Tuesday, 8 September 2015

ஆசிரியர் தின வாழ்த்துகள்! Remembrance!

ஆசிரியப் பணி அறப்பணி, அறமென வாழும், வழிநடத்தும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
வீட்டில் இருந்த நேரத்தை விட நான் பள்ளியில் இருந்த நேரமே அதிகம், கல்வி மட்டுமல்லாமல், கலைகளிலும் என்னை வழிநடத்திய எனதருமைத் தலைமை ஆசிரியைத் திருமதி. சுப்புலட்சுமி ,

எட்டாம் வகுப்பில் இருந்து ஒரு தோழியைப் போல் இன்றுவரை தொடரும் திருமதி. தவமணி, தாவரவியல் பாடத்தைச் சிறப்புற நடத்தி, பாடம் தாண்டிச் செடிக் கொடிகளிடத்தில் ஜீவனுண்டு என்று அவைகளிடத்தில் நெருக்கம் ஏற்படுத்தி, என் பிள்ளைகளுக்கும் கல்வியில் உதவிய திரு. ராஜன், 

பூகோளம் புவியியலில் ஆர்வம் ஏற்படுத்திய துணைத்தலைமை ஆசிரியைத் திருமதி ரோசலின், வீட்டில் வெளியில் என்று கரப்பான் பூச்சிகளையும், எலிகளையும் வேட்டையாடி அதன் உடற்கூறுகளைத் தெரிந்து கொள்கிறேன் என்று நான் செய்த அட்டகாசங்களுக்கு விலங்கியலில் எனக்கு ஈர்ப்பு ஏற்படுத்திய திரு இசக்கி,

கணக்குப் பாடத்தை நான் முதன்மை பாடமாக நான் விரும்பித் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமான திரு.சக்திவேல், ஆங்கிலப் பாடங்களைச் செவ்வனே நடத்தி, மனப்பாடம் செய்யாமல் நான் சொந்தமாய் எழுதிய பதில்களுக்கு ஆச்சரிய மதிப்பெண் கொடுத்து ஒன்பதாம் வகுப்பில் இருந்து என் சுயசிந்தனையை ஊக்குவித்த திரு.சுரேஷ்,

இயற்பியலில் என்னைத் தன்னுடைய சிறந்த மாணவியாகக் கொண்டாடியத் திருமதி சுமதி, வேதியலை எல்லோரும் விரும்பும்படி செய்த திரு ஐயப்பன், என் கல்விக்கு உதவிய திருமதி ராணி, நூலகத்தில் இருந்து சிறந்த புத்தகங்களை நான் படிக்க உதவிய லைப்ரரியன் திருமதி கீதா ,

விருப்பப் பாடங்களில் ஒன்றாகக் கணிப்பொறி அறிவியலில் பாடங்களைத் தாண்டி ஒரு கூட்டத்தில் தன்னுடைய ஒவ்வொரு மாணவனும் மாணவியும் தனித்துத் தெரியவேண்டும் என்று எங்களுக்கு நடையில் உடையில் பேசும்போதும் பழகும்போதும் இருக்க வேண்டிய அங்க அசைவுகளைப் பாடி லாங்க்வேஜ் கற்றுத் தந்த திரு சந்தோஷ், (Dear Sir, on this teachers' day, I recollect the memory of your guidance, coaching and the friendliness you have instilled in us, I've written my gratitude to you in this para in Tamizh and translating that here, I remember every single moment of your guidance and the confidence you had in me, Thank you once again for being a wonderful teacher!) (Kallat Santhosh)

இவர்களைத் தாண்டி நினைவில் நிற்கும் ஒவ்வொருவரையும் எழுதி மாளாது, பள்ளித் தாண்டி வரிசையாய் பெற்ற பட்டங்களில் வழிக் காட்டி என்று யாரையும் நான் சந்திக்கா விடினும் , கற்றலில் என் தொடர்ந்த முயற்சிகளுக்கும் வெற்றிக்கும், அடித்தளத்தைச் சிறப்புற அமைத்துக் கொடுத்த என் தந்தையும், பள்ளி ஆசிரியப் பெருமக்களே காரணம்!
என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டி, என் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி ஆசானாய் வழிக்காட்டும் கவிஞர், எழுத்தாளர்
திரு. ஈரோடு கதிருக்கும்,

தமிழைத் தன் எழுத்தால் சிறப்புறப் பயிற்றுவித்து அவ்வப்போது என் கேள்விகளுக்கான பதிலால் என் கற்றல் பயணத்தைச் செம்மைப் படுத்தும் கவிஞர் திரு மகுடேசுவரனுக்கும்,

எந்தத் தயக்கமும் இன்றி வெளிப்படையாய் விமர்சித்து, பத்திரிக்கைகளிலும் தன் பக்கங்களிலும் பகிர்ந்து என் எழுத்துக்களைச் செம்மைபடுத்திக்கொள்ள உதவும் அனைத்து முகநூல் நட்புக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!