Friday, 20 December 2019

மந்தையாட்டு_வரலாறும்_தேர்தலும்

#மந்தையாட்டு_வரலாறும்_தேர்தலும்

வரலாற்றில் இறந்த இராணுவ வீரர்களின் படங்களை வைத்துக்கொண்டு, “எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று தேசத்தின் மீதான பற்றை வாக்குகளாக எந்தப்பிரதமரும் சேகரித்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள், அத்தனைப் பாதுகாப்பு நிறைந்தப்பகுதியில் மொத்தமாய் இராணுவ வாகனங்கள் வர, சர்வ சாதரணமாய் ஒரு தாக்குதலும், தாக்குதல் நடந்த அன்றே தமிழகத்தின் 40 இடங்களும் 40 வீரர்களின் “தியாகத்துக்கு” என்று கட்சிப்பிரச்சாரம் செய்வதும், போர் வரும் பதட்டம் இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் சொல்வதும், பதில் தாக்குதல் நடத்தியதையும் உடனே பிரதமரின் தேர்தல் பிராச்சார உத்தியாய் பயன்படுத்துவதும், அதை பாகிஸ்தான், “இந்தியாவில் தேர்தல் காலம் என்று தெரிகிறது!” என்று சொல்வதும் வரலாற்றில் நிகழ்ந்தக் கறைகள்!

அவசர பணமதிப்பிழப்பையும் அதைத்தொடர்ந்த உயிர்ப்பலிகளையும், ஜிஎஸ்டி அழித்தது, 49000 தொழில்கள் நலிவடைந்ததும், 5 லட்சம் பேர் வேலை இழந்ததும், அடுத்து தூத்துக்குடியால் மறக்கடிக்கப்பட்டது, 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அடுத்து கேரள மழையால் மறக்கக்கடிக்கப்பட்டது, கேரள மழையின் மீட்புப்பணிக்கு பில் அனுப்பியதும் அடுத்து சபரிமலை விவகாரத்தால் அமுக்கப்பட்டது, சபரிமலையின் சங்கிகளின் போராட்ட வேடிக்கையெல்லாம், அடுத்து வந்த அம்பானிகளின் செய்தியில் மக்கிப்போனது, நடுநடுவே மானே தேனே என்று சீனா எல்லைக்கு ரோடு போட்டு அருணாசலத்தில் அத்து மீறி வேடிக்கைக்காட்டியது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல் டீசல் விலையேற்றம் தொடர்ந்தது, பலப்பல முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், அதெல்லாம் காலத்தின் மறதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது,

நாடெங்கும் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்புணர்ச்சியில் உயிரிழந்தனர், பெண்கள் கெடுக்கப்படும்போது எதிரப்புக்காட்டமல் இருந்தால் உயிருடன் இருக்கும் வாய்ப்புக்கிடைக்கும் என்றும் ஒரு சாதாரண வன்புணர்ச்சிக்கொலையை ஊதிப்பெரிதாக்கியதில் டெல்லியின் சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டது என்ற அரிய கருத்துக்கள் அமைச்சர்களால் மொழியப்பட்டது, தேர்தல் மேடைகளைத்தவிர வேறு எதிலும் பிரதமர் வாய் திறக்கவில்லை!

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்தத்தகவலும் மக்களுக்குத்தெரியாமல் இரகசியாமாய் மறைந்துப்போனார், அவசர அவசரமாய் எம்எல்ஏக்கள் மக்களை மறந்து கூவத்தூரில் ஒளிந்துக்கொண்டார்கள், இவரா அவரா என்று தவழ்ந்து உருண்ட நாடகங்கள் ஒருவழியாய் நிறைவுற, உதய் மின்திட்டம் தொடங்கி, நீட் வரை எதையெல்லாம் முன்னாள் முதல்வர் எதிர்த்தாரோ அதையெல்லாம் மத்திய அரசு தங்குத்தடையின்றி புது அரசின் மூலம் நிறைவேற்றிக்கொண்டதும், எட்டுவழிச்சாலை என்ற அத்துமீறல்களும், தெர்மாக்கோல் விட்டு அதற்கும் பல லட்சம் கணக்குக்காட்டிய கொடுமைகளும், ஜல்லிக்கட்டு வன்முறைகளும் , கடவுள் தேவையில்லை எங்கள் சாமிதான் முருகர் என்ற சுயவிளம்பர தம்பட்டங்களும், பொதுநல வழக்கின் வழி வந்த ப்ளாஸ்டிக் தடையால் மக்கள் மனதில் இருந்து மழுங்கடிக்கப்பட்டது!

எப்போதும் நாட்டிலேயே தங்காதவரும், வரலாற்றில் சிலமணிநேரமே பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் என்ற பெருமையும் ராபேலின் கூச்சலில் அடிப்பட்டுப்போனது, விதர்பாவின் வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து மர்மமாய் சாகடிக்கப்பட்டதும் பெட்டிச்செய்தியாய் சுருங்கிப்போனது, இதற்கு நடுவே அமைச்சர் முன்னிலையில் இல்லாத கைபேசி தொழிற்சாலையில் இருந்து மலிவுவிலையில் கைபேசி கிடைக்கும் என்று அறிவித்துச் சுருட்டிய கொள்ளைக் கிடப்பில் போடப்பட்டது!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பாதளாத்துக்கு தள்ளப்பட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒரு நாட்டின் பிரதமர் விளம்பரத்தூதர் ஆனதும், குஜராத்தின் தனியார் நிறுவனத்திற்கு பசுமைத்தீர்ப்பாயம் விதித்த சில நூறு கோடிகளை தள்ளுபடி செய்ய வைத்ததும், அதே நிறுவனம் தன் சுய லாபத்துக்காக ஆஸ்திரேலியாவில் வியாபாரம் தொடங்க பொதுத்துறை வங்கியை நிர்பந்தித்துக் கொடுக்க வைத்த அபரிமிதமான கடன் தொகையும் இந்த ஆட்சி செய்த சாதனைத்துளிகள், அத்தனை சாதனைத்துளிகளுக்கும் சிகரம், பொருளாதாரம் சாராத ஒருவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமித்து, வைப்புத்தொகையில் கைவைத்து தள்ளாட்டத்திற்கு வழிச்செய்த நடைமுறை!

இதெல்லாம் மழுங்கடிக்க, கால் கழுவும் நாடகம், ராபேலின் கூச்சல் எல்லைத்தாக்குதலில் அமைதியானது, எல்லைத்தாக்குதல் பதில் தாக்குதல் என்ற பரபரப்பில் சத்தமின்றி விமான நிலையங்களின் பரமாரிப்பின் வியாபார உரிமை அதானிக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது, பழங்குடிகளை காட்டை விட்டு வெளியேற்றும் தீர்ப்பு வந்திருக்கிறது, படிப்புப் பற்றிய கேள்வி எழுந்ததும் மாயமாய் எரிந்தக்கோப்புகளைப் போல, எதுவும் அடுத்தடுத்த நிகழ்வுகளால் மறக்கடிக்கப்பட்டுவிடும், மொத்த அழிவுத்திட்டங்களின் கொள்கலனாய் தமிழகத்தை மாற்றி விட்டு பல உயிர்களைப்பறித்துவிட்டு, துணிச்சலாய் இந்த மண்ணில் ஓட்டுக்கேட்டு நிற்பதற்கு மக்களின் இந்த மறதியும், பணம் என்ற ஆயுதத்தின் பலமும், சாதிமதத்தின் பேரில் தேசப்பக்தியின் போர்வைகளின் பெயரில் எளிதில் தூண்டப்படும் உணர்ச்சியும் தானே காரணம்?

எது எப்படி இருந்தால் என்ன, செத்தது யாராய் இருந்தாலும், சாகடித்தது அரசியல், இராணுவ நடவடிக்கையை தேர்தல் பிரச்சாரமாக்கிய இந்த மோசமான அரசியல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கிறது, அதனால் என்ன வாழ்க பாரதம்!!!
#Saynotowar

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...