Tuesday, 8 September 2015

அட நம்புங்கள்!

ஓசோன் லேயரின் ஓட்டைக்காகவும்
ஆஸ்துமாவின் பிடியில் இருக்கும்
தன் குழந்தைக்காகவும் புகையினை
விட முடியாதெனினும்


ஒரு சிகரெட்டைப் பிடித்து
பக பகவென்று புகையூதி
சகமனிதனின் காலைச்சுடாமல் இருக்க
மிகக்கவனமாய் அதனைத் தன்
காலணியின் அடியில் போட்டு
நெருப்பை அணைத்தான் பூபதி

பணம் வரும் திசை லட்சுமி திசையென்று
ஊழல் மறுக்க மனமற்று
மக்களைக் கொல்லும் கோப்புக்களிலெல்லாம்
அரசியல் செய்யும் ஆண்டியப்பன் கூட்டணி
சளைக்காமல் போட்ட கையெழுத்துக்களில்
கிடுகிடுவென நாடே தள்ளாடினும்

இதயத்தின் ஓரம் எனக்கும் கசியும் ஈரமென்று
எஞ்சிப் பிழைத்த மக்களுக்கென
இலவச இடுகாடொன்றைப் பரிசளித்து
மாண்புமிகு செம்மல் ஆனான் அரசியலப்பன்

ஓய்ந்துக் கிடந்த முதியவளை
பாரமென்று கருதிப் பட்டினிப் போட்டுக் கொன்றவளும்
பெற்றவனின் தளர்ந்துப் போன வயதில்
இனி தாளதென்று
முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்ட மகனும்
தவறாமல் அமாவசைத் திதியில் ஊர்மெச்ச
படையலிட்டுக் காகத்தை அழைத்து
கண்ணீர் விட்டுத் துக்கம் மேலோங்க
உருகிக் கரைந்தனர்

அவன் அவள் அவர்கள்
அவை இவை எவை யென்றாலும்,
காட்சிகளுக்குப் பஞ்சமிலா பூமியில்
நெல்லுக்குப் பாய்ச்சிய நீர்
புல்லுக்குப் பாய்ந்ததுபோல்
மிதமிஞ்சிய சுயநலத்தில்
ஓர் ஓரமாயாயினும் வாழ்கிறது பொதுநலம்,
அட நம்புங்கள்!

http://www.pratilipi.com/read?id=4904764395487232 

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...