டிஜிட்டல் இந்தியா... இந்த அறிவிப்பு வந்ததும், ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு நிலைப்பாடுகள். முதலில் டிஜிட்டல் இந்தியா என்ற அறிவிப்பின் சாராம்சத்தைத் தெரிந்து கொள்வோம்...
> பல லட்சம் மக்கள் இந்தியாவில் இணைய இணைப்பில்லாமல், பல்வேறு வாய்ப்புக்களை இழக்கின்றனர். அதனால், ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு, இந்த ஆண்டின் இறுதிக்குள் இணைய இணைப்பு வழங்கப்படும்.
> உங்களின் அனைத்து அரசாங்க ஆவணங்களையும். நீங்கள் இணைய லாக்கரில் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். பல்வேறு ஆவணங்களை நீங்கள் எளிதில் பத்திரப்படுத்தும் வழியிது. இதற்கு ஆதார் அட்டை தேவை. பாஸ்போர்ட் முதலிய உங்களின் விண்ணப்பத்திற்கு, அரசாங்கம், இணையத்தின் மூலமே உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்ளும்.
> நாற்பத்தி இரண்டாயிரம் கிராமங்களுக்கு மொபைல் சேவை, 2018க்குள். இதற்கு இருபதாயிரம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. ஏர்டெல், ஐடியா, ரிலையன்ஸ் மற்றும் அரசாங்க மொபைல் சேவை கம்பெனிகள் களத்தில் இறங்கும்.
> அடுத்து ஈ கிராந்தி. அனைத்து அரசாங்கப் பொதுச் சேவைகளையும் இணையத்தின் மூலம் இணைக்கும் திட்டம். தனியார் நிறுவனங்களில் கொடுக்கப்படும் புகார்கள் இணையத்தின் மூலம் கையாளப்பட்டு, பல்வேறு நிலைகளை எட்டி, எப்படித் தீர்க்கப்படுகிறதோ, அதுபோலப் பொதுமக்களின் குறைகளும் இணையத்தின் வழி கையாளாப்படும். டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் களத்தில் இறங்கும்.
> பி.பி.ஓ. வேலைவாய்ப்புக்கள், பின் தங்கிய வட கிழக்கு மாநிலங்களில் அதிகரிக்கும். இந்த நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஒரு கோடி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் நிறுவனங்களே களத்தில் இறங்கும்.
> மின்னணுச் சாதனங்களின் உற்பத்தி பெருக்கப்பட்டு, இறக்குமதிக்கேற்ப ஏற்றுமதியும் சமன் செய்யப்படும்.
> இறுதியாக இணையத்தின் வழி மக்களின் ஆலோசனைகள் பல்வேறு திட்டங்களுக்குப் பெறப்படும்.
இவ்வாறு பல்வேறு விதமாக டிஜிட்டல் இந்தியா விளம்பரப்படுத்தப்பட்டாலும் அதன் சாராம்சம் இதுதான்:
ஏற்கனவே உள்ள முதலாளிகளுக்குப் புதியதாய் வருமானம் பெருக்கிக் கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்திற்கு, இன்னமும் பயிற்சித் தந்து, சிறப்பாய் வேலை புரிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது. மனுக்கள் மூலம் புகார் கூறிய கிராம மக்கள், இனி இணையத்தின் மூலம் புகார் செய்யலாம். கைபேசி இல்லாத கிராமமே இல்லை என்ற அளவில் சேவை மற்றும் அரசாங்கத்தின் வேலைகள் இணையம் வந்ததும் வேகமாய் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓர் அரசாங்கம், கல்வி, பாதுகாப்பு, சமூக நீதி, தொழில்துறை, மருத்துவம், உணவு உற்பத்தி, அறிவியல் என்று எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இணையத்தின் மூலம் வேலைகளை எளிதாக்கி ஊழலைக் களைய முடியும் என்றால் வரவேற்போம்.
அதற்கு முன்பு, உண்மையில் இதுவரை இங்கே நடந்தது என்ன? சிலவற்றை மட்டும் பார்ப்போம்:
தொழில்துறை
மிக வேக அலைக்கற்றை என்று 2ஜி, 3ஜி டெண்டர் கோரப்பட்டு அதில் நடந்த ஊழல்கள் உலகறியும். இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் போய் பா.ஜ.க. வந்தது. அடுத்து எந்தக் கட்சி வந்தாலும் இது அப்படியேதான் இருக்கும்போலும்.
கிராமத்தில் இணையச் சேவைகளை வரவேற்போம். நகரத்தில் உள்ள இணையச் சேவையின் மூலம் அரசாங்க சேவைகளை எளிதில் பெற முடிகிறதா? ஒரு ரேஷன் கார்டு வேண்டுமென்றால் ஒருவர் எந்த அலைக்கழிப்பும் இன்றி உடனே பெற்றுவிட முடியுமா?
சமூக நீதி
மதக்கலவரங்களில் பலியான மக்களுக்குக் கிடைத்த நீதியென்ன? மேற்கத்திய நாடுகளின் சாலைப் புகைப்படங்கள் இணையத்தின் மூலம் குஜராத்தின் புகைப்படங்களாகக் காட்டப்பட்டது. எங்கோ நடந்த முன்னேற்றம் எல்லாம் குஜராத்தில் நடந்தாகக் காட்டப்பட்டது எல்லாம் இணையத்தின் புரட்சிதான்.
தனிப்பட்ட மனிதர்களின் தாக்குதல்கள், எளிதாய் கிடைக்கும் தகவல் பரிமாற்றம், சாதாரணக் குடும்பத்துப் பெண்ணைத் திருடி என்று பட்டம் கட்டுவதும், பாலியல் தொழிலாளி என்று விளம்பரப்படுத்துவதும் இணையம்தான். இதோ இங்கே அரசாங்கத்தின் சட்டங்களை, திட்டங்களை விமர்சனம் செய்வதும் இணையம்தான்... நல்லது!
இந்த இணையம் ஊழல்களை வெளிப்படுத்தியது. ஆனால், ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள், நீதித்துறை இணையத்தால் கண்காணிக்கப்படுகிறதா? சம்பளம் வாங்கும் ஒவ்வொரு குடிமகனும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வரிகட்ட வேண்டும். வரிப்பிடித்தம் செய்யப்படும். அம்பானி, அதானி, விப்ரோ போன்ற பெருமுதலாளிகளிடம் இருந்தும் அவ்வளவு எளிதாய் வரி வசூலிக்க முடிகிறதா? வருமானவரித் துறை விப்ரோ நிறுவனத்தின் வாசலில் நின்று தண்டோராப் போட்டுதான் வரி வசூலிக்க முடிந்தது. அதானி, விஜய் மல்லையா நிகழ்வுகளை நாடறியும். நாடறிய செய்தது இணையம், அதற்குப் பின் நடந்தது என்ன?
கழிவறை வசதி கூட இல்லாமல் இருக்கிறது கிராமங்கள். நீரில்லாமல் வாடுகிறது நிலங்கள். சாயக்கழிவுகளால், மனிதக் கழிவுகளால், தோல் கழிவுகளால் மூச்சுவிட முடியாமல் திணறுகிறது நீர்நிலைகள். இதையெல்லாம் சரி செய்து, இணையத்தையும் கட்டமைத்தால் நல்லது என்று சொல்லும்போது, 'ஏன் ஏவுகணை வேண்டும், ஏன் ராக்கெட் வேண்டும், சோறு மட்டும் போதுமே' என்று கிண்டல் செய்ககின்றனர், இணையம் மட்டுமே போதுமென்று நினைக்கும் இணைய விஞ்ஞானிகள்!
விவசாயம்
இணையத்தின் முன் உட்கார்ந்து நம் கருத்துக்களைச் சொல்லும் நமக்கு, இணையம் முக்கியம்தான். கேண்டி க்ரஷ் விளையாடி பொழுதுப் போக்கினாலும், பசித்தால் நாம் சோறுதான் சாப்பிட வேண்டும். சுற்றிலும் அலைக்கற்றைகள் நம்மைச் சுழற்றிப் போட்டாலும், நாம் சுவாசத்துக்குத் தேவை மரங்கள் வெளிப்படுத்தும் பிராணவாயுதான். சில அடிப்படைத் தேவைகள் கூட இல்லாத கிராம மக்களுக்கு அதைச் செய்யாமல், சில பெருமுதலாளிகளின் விருப்பதிற்கேற்ப இணைய வசதி மட்டும் செய்து கொடுத்தால் போதுமா?
மின்னணு உற்பத்தித் தேவைதான், விவசாய உற்பத்தித் தேவையில்லையா? ஆதார் அட்டை முதற்கொண்டு அட்டைக்களாலேயே நிரப்பப்பட்ட இந்திய மக்களின் வாழ்வாதாரம் ஊழல் ஒன்றிலேயே நசுக்கப்படும்போது, அதைக் களைதல் முக்கியமில்லையா?
சொந்தமாய்த் தொழில் செய்ய வாய்ப்புக்களைப் பெருக்காமல், நிலம், வளம், நீர், இணையம் என்று முதலாளிகளை மட்டும் மகிழ்வித்து, வேலைவாய்ப்பைப் பெருக்குகிறேன் என்று ஓர் அடிமைச் சந்தையை மட்டும் ஊக்குவிப்பது சரியா?
வரி ஏய்ப்புச் செய்துவிட்டு ஒரு பெரு நிறுவனம் சட்டென்று மூட்டையைக் கட்டும்போது, இங்கே குறைந்தபட்சத் தொழிலாளர்களின் உரிமையைக் கூட நிலைநிறுத்த முடியாமல் இணையத்தில் செய்தி பகிர்வது மட்டும் தீர்வாகுமா?
கல்வி
இது அத்தனை கேலிகூத்தாய் இருக்கிறது நம் நாட்டில். இருப்பவனுக்கு ஒரு கல்வி, இல்லாதவனுக்கு ஒரு கல்வி. அரசாங்க வேலையென்றால் அமிர்தமாய் இருக்கும் நாட்டில், அரசாங்கப் பள்ளிக் கல்வி என்பது வேப்பங் காயாய்க் கசக்கிறது, இப்போது வட கிழக்கு மாநிலத்தில் மாணவர்களைத் தேர்வு செய்து, வேலை வாய்ப்புத் தருவது சரிதான். முதலில் இந்தத் தேர்வை எப்படிச் செய்வார்கள்? சாதியக் கட்டமைப்புகளை இந்த வேலை வாய்ப்பில் எப்படிக் கையாள்வார்கள்? சாதி அரசியலை, கட்சி அரசியலை எப்படி எதிர்கொள்வார்கள்? எங்கும் எதிலும் இந்திதான் என்று சொல்லும்போது, அரசாங்க இணையச் சேவையில் மொழியின் நிலைப்பாடு என்ன?
சரி நல்ல திட்டம், ஆனால் நடக்குமா? மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் திட்டங்களை அறிவிப்பதோடு நின்று விடுகிறது. 'ஸ்வச் பாரத்' என்ற திட்டம் என்னவானது? சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கப்பட்டு மக்களுக்குத் தருவதாய்ச் சொன்ன வாக்குறுதி என்னவானது? திட்டம் என்பது தீட்டுவதற்கு இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வேண்டும். ஆனால், எப்படிச் செய்கிறார்கள் என்று தெரியாமலே மாபெரும் ஊழல்கள் இந்தத் திட்ட அளவிலேயே நடந்து விடும். பின்பு அடுத்து வரும் ஆட்சியில் இந்தக் குதிரை பேரம் படியாமல், திட்டங்கள் தேங்கி நிற்கும் அல்லது புதுப் பெயர் எடுத்து மீண்டும் வரும்.
நாம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை இணையத்தில் இணைத்தாலும், அரசாங்க மருத்துவமனையில் இருக்கும் கடைநிலை ஊழியனுக்கும் பணம் கொடுக்க வேண்டும். அரசாங்க வங்கிகளில் வந்து நிற்கும் முதியவர்களையும், வறியவர்களையும் வங்கி ஊழியர்கள் மரியாதையில்லாமல்தான் அழைப்பார்கள். அரசாங்கப் பேருந்துகளின் ஓட்டைகள் அப்படியேதான் இருக்கும். இளைய தலைமுறை தன் முன்னோடியை ஒற்றி டாஸ்மாக்கில்தான் கிடக்கும். தேர்தலில் மட்டுமே மாநில முதல்வர்களை, அமைச்சர்களைப் பார்க்க முடியும். பிரதமரை பல நாட்டுப் பாஸ் போர்ட்டும், விசாவும் இருந்தால்தான் பார்க்க முடியும். மழை வந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். மரம் இருந்தால்தான் மழையும் வரும்.
இங்கே டிஜிட்டல் இந்தியா வேண்டாமென்று யாருமே சொல்லவில்லை. அதற்கும் முன்னர் மனிதர்கள் எல்லோருக்கும் உணவு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், உள்ளூரில் தொழில் தொடங்க இந்தியர்களுக்கு எளிதான வழிமுறைகள், விவசாயத்துக்கான நீர் ஆதாரம், காவேரி நீர் மேலாண்மை, பிச்சை எடுக்கும் நிலைக்குப் பெருகி வரும் வறியவர்கள், பணத்தின் அளவிற்கேற்ப என்று அருகி வரும் கல்வித் தரம், பசுமை அழித்து, மழைப் பொய்த்து வறண்டுப் போகும் பூமி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, முதியவர்களின் பாதுகாப்பு, பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைக் குற்றங்கள், தீவிரவாதம் என்று இருக்கும் நிலைக்கு, மோடியும் மோடியின் முதலாளித்துவ அரசும், இதற்கெல்லாம் தீர்வு இணையம் மட்டும் தான் என்று சொன்னால்,
வாருங்கள், இணையத்தில் பயிர் செய்து, இணையத்தில் பசுமை வளர்த்து, இணையத்தில் வறுமை ஒழித்து, இணையத்தில் ஊழல் ஒழித்து, இணையத்தில் நாட்டைச் சுத்தம் செய்து, வாருங்கள் இந்தியாவை ஒளிரச் செய்வோம்!
http://www.vikatan.com/news/article.php?aid=53056