ஒரு
பள்ளித் தோழி, செல்வத்திற்கு குறையில்லை, தன் பெயருக்குப் பின்னே பல
பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் கனவு அவளுக்கு இருந்தது. வாழ்க்கையின் மிக
நெருக்கடியான ஒரு சிரமத்தசையில், இழுத்துப் பிடித்து என் பள்ளிப்படிப்பு
தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், "நீயெல்லாம், எப்படி மேலே படிக்கப்போறியோ
தெரியலை..................", என்று என் வறுமையையையும், "இந்த நிலைமையிலும்
அப்படி என்ன பரோபகரா ...................... வேண்டி இருக்கு", என்று என் குணத்தையும் அவள் கிண்டல் செய்ய தவறியதேயில்லை.
எந்த கிண்டலுக்கும் நான் உணர்ச்சி வசப்பட்டதேயில்லை, அப்போதைய தேவை
படிப்பு, "செருப்பில்லையே என்று வருத்தப்படுவதை விட, கால் இருக்கிறதே",
என்று சந்தோசப்படு என்று என் தந்தை சொன்னதை நினைவுப்படுத்தி கொள்வேன்,
எப்போதும் வெறுமனே ஒரு சிரிப்பு மட்டுமே என் பதிலாய் இருக்கும்.
பல வருடங்களுக்கு பிறகு, அவளை இன்று, ஓர் இடத்தில் எதிர்பாரா அதிசயமாக
சந்திக்க நேர்ந்தது! நெடுநாட்களுக்கு பிறகான ஒரு இனிமையான உரையாடலில், ஒரு
இளங்கலை பட்டத்திற்குப் பின், அவள் கல்விக் கனவு சாத்தியமாகவில்லை என்று
தெரிந்தது, திருமணதிற்கு பின் ஒரு இயல்பான சோம்பேறித்தனத்தை அதற்கான
காரணமாய் பகிர்ந்தாள்! என்னை பற்றிக் கேட்க, இன்று வரை படித்ததை பகிர,
தவறாய் ஏதும் தோன்றிவிட கூடாது, என்ற ஒரு சிறு கூச்சத்தில், பகிர்ந்த
போது, ஒரு சில நொடிகள் ஒரு கனத்த மௌனம் நிலவியது. சில நிமிடங்களுக்கு பின்
சொன்னாள், "யாருக்கு எது நடக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்",
ஒன்றும் பதில் சொல்லாமல் இப்போதும் ஒரு புன்னகையை மட்டுமே தர முடிந்தது,
அவள் கரங்களை நட்புடன் அழுந்தப் பற்றி!
# ஏனோ தோன்றியது,
குறிக்கோள் தெளிவாய் இருந்து, மனதில் உறுதியும், உடலில் சுறுசுறுப்பும்
இருந்தால், வெற்றிக்கு வேண்டிய மற்றவை, வேண்டாமல் தானாய் வரும்! பணம்
மட்டுமே பாதை காட்டாது! நம்பிக்கை தான் கடவுள்!