Tuesday, 11 February 2014

நேரம்

வங்கியில் ஒரு பணி நிமித்தம் காத்திருக்க வேண்டி இருந்தது, நெடு நேரமாய் நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவர் மும்முரமாய் யார் யாருக்கோ போன் செய்து கொண்டு,
"இன்னைக்கு ரோஹிணி, சரியா இருக்காது இல்ல? நாளைக்கு மிருகசீரிஷம், நேத்துக் கிருத்திகை இல்லை, சரி, பதினொரு மணிக்கு சரியா இருக்குமா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். விடுமுறை தினமாதலால் கொஞ்சம் பொறுமைக் காத்தேன்....இப்போது இன்னொருவரும் இந்த விசாரிப்பில் கலந்து கொள்ள, நேரமும், என் பொறுமையும் கரைந்து கொண்டிருந்தது

....ம்ம்ம் என்று நான் கொஞ்சம் சத்தமாய்ச் சொல்ல, நான் காத்திருந்ததை அப்போதுதான் கவனித்தவர் போல,
"நீங்க சொல்லுங்க, நீங்க என்ன நினைக்கிறீங்க என்றார், "எதைப்பத்தி நினைக்கணும் சார்?" ...
"அதுதாங்க இந்த நாள் நட்சத்திரம் பத்தி? என் மருமக ரெண்டாவது பிரசவம், டாக்டர், தண்ணி வத்திப்போச்சு, இன்னைக்கே அறுவை சிகிச்சை செய்யணும்னு சொல்றாங்க...நாளைக்குச் செஞ்சா நல்ல இருக்கும்ன்னு நாங்க நினைக்கிறோம்......சுறுசுறு என்று எழுந்த கோபத்தை உள்ளடக்கி....வெளிய வர நேரத்தை விட, உயிர் முக்கியம் இல்லையா சார், டாக்டர் என்ன சொல்றாங்களோ அதையே செய்யுங்களேன்" என்றேன்.

அதற்குள் இன்னொருவர் ஊடே புகுந்து, ஒரு குழந்தை வெளியே வந்து மூச்சு விடற நேரம்தான் ரொம்ப முக்கியம், வெளிய வந்தவுடன் மூச்சு விடாது, ஒரு சில நொடி ஆகும், அந்த நேரம்தான் குறிக்கணும், நீங்க என்ன நினைக்கிறீங்க மேடம்?

நான் சொன்னேன், "நான் ரெண்டு விஷயம் நினைக்கிறேன் சார், நம்ம மனசு நல்லதை நினைச்சா எல்லாம் நல்ல நேரம்தான், எப்போதும் கெட்டதையே நினைச்சு பயந்துகிட்டு இருந்தா எப்பவும் கெட்ட நேரம்தான்.......
சரி சரி என்று அவர் கொஞ்சம் தயக்கமாய்ச் சிரித்து....வீட்டுல இருக்குற பொம்பளைங்க இதெல்லாம் எங்க கேக்குறாங்க, சரி அப்புறம் இன்னொன்னு மேடம்??"

"அது வந்து சார், நான் நாளைக்குத்தான் வீட்டுக்கு போவேன்னு நினைக்கிறேன், அதோட எனக்குப் பசிக்குது, இதுக்கு என்னால நேரமெல்லாம் பார்க்க முடியாது..........இப்போ நான் சொன்னதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?"
என்று கொஞ்சம் புன்னகையோடு கேட்க..........அட சாமி அப்புறம்தான் வேலை முடிஞ்சுது!

#எல்லாம் நேரம்தான்!

1 comment:

  1. எது நல்ல நேரம் அப்படிங்கறதுக்கு நீங்க கொடுத்த விளக்கம் அருமை.

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!