை சேர்த்து வைக்கிறீர்கள்? சற்றே யோசியுங்கள், உங்கள் மீதான உங்களின் அவநம்பிக்கையே பெண் குழந்தைகளின் மீதான வெறுப்பு என்பது நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!