Tuesday 18 February 2014

மரணம்

 
ஏதோ ஒரு வகையில் ஒரு மரணத்தின் செய்தி காதுகளில் விழுகிறது, பார்வையில் படுகிறது, கடக்க நேரிடுகிறது!

போன வாரத்தில், வீட்டின் முன்னே செழித்து நின்றிருந்த பாதாம் மரத்தின் இலைகள் மஞ்சளும், சிவப்புமாய்ச் சில நாட்களில் மாறி இருந்தது, ஓர்  அதிகாலை வேளையில், பெரும்பாலான இலைகள் உதிர்ந்து போய், சுளீரென்று வெயில் தெரிய தொடங்கியது, மொட்டையாய் நின்றிருந்த மரம் கூட ஏதோ ஒரு துக்கத்தின் தாக்கத்தைத் தந்தது. இயற்கையின் கொடையாக, இரண்டே நாட்களில் மரம் முழுக்க மீண்டும் பசுமைப் போர்த்தி இருந்தது, வெயில் கொஞ்சம் குறைந்தாலும், மனதில் வெளிச்சம் தோன்றியது.

இப்படிதான் ஒவ்வொரு மரணமும் ஒரு தாக்கத்தையும், பிறிதொரு ஜனனம், பிறிதொரு உயிர் சார்பு, ஒரு நம்பிக்கையையும் வாழ்க்கையில் நமக்கு அயராது தந்துக் கொண்டும் உணர்த்திக் கொண்டும் இருக்கிறது!

எந்த மரணமும் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையையே அதனைச் சார்ந்தவர்களுக்குத் தந்துவிட்டுச் செல்கிறது. முதுமையில் வரும் மரணத்தை, வாழ்ந்து முடிச்சிட்டார் என்று சமாதானப்படுத்திக் கொள்ளும் மனதால், அவ்வளவு எளிதில் ஓர்  இளவயது மரணத்தை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை!

மரணம் ஒரு கொடுமை என்றால், முதுமை அல்லாது, நோயினாலோ, விபத்தினாலோ, சுய முடிவினாலோ ஏற்பட்ட மரணம் என்று, ஒன்றை அறிகையில், மனம் வேதனையில் உழன்று கொண்டே இருக்கும். மரணம் ஒருவரை ஒருமுறை சாய்க்கும், அந்த உயிர் சார்ந்த குடும்பத்தை, உற்றாரை, நண்பர்களை அது நினைவுகளில் சாய்த்துக் கொண்டே இருக்கும்.

என் பள்ளிக் காலத் தோழன், எப்போதும் அவனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம், நான் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தால், அவன் கடைசியில் அமர்ந்திருப்பான், கடைசிப் பெஞ்சின் அட்டகாசங்கள் அனைத்தும் உண்டு, பள்ளி முடிந்தே, என்னுடைய நெருங்கிய தோழன் ஆனான். வெளிநாட்டுக்கும் உள் நாட்டுக்கும் பறந்து பறந்து பணி செய்து கொண்டிருந்தவன், தன் உள்ளக் கிடக்கைகளை, துன்பங்களை எப்போதும் பகிர்ந்து கொள்வான், டேய், நீ ஒருத்திதாண்டா எனக்கு friend என்பான். நட்புகளின் அன்பின் மிகுதியில் நெகிழ்ந்திருந்தவன், தன் உடல்நிலைக் குறித்துத் தெரிந்தோ என்னவோ, திருமணம் மட்டும் செய்து கொள்ளவேயில்லை. அவன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் விஷயம் தெரிய வந்தபோது, யாரிடமும் சொல்லாதே டா, எனக்குக் கடைசியா நம்ம நண்பர்களைப் பார்க்க ஓர் ஆசை, அதை நிறைவேற்றி வை, ஆனா நான் இருக்கப் போறதில்லை என்ற உண்மையை மட்டும் சொல்லாமல் செய் என்று அவன் சொன்னதை என்னால் செய்ய முடியவேயில்லை. அவரவர், அவரவர் வேலை, குடும்பம் என்று ஆழ்ந்திருக்க, டேய் ஒருநாள் வாங்கடா, ஒருநாள் வாங்கம்மா என்று அழைத்து, இப்போ இல்லை, அப்புறம் என்று என்று தள்ளி தள்ளி, கடைசியில் என் வீட்டுக் கிரகப்ரவேசத்தைச் சாக்கிட்டு, கணவரிடம் சொல்லிவிட்டு, தேடி தேடி அலைந்து, ஒவ்வொருவராய்க் கண்டுபிடித்து அழைத்தும், விழாவிற்கு ஒரு வாரம் முன்பு நண்பன் இறந்து போனான், அப்போதும் சிலரே வந்தனர், மற்றவர்கள் வேலையின் பொருட்டு வரவில்லை!
மாறாத ஒரு குற்ற உணர்ச்சியாய் மனதில் தங்கிவிட்ட நினைவு அது!

முதல் பிள்ளையைச் சுமந்து கொண்டிருந்த வேளையில், இரவில் நடுச் சாமத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த தந்தையைக் காணும் உந்துதால் ஏனோ அதிகமாய் இருந்தது, என் அப்பாவை இப்பவே பார்க்கணும் என்று துடிக்க, சரி விடிஞ்சதும் போகலாம் என்று வீட்டில் சமாதானப்படுத்த, காலையில் வீட்டுக்குப் போயாக வேண்டிய சூழ்நிலை வந்தது, நடுச் சாமத்தில் தந்தையின் உயிர் போய் விட்டிருந்தது!

தோழியின் அம்மா, மற்றுமொரு தோழன், மற்றுமொரு உறவு என்று இந்த மரணங்களின் செய்தி முன்கூட்டிய ஒரு கனவாகவோ, ஓர்  உள்ளுணர்வாகவோ, சூழ்நிலையை எனக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

எங்கோ என் தோழியோ, தோழனோ அழைக்கையில், அந்த அழைப்பை நான் ஒருபோதும் மறுத்ததில்லை. எனக்கு வழிகாட்டிய உறவுகளை, நல்ல நட்புகளை உதாசீனப்படுத்தியதில்லை. எனக்குத் தெரியும் வாழ்க்கையைப் போல் மரணமும் தொட்டு விடும் தூரத்தில்தான், என் மரணம் உட்பட!

கொடுக்க நினைத்தால் கொடுத்துவிடு, மறக்க நினைத்தால் மறந்துவிடு, ஆண்டாண்டு காலங்கள் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவதில்லை என்று மரணத்தை ஒட்டியும், தானத்தை ஒட்டியும் என் தந்தை அறிவுறுத்திச் சென்ற வாக்கியங்கள் இன்றளவும் மனதில் நிற்கின்றன. என்னைப் பொறுத்தவரை மரணத்தில் நீங்கள் விடும் கண்ணீர் மனபூர்வமாய் இருத்தல் வேண்டும், வாழும்போது நீங்கள் ஒருவருக்குச் செய்யத் தவறிய கடமைகளுக்காக ஒருபோதும் அவர் மரணத்தின் பொருட்டு, அவைகளை நினைவுப்படுத்திக் கொண்டு அழாதீர்கள், அதனால் இறப்பவர் எழுந்து வந்துவிடப் போவதில்லை.

வேடிக்கையும் விசித்திரமும் நிறைந்த இந்த வாழ்க்கையில், மரணம் ஒன்றே ஒருவரை நமக்கு நினைவுப்படுத்துகிறது. வாழும்போது உதிர்த்த ஒரு வார்த்தைக்கோ, கோரிக்கைக்கோ ஆன ஒர் அர்த்தமும், தெளிவும் அல்லது குற்ற உணர்ச்சியும் பெரும்பாலும் நமக்கு ஒரு மரணத்தில்தான் சிடைக்கிறது.

மரணத்தில் விடும் கண்ணீரை விட வாழும் காலத்தில் காட்டும் நேசமே எந்த உயிருக்கும் ஆத்ம திருப்தியைத் தரும், நிச்சயம் நீங்கள் வைக்கும் மலர்வளையங்கள் அல்ல!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!