Tuesday, 8 September 2015

அழகான மனிதர்களின் பரிசு!

 கேரளாவில் இருந்து அவர்கள் சென்னைக்குக் குடி வந்த வருடம் நான் பிறந்த வருடம், என் ஆயா, கைக்குழந்தையான என்னை அவர்கள் வீட்டுத் திண்ணையில் வைத்து இருப்பார்களாம், ஒற்றை மகனுடன் சென்னை வந்த அவர்களுக்கு நான் செல்ல மகளாகிப் போனேன், அப்பா அம்மா அண்ணா என்று அழைத்து அவர்கள் வீடு மாறிச் சென்றாலும், என் விடுமுறை தினங்களில் அவர்களின் வீடே என் சுற்றுலாத் தலம்!

அன்பே பிரதானம், கல்வியே செல்வம், வாய்மையே வீரம், வாழ்க்கை ஒரு வரம், அறிவே துணையென்று என் குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் படிப்பு முடியும் வரையுமான அந்த வாழ்க்கையை அழகியலாக மாற்றியவர் அண்ணன், அண்ணனின் அச்சன் எனக்கும் அப்பா, அம்மையும் எனக்கு அம்மா, அண்ணனின் வாழ்க்கையின் அத்தனை ஏற்ற இறக்கத்திலும் அண்ணனின் புன்னகையும் அம்முபெண்ணே என்ற பாசவிளிப்பும் இன்று வரை மாறவில்லை, அண்ணன் மட்டுமில்லை அச்சனின் வாழ்க்கையும் ஒரு கவிதை!

ஒருமுறை அச்சன் என்ற அப்பா சென்னையில் இருந்து கேரளத்திற்கு ரயிலில் பயணம் செய்ய ஏறியபோது, அவருடைய மிகவிருப்பமான விலை உயர்ந்தப் புது ஜோடிக் காலணிகளில் ஒன்று பிளாட்பாரத்தில் விழுந்து விட்டது, ரயிலும் வேகமெடுத்துவிட்டது, அப்பா உடனே தன்னுடைய காலில் இருந்த மற்றொரு ஒற்றைக் காலணியையும் பிளாட்பாரத்தில் தூக்கியெறிந்தார், ஏன் என்ற அண்ணனின் கேள்விக்கு அந்த ஒற்றைச் செருப்பைக் கண்டெடுப்பவன் அதில் அடையும் பயன் ஒன்றுமில்லை, அதனுடைய ஜோடியும் கிடைத்தால் அவனுக்கு அது உபயோகப்படும் என்று கூறினார், மேலும் வீசி எறிந்த செருப்புக்கும், தவற விட்ட செருப்புக்கும் இடையே இடைவெளி அதிகம் இருக்கக் கூடாது என்பதே அவரின் அந்த நேரத்துக் கவலையாகவும் இருந்தது.....

எனக்கு எப்போதும் உதவிய அண்ணனுக்கு ஒரு காலக்கட்டத்தில் அன்பால் நான் செய்ய நினைத்துத் தயங்கியபோது எந்தத் தயக்கமும் இல்லாமல் அண்ணன் ஏற்றுக் கொண்டார், கொடுப்பதும் வாங்குவதும் அன்பால் நிகழும்போது அங்கே எந்தத் தயக்கமும் வேண்டியதில்லை அம்மு என்ற போது, வாழ்க்கையில் பெறும்போது மட்டுமல்ல கொடுக்கும்போது நிறைவு வரும் என்று நான் உணர்ந்தத் தருணம் அது

எந்தச் சுபகாரியத்திலும் அல்லது ஏதோ ஒரு சந்திப்பிலும் யாருக்குப் பரிசினைக் கொடுத்தாலும், அவர் ஒன்றைக் கொடுத்தால் நாமும் ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தமும், கடமையே என்று கச்சிதமாய் வேறொன்றைக் கொடுத்து நேர் செய்யும் வழக்கமும் மனிதர்களுக்கே உரித்தானது, அது போன்ற மனநிலை இன்று வரை ஏனோ எனக்கு வந்தேதேயில்லை, யாருக்குப் பரிசினைக் கொடுத்தாலும் அது உள்ளார்ந்த அன்பின் பொருட்டெயன்றி, எதையும் எதிர்பார்த்தோ எதையும் சாதிக்கவோ இல்லை என்று மனதில் ஊறிவிட்ட இந்த வளர்ப்பு முறையால் இருந்திருக்கலாம்

தோல்வி, ஏமாற்றம் என்று நான் கடக்க நேரிட்ட பொழுதுகளில், அவ்வளவுதானே அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று கடப்பதற்கும், சிரிப்பதற்கும் எதையும் கடந்து போ என்று அண்ணன் கற்றுத் தந்த பாடமும் ஒரு காரணம், வீட்டைத் தவிர்த்துப் பயணங்களில் உறக்கம் பிடிக்காத கண்கள் இப்போதும் அண்ணன் வீடடைந்தால், கூடடைந்த பறவை போல் ஒரு கும்பகர்ணிக் கண்கள் ஆகிவிடும்

போதுமென்ற மனம் நிறைவான குணம் கொண்ட அழகிய மனிதர்களின் நினைவுகள் தந்தையர் தினத்தில் மட்டுமல்ல ஆசிரியர் தினத்திலும் அலை அலையாய் மனதில் எழுகிறது!

கேட்பதில் கொடுப்பதில் அன்பில்லையெனில்,
அதை உதவியென்றும், பிச்சையென்றும், கடமையென்றும், வியாபாரம் என்றும் வகைப்படுத்தலாம்!
அன்பு மட்டுமே அடிப்படையெனில், அன்பென்றப் பெயரைத் தவிர அதற்கு வேறு பெயரோ, காரணக் காரியமோ தேவைப்படாது அன்பால் அழகான மனிதர்களுக்கு! :-)

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...