Tuesday, 27 June 2017

கொல்லும் பெண்களையுமே இனி வருங்காலம் காணும்!

ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அடுத்துப் பிறந்த இரட்டைக்குழந்தைகளும் பெண் குரந்தைகளாகிவிட, மேலும் ஆண் குழந்தையில்லாததால், கணவர் தன்னிடம் சரியாக பேசாததால் தான் பெற்ற இரட்டை பெண் குழந்தைகளை பாலூட்டும்போது மூச்சுத்திணறச் செய்து கொலை செய்த தாய் என்ற செய்தியைப் படித்ததும் மூச்சுத்திணறி விட்டது! ஏற்கனவே நாட்டில் பாதி ஆண்கள் போதையில் மூழ்கியிருக்க, அக்குடும்பங்களை பெண்களே காப்பாற்றும் நிலையிலும் இன்னமும் இந்தப்பெண் குழந்தை வெறுப்பு இருப்பது கவலைக்குரியது!

இதில் அந்தப் பெண் எம்.எஸ்சி, பிட் பட்டதாரி, ஆனால் கணவரோ கூலித்தொழிலாளி, பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் வரதட்சணை செலவு என்பதைவிட, தன்னுடன் கடைசிக்காலத்தில் அந்தப்பெண் இருக்கப்போவதில்லை என்ற நினைப்புமே அந்தப் பெண்குழந்தைகளை பாரமாய் நினைக்க வைக்கிறது, படிக்க வைத்தும்கூட படிக்காத ஒருவருக்கு திருமணம் செய்துவிட்டு, பெண்குழந்தையை வெறுக்கும் குடும்பத்தில் உளவியல் ரீதியாக கணவரை மாற்றவோ, அல்லது அந்நப்பெண்ணை மீட்டெடுக்கவோ அந்தக்கல்வி உதவவில்லை!

பாகிஸ்தானில் எல்லைப்பணியில் தன் மகன் இருக்க, மூன்று மாதக்காலமாய் தன் மருமகளிடம் பாலியல் வன்முறை செய்த தன் கணவனை சுட்டுக்கொன்ற பெண் என்று ஒரு செய்தியின் விரிவினைப் படித்தப்போது, அந்தச் செய்தி தனக்குத்தெரிந்தும் குடும்ப கவுரவத்திற்காக, குடும்ப அமைப்புக்காக தான் எதுவும் செய்யமுடியவில்லை என்று அந்த இளம்பெண்ணின் கணவனும், சுட்டுக்கொல்லப்பட்ட தன் கணவன் எத்தனைச் சொல்லியும் கேட்கவில்லை என்று அந்தப்பெண்ணின் மாமியாரும் வாக்குமூலம் என்றதை படித்தப்போது, எங்கோ எல்லைக்கடந்து வாழும் சகோதரிகளின் அடிமை நிலை வேதனையைத் தந்தது!
உத்திரப்பிரதேசத்தில் பெண்கள் பொது இடத்தில் செல்போனில் பேசக் கூடாது என்ற செய்தியும், ஆண்கள் செய்யும் தவறுக்கெல்லாம் பெண்களே காரணமென்று வரும் செய்திகளும், எப்படியோ கூட்டிக்கழித்துப் பெண்களையே செய்தியாக்கும் மனிதர்கள் இங்கே எல்லாத்துறைகளிலும் நிரம்பியிருக்கிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

நூறு சதவீதம் இடத்தை ஆண்கள் பெண்களுக்கு சமையலறையில் கொடுத்திருக்கிறார்கள், வீட்டுவேலைகளில் கொடுத்திருக்கிறார்கள், குடிமகன்கள் ஒருபடி மேலே போய் குடும்பத்தையே கட்டிக்காக்கவும், சம்பாதிக்கவும், குழந்தைகளை, குடும்பத்தை காப்பாற்றவும் ஆகிய எல்லாவற்றையுமே பெணகளுக்கென பெரிய மனதோடு ஒதுக்கியிருக்கிறார்கள், மற்றப்படி குறைந்தப்பட்சம் 33 சதவீதம் கூட வேறு எதிலும் பெண்களுக்கு கிடைத்திடவில்லை! கருத்தரிப்பு நிகழவில்லை என்றால் அதற்கும் பெண்ணிடமே குறை, கருத்தரிப்பு வேண்டாம் என்றால் அதற்கும் கூட பெண்களுக்கே பாதுகாப்புமுறைகளும், அறுவைசிகிச்சைகளும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்!

விவரிக்க விவரிக்க ஆயிரம் வரும் பெண்கள் பிரச்சனைகள் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மைதானே? எந்தப் பெண் காணாமல்போனாலும் "காதல்", எந்தத் திருமணமான பெண் ஓடிப்போனாலும் "கள்ளக்காதல்", எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானலும் "தகாத உறவு", "ஆடை", "ஒழுக்கம்", "இத்யாதி", "இத்தியாதி", இதைப்பெண்களே பேசுவதுதான் பெருங்கொடுமை! ஆணின் மறுமணத்திற்கு, குடிக்கு, போதைக்கு, ஒழுக்கத்திற்கு, முட்டாள்தனத்திற்கு, காமத்திற்கு, காதலுக்கு, சாலையில் வெட்டியாய் திரியும் நிலைக்கு, அலங்கோலமாய் விழுந்துக்கிடக்கும் காட்சிக்கு என்று ஒவ்வொன்றிற்கும் சப்பைக்கட்டுக் கட்டும் சமுதாயம், அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் பெண்ணின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும், வாழ்க்கைக்கும் பல்வேறு பெயர்களைச் சூட்டி கேலிப்பேசி பகிர்கிறது, மகிழ்கிறது, அந்தச்சமுதாயம் என்பது பெண்களாலும் நிறைந்திருக்கிறது!
இவன் ஆண், இவள் பெண், இந்தப்பணியைச் செய்தது ஆண் அல்லது பெண் என்று பாலினத்தை அழுத்தி, முதன்மைப்படுத்தி வரும் செய்திகள் தவிர்க்கப்பட வேண்டும், எந்தக் குற்றத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் நடத்தையை விமர்சிப்பதை தவிர்க்கவேண்டும்,உதாரணத்திற்கு கால் டாக்ஸி டிரைவர் பெண்ணிடம் தகராறு செய்தச்செய்தியில், டாக்ஸி டிரைவரின் வறுமையான பின்புலத்தைக்கொண்டு நற்சான்றிதழும், பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் இரண்டாவது திருமண உறவை சம்பந்தப்படுத்தி அவருக்கு களங்கம் விளைவித்தார்கள், இதுப்போன்ற வக்கிரங்கள் அனுமதிக்கப்படக்கூடாது!

கல்வி பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவசியம்தேவை, அதுவும் தரமான கல்வி, எல்லாவற்றிலும் பெண்களை வணிகப்பொருளாக்கும் நிலை மாறவேண்டும், சமையலறைக்கும், நகைக்கடைகளுக்கும், ஆணினத்தின் உள்ளாடைகளுக்கும் பெண்களும், சாகசத்திற்கும், சாதனைகளுக்கும் ஆண்களும் என்ற கீழ்த்தரமான விளம்பர உத்திகளும், பெண்களுக்கு மட்டும் போதனைகளும் கட்டுப்பாடுகளும் என இந்தச்சமுதாயம் இப்படியே போகும் என்றால் குழந்தைகளைக் கொல்லும் மனச்சிதைவுக்கொண்ட பெண்களையும், ஆணுறுப்பைச் சிதைக்கும், அவர்களைக் கொல்லும் பெண்களையுமே இனி வருங்காலம் காணும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...