Monday, 6 June 2016

புன்னகை தேசம்!


அத்தனை எளிதில்
கடக்க முடிவதில்லை
உன் வார்த்தைகளை
அத்தனை எளிதில்
ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை
கணத்துக்குக் கணம் மாறும்
உன் நடத்தை விதிகளை
என் சுயத்தை அசைத்துப் பார்க்கும்
உன் சுயநலக் கூற்றுகளில்
சிதைந்தாலும்
சேகரித்துத் தருகிறேன்
மாறாத என் புன்னகையை
உனக்கு ஒரு பரிசாக!
நீயேனும்
நீயாகவே வாழ்ந்துவிட்டுப் போ
என் காதலே!

Wednesday, 1 June 2016

மனதறியும் நேசம்!

சோர்ந்த விழி பார்த்து
பசியறிவதற்கும்
கையின் குளிர் உணர்ந்து
அரவணைப்பதற்கும்
நலமே என்று ஒலிக்கும்
குரலில்
பொய்யுணர்வதற்கும்
தேவையொரு
மனதறியும் நேசம்!

கீச்சுக்கள்!

மோடி இரண்டு வருஷத்தில் அறிமுகப்படுத்திய திட்டங்கள்னு ஒரு ஆதரவாளர் ஒரு பட்டியல் போட்டிருக்கார், என்னன்னு படிச்சுப் பார்த்தா, கீரின் இந்தியா, டிஜிட்டல் இந்தியான்னு அறிக்கை அளவில் இருக்கிற பல திட்டங்களின் பட்டியலோடு, தபால்துறையின் கிஸான் விகாஸ் பத்திரம், ப்ராவிடன்ட் பண்ட், ஆன்லைனில் இருக்கும் பிறப்பு சான்றிதழ் வசதின்னு பல வருஷமா இருக்குற எல்லாத்தையும் பட்டியல் போட்டு இருக்கு புள்ள, இன்னும் படிச்சா இந்தியாவுக்கு சுதந்திரமே இரண்டு வருஷத்தில்தான் கிடைச்சதுன்னு சொல்வாங்கப் போலன்னு ஓடியே வந்துட்டேன்! 😳😳😳
இதைத்தான் கேக்கறவன் கேனையனா இருந்தா, கேப்பையிலே நெய் வடிதுன்னு சொல்வாங்கன்னு சொன்னாங்க பெரியவங்க!


சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி அவர் காசுல அவர் கடைக்காக ஒரு விளம்பரத்தில் தான் நடிச்சாரு, இங்கே இருக்குற ஆளுங்க இலவசமா தினமும் விளம்பரம் பண்றாங்க! முன்னாடி கேக்குக்கு விளம்பரம், இப்போ துணிக்கடைக்கு! :-p :-p :-p


ஒரு பொருளை நாம் காசு கொடுத்து வாங்கித் தர்மம் கொடுத்தால் அது தானம், பரிசாய்க் கொடுத்தால் அன்பளிப்பு, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, சுகாதாரம், வளர்ச்சி என்று நாட்டை வழிநடத்தவும், ஊக்கத்தொகை, உதவித்தொகை என்று அளித்து வறுமையை ஒழிக்கவும், இந்த வேலைகளைச் செய்யும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மாத ஊதியம் தரவுமென, இந்தச் செலவீனங்களுக்காகத் தரப்படுவதுதான் வரிகள், இவைகளைத் தருவது ஒவ்வொரு குடிமகனும், குடிக்கின்றன மகன்களும் கூட!
இந்த வரிப்பணத்தில் இருந்து தரப்படுவதை "இலவசம்" "இலவசம்" என்று இந்தக் கட்சிகள் கூவுவதை நிறுத்த வேண்டும், மக்கள் வரிகளைக் கட்டி உங்களிடம் இலவசங்களைக் கேட்கவில்லை, எதற்காக உங்களுக்கு ஓட்டுபோட்டு ஆட்சியில் அமர்த்துகிறார்களோ, அந்த மக்கள் நலப் பணிகளை நீங்கள் ஊழலின்றி ஒழுங்காய்ச் செய்தாலே, இங்கே எந்தப் பாமரனுக்கும் உங்களின் எந்தப் பிச்சையும் தேவைப்படாது, எந்த மல்லையாவும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொண்டு ஓடவும் மாட்டார்கள்!
‪#‎ஓட்டரசியல்‬
‪#‎இலவச_அரசியல்‬


பயணத்தில், வானொலியில் தேர்தல் விளம்பரங்கள், அதில், ஒரு குரல்,
"அப்போ திமுக இதைச் செய்தது, இப்போ அதிமுகவும் அதையே செய்தது, அவர்கள் செய்தது அந்த ஊழல்கள், இவர்கள் செய்வது இந்த ஊழல்கள், அது குடும்பக் கட்சி, இது ஸ்டிக்கர் கட்சி, ஹ ஹ ஹ, மக்களே இவங்களை நம்பி ஒட்டுப்போடாதீங்க", என்று தொடர்ந்தபோது, "அடடா யாரோ இது எவ்வளவு கருத்தா பேசுறாங்க, நிச்சயமா இது மக்கள் நலக் கூட்டணியா இருக்குமோ" அப்படின்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள, "ஆகையால் மக்களே தாமரைக்கு ஓட்டுப்போடுங்க" அப்படின்னு முடிச்சாங்க, பா.ஜ.க!
அண்ணே, மோடி அண்ணே, அக்கா தாமரை அக்கா, இவங்களோட ஊழல்களைப் புட்டு புட்டு வைக்கிறீங்க, பேசுறதுக்கெல்லாம் மாணவர்களை உள்ளே புடிச்சுப் போடுறீங்க, இப்போ??? என்னமோ போங்க, பாரத் மாதா கி ஜே
 

May 7th 2016



இன்று விடுமுறை தினம் எனக்கு, குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால், நேற்று வேலைகள் முடித்து, படித்துவிட்டு, மகளுக்கு ஏழாவது பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு உறங்கச் சென்றபோது, மணி இரண்டை தாண்டிவிட்டது! விடியலில் ஐந்து மணிக்கே எழுப்பினாள், "அம்மாவை தூங்கவிடுமா" என்று வேண்டுகோள் விடுத்து, கணவர் உறக்கம் தொடர, அவள் என்னை விடுவதாயில்லை. எழுந்து வந்தவுடன், இன்று என்ன சமைக்கலாம் என்ற யோசனையுடன், அதிகாலையில் அவளுடன் சேர்ந்து மிக்கி மௌஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். "ஏம்மா பவி, இன்னைக்கு லீவு தானே, கொஞ்ச நேரம் தூங்கவிடமாட்டியா?" "ம்ம் ஸ்கூல் இருக்கும்போது எங்களைத் தூங்கவிடாம எழுப்பி விடுறே இல்லே, நீ எழுப்பினா நாங்க எழுந்திருக்கிற மாதிரி, நீயும் எழுந்திருக்கணும் (!?)" (அம்மாவை மட்டும் எழுப்பறதுக்குத் தீயா வேலை செய்யுது புள்ளே) :-(

May 7th 2016 

கோபமூட்டிய பேருந்து அனுபவமும் பின்பற்ற 10 அடிப்படைகளும்!

அந்தச் சிறுமிக்கு பன்னிரெண்டு வயது இருக்கலாம். பள்ளிச் சீருடை அணிந்திருந்தாள். குழந்தைகளுக்கே உரித்தான கள்ளம் கபடமற்ற அழகிய முகம். அன்று 29சி வழித்தடப் பேருந்தில் அவள் பயணித்தாள். அதே பேருந்தில் நான். அவள் முன் படிக்கட்டின் இறங்கும் வழியின் அருகில் இருந்த இருக்கையின் கம்பியைப் பிடித்து நின்றுக் கொண்டிருந்தாள். நான் நடத்துனரைத் தாண்டி சில இருக்கையைத் தாண்டி, அவளுக்கும் முன்னே நின்று கொண்டிருந்தேன்.

பேருந்தில் ஒருவரையொருவர் இடித்து நெருக்கும் அளவுக்குக் கூட்டம் இல்லை. ஏதோ ஒரு நிறுத்தத்தில் முன் படிக்கட்டின் வழியே ஏறிய அந்த இளைஞன், ஒடிசலாய், முன் பக்கப் பற்கள் நீட்டிக் கொண்டிருக்க, கண்களில் கள்ளத்தனத்துடன் (வர்ணைக்கான காரணம் பின்வரும் வரிகளில்) அந்தச் சிறுமியைப் பார்த்தான். ஏறிய பொழுதில் இருந்து சற்றே முன்னேறி வசதியாய் அந்தச் சிறுமியின் பின்னே நின்று கொண்டு உரச ஆரம்பிக்க, கூட்டம் குவிய ஆரம்பித்தது.

அவனுக்கு இன்னமும் வசதியாக, அந்தச் சிறுமியின் இடுப்பில் கைவைத்துச் சில்மிஷம் செய்ய ஆரம்பிக்க, அந்தச் சிறுமிக்கு அவஸ்தை. அச்சிறுமி அப்படியும் இப்படியும் நகர அவனும் விடுவதாயில்லை. ரௌத்திரம் பழகு என்று வளர்ந்த வளர்ப்பில், பார்த்துக் கொண்டு என்னாலும் சும்மா இருக்க முடியவில்லை. அப்போதுதான் மாநில அளவில் தற்காப்புக் கலையில் பட்டமும் வென்ற நேரம். பொறுத்தது போதும் பொங்கியெழு என்று அச்சிறுமியின் அருகில் நகர முற்பட்டபோது, அச்சிறுமியே அழுகையுடன் அவனைத் தள்ளி "ச்சீ ஏன் இப்படி ஒரசுறே" என்று சத்தம் போட, அருகில் இருந்த ஒரு பெண் அச்சிறுமிக்கு ஆதரவாய்ப் பேச, அப்போது அடித்தான் அந்தக் காலி ஒரு ட்விஸ்ட். அவன் சொன்னது... "தோ டா... இது மூஞ்ச பாரு, இதை நான் உரசுனேனா..." மேலும் சில கேவலமான சொற்களை அவன் பிரயோக்கிக்க, அந்த வார்த்தைத் தாக்குதலில், அச்சிறுமியின் சுயம் அத்தனை பேர் முன்னிலையிலும், அவள் அழகில்லை என்ற அந்தத் தாக்குதலில் தகர்ந்து போனது!

இதற்குதான் அந்த இளைஞனின் உருவத்தைப் பற்றிய வர்ணனைத் தந்தேன். அவன் இப்படிப் பேசும்போது யாரும் வாயைத் திறக்கவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் பின்பக்க வழியில் இருந்து முன்பக்க வழிக்கு நான் நீந்திக் கரைச் சேர்ந்து அவனை ஓங்கி ஓர் அறை கொடுக்க, மொத்தக் கூட்டமும் விழித்துக்கொண்டது.

"ஏய், $%## என்னை ஏன் அடிக்குறே?" என அவன் கேட்க, "உன்னை உன் மாமியார் விட்டுக்கு கூப்பிட்டு போக டா %$##%*# நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு நானும் பார்த்துட்டுதான் இருந்தேன். செய்யறதையும் செஞ்சுட்டு அடாவடியாப் பேசுறே, உன் முகரையைக் கண்ணாடியில் பார்த்தியாடா %$##**#@@? டிரைவர் வண்டிய நேரா போலீஸ் ஸ்டேஷன் விடுங்க" என்று சொன்னதும் அச்சிறுமி என் கையைப் பிடித்துக் கொண்டது, அந்தக் குழந்தையின் கண்களில் அத்தனை பயம். நான் சட்டென்று, அவள் காதில் குனிந்து, "நீ கவலைப் படாதே, நானே கம்ப்ளைன்ட் தரேன், நீ வர வேண்டாம்" என்றேன். அதற்குள் எல்லோரும் அவனுக்கு எதிராகக் குரல் கொடுக்க, "ஏய் உன்னை என்ன பண்றேன் பாரு", என்று சொல்லிக்கொண்டே பேருந்தில் இருந்து இறங்கி ஓடினான். நானும், "டேய் ஆணழகா நில்லுடா $%##^&" என்று சொல்ல அவன் ஓடியே போனான்!

இதுபோல நிகழ்வுகள் எல்லாம், நமக்கு வெறும் கதைகள்தான். டெல்லி தொடங்கி கேரளம் வரை எத்தனை நிர்பயாக்கள். பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்காரங்கள் நிமிடத்துக்கு நிமிடம் எங்கேயோ நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இங்கே பெண்கள் பாலியல் பாலத்காரம் செய்யப்படுவதற்கு, அவள் பெண் என்ற ஒரு காரணமே போதுமானதாய் இருக்கிறது என்பதுதான் உண்மை. அவள் நிறமோ, ஆடைகளோ, அழகோ, சாதியோ, மதமோ, வயதோ இவை எதுவுமே காரணங்கள் இல்லை. ஆண்களின் போதைக்கு ஊறுகாயாக ஒரு பெண் தேவைப்படுகிறாள், அவனின் காமத்துக்கு வடிகாலாய் ஓர் உடல் தேவைப்படுகிறது.

இவையெல்லாம் உண்மைதான் என்று ஆண்களே தங்களின் குற்றச் செயல்களின் மூலம் இதுவரை உறுதி செய்திருக்கிறார்கள்.

இவர்களின் மனநிலையை மாற்றும் முயற்சியில், பெண்களை மதிக்க வேண்டும், உன் சுதந்திரம் போல் அவளுக்கும் சுதந்திரம், தவறு செய்தால் கடுமையான தண்டனைகள் உண்டு என்பது போன்ற உளவியல் சார்ந்த, சட்டம் சார்ந்த, வளர்ப்புச் சார்ந்த எந்த மாற்றமும் இந்தச் சமூகத்தில் ஏற்படவில்லை. யாரோ ஒரு பெண் இறந்ததும் குரல்கள் வெடிக்கிறது, அடுத்தப் பரப்பரப்பான செய்தி வரும்போது, அந்தக் குரல்கள் நசுங்கிப் போகிறது அல்லது மக்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது. இறுதியில் சட்டம் குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்ச தண்டனையில் தன் கடமையை முடித்துக் கொள்கிறது.

ஒசாமாவை வளர்த்துவிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், பின்னாளில் வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல் முட்டியதும், அவனை அழித்தது. நம் நாட்டு அரசியல்வாதிகளும், சட்ட வல்லுனர்களும் கூட, மிகப்பெரிய ஓர் அழிவு வரும்வரை காத்திருப்பார்கள், தங்கள் வீட்டில் நெருப்பெரியும் வரை, அவர்களுக்கு மக்களின் சதைகள் பொசுங்கும் வாசனை தெரியாது.

குழந்தை என்றும் முதியவள் என்றும் பாராமல் வன்புணர்ச்சி செய்யத் தூண்டும் மோகம் என்பது பெரும் மன வெறியே. மதயானைகளை, வெறிப்பிடித்த நாய்களைக் கூடச் சரிப்படுத்த மனமின்றிக் கொலை செய்யும் சமூகம், அதை ஆதரிக்கும் சட்டம், இப்படிப் பெரும் வெறியுடன் மனித மிருங்களைத் தண்டிக்கச் சட்டம் இயற்றி, அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, இப்போதுள்ள பெற்றோர்கள் வருங்காலத் தலைமுறையைச் சரியாய் வளர்த்து சீர்ப்படுத்தும் வரை, பெண்கள் தங்களைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாகனம் ஒட்டிக்கொண்டு போகும்போது, பேருந்தில் செல்லும்போது, தனியே நடக்கும்போது பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை நானும் கடந்திருக்கிறேன். பெரும்பாலும் அத்தகைய சமயங்களில், உதவிக்கு எந்த ஆண்களும் வருவதில்லை. ஒரு சமயம் ஒரு காவல் துறை அதிகாரியிடம் புகார் அளித்தபோது கூட ஒருவனைத் துரத்திப் பிடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலும் நம் கைகளும் கால்களுமே நமக்குதவி.

சமயங்களில் சக பெண்கள், அதுவும் மீன் விற்கும், பூ விற்கும், காய்கறி விற்கும் எளிய பெண்களே உதவியிருக்கிறார்கள். மற்றவர்கள் தயங்கி தயங்கி நகர்ந்துவிட்டிருக்கிறார்கள். யாரையும் குறை சொல்ல முடியாது. அப்படித்தான் சமூகம் பெண்களைப் பழக்கி வைத்திருக்கிறது.

பயம், வன்முறை பயம், நீதி கிடைக்காதென்ற பயம், காவல்துறையை நாடுவதற்கும் கூட பயம், பத்திரிகைகளின் புனைவுகளில் பயம். ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், தற்கொலை செய்து கொண்டால், முதலில் கள்ளக்காதல் என்று போலியாய்க் கற்பிக்கப்பட்ட கற்பென்ற ஒன்று களங்கப்படுத்தப்படும் பயம், வீட்டில் உள்ள முதியவர் முதல் வளர்க்கும் நாய்க்குட்டி வரை விளம்பரப்படுத்தபடும் பயம், சமூகத்தின் ஏளனப் பார்வையின் மீது பயம், இப்படிப்பட்ட பயம் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் இழுத்தடிக்கும் காலவதியான சட்டம் உள்ள சமூகத்தில், குடிகாரர்கள் நிறைந்திருக்கும் சமூகத்தில் பெண் எப்போதும் போகப் பொருளே, அவளின் பயங்கள் தீர்ந்து, சாலையில் பயமில்லாமல் செல்லும்போது, சமதர்ம சமுதாயம் என்பதற்கான வித்து அங்கிருந்தே மலரத் தொடங்கும்.

அதுவரை, தல என்றும் தளபதி என்றும் கபாலி டா என்றும் கூவும் இளைஞர்கள் கூட நடு ரோட்டில் யாரோ ஒரு பெண்ணுக்குப் பிரச்சனை என்றால் ஓடிவர மாட்டார்கள், மாறாகத் தங்கள் ஸ்மார்ட்போனில் அதை ஒரு குருங்காட்சியாக எடுத்து வாட்ஸ் ஆப்புவார்கள். இந்த வீரர்கள்!

நம் அரசியலில் இரண்டற கலந்துவிட்ட வன்முறை, பலகீனமான சட்ட அமைப்புக்கள், பெரும்பாலான இளைஞர்களைக் கோழைகளாக்கி வைத்திருக்கிறது. சாதிகளைக் கொண்டு பிளவுப்படுத்தி வைத்திருக்கிறது. சாராயக் கடைகளைப் பெருக்கி போதையில் ஆழ்த்தியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம்?

1. ஆணோ, பெண்ணோ இரண்டு குழந்தைகளும் மனிதர்கள்தான். இரண்டு குழந்தைகளுக்குமே உடல் பலம் தேவை. ஆதலால் உணவில் பாரபட்சம் தவிர்க்கலாம்.

2. உடற்பயிற்சி, தியான பயிற்சி, தற்காப்பு கலை இருவருக்குமே அவசியம்.

3. சிவந்த நிறமே அழகு என்று பெண் பிள்ளைகளை வெயிலில் விடாமல் வீட்டுக்குள் அடைப்பதை தவிர்க்கலாம். பத்து முதல் மூன்று மணி வரை உள்ள வெயிலில் குறைந்தது பதினைந்து நிமிடமாவது நிற்பது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி யையும், அதைப்பொறுத்து உட்கொள்ளும் கால்சியமும் உடல் பலத்துக்குத் தேவை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

4. தினம் குழந்தைகள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கலாம். முன் முடிவு எடுத்துத் தீர்ப்புச் சொல்லாமல் நாம் நம்பும் உறவை பற்றிக் குழந்தைக் குறை கூறினால், அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று சிந்திக்கலாம்!

5. வெளியே விளையாடும்போது, குழந்தைகளின் மீது கவனம் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டு, எதிர் வீடு என்று போனால், நமக்குத் தொல்லையில்லாமல் வேலைகளைக் கவனிக்கலாம் என்றோ சீரியல் பார்க்கலாம் என்றோ மூழ்கிவிடுதல் தவறு!

6. நாம் கோழையாய் இருந்தாலும், நம் குழந்தைக்கு நாம்தான் ஹீரோ, ஆதலால் நம்முடைய நடவடிக்கைகளையும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

7. வன்முறை வீரம் இல்லை, விவேகமும் அன்பும், மாற்றி யோசித்தலும் சூழ்நிலையை எளிதாக்கும், அவசியம் ஏற்படும்போது ரௌத்திரம் பழகுவதும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

8. சட்டத்தில் இன்னமும் எங்கோ சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நம் பிள்ளைகளுக்குச் சட்டத்தை மதித்து நடக்கவும் சொல்லிக் கொடுக்கலாம்.

9. ஆணும் பெண்ணும் சமமே, பெண்பிள்ளை பலம் குறைந்தவள் என்றும் ஆண் மட்டுமே பலம் நிறைந்தவன் என்றும் சொல்லி வளர்ப்பதை தவிர்க்கலாம்.

10. ஒரு மாங்கனியின் விதையைப் போடும்போது ஒரு விருட்சம் வளர்கிறது, மாங்கனிகளைத் தருகிறது. அதுபோலவே குழந்தைகளின் மனதில் நாம் விதைக்கும் எண்ணங்களும் என்பதை மனதில்கொண்டு செயல்படுதல் அவசியம்.


http://tamil.yourstory.com/read/3ffbac9ec6/10-fundamentals-will-follow-the-experience-provoked-the-bus-

வாக்குரிமையென்பது

வாக்குரிமையென்பது
மக்களின் கையில் உள்ள மெழுகுவர்த்தி
நான்கு பக்கமும் இருப்பவர்கள்
அரசியல் வியாபாரிகள்
மக்கள் இருளில் தீக்குச்சித் தேடி
திசைக்கொருபக்கம் நகர
நான்கு பக்க அரசியல் வியாபாரிகளும்
மெழுகுவர்த்திக்கு விலை பேசுகிறார்கள்

துறவியாக!



அக்கானகத்தில்
ஏதோ ஒரு பறவையின் எச்சத்தில்
எழுந்த மரமது
அருகிருந்த ஆப்பிள் மரம்
சிறுவனிடம் பற்றுக் கொண்டு
பட்டப் பாட்டைக் கண்ட நாள் முதல்
மனிதர் அதன் கிளை முறித்தாலும்
கவலையுறுவதில்லை
அதன் கனி கொய்தாலும்
வேதனைகொள்வதில்லை
யாரோ ஒரு மரம்வெட்டி
அதன் கழுத்தை அறுக்கலாம் நாளை
அதைப் பற்றிய சலனமும் அதற்கில்லை
அம்மரம் வானம் பார்த்தே நிற்கிறது
உயிர் உறிஞ்சும் மனிதர்களிடம்
பற்று வைக்காத #துறவியாக!

கீச்சுக்கள்!

நம்மை நேசிப்பவர்களுக்குப் புன்னகையையும்,
நம்மை வெறுப்பவர்களுக்கும்
விலகி நிற்பவர்களுக்கும் இன்னும் கொஞ்சம் அதிகப் புன்னகையையும்
அளிப்பதுதான் வாழ்க்கையில் வாழ்தலுக்கான சாரம்!

வெளிப்படுத்தாத அன்பையே பிறகு அஞ்சலி என்பார்!


Learning a lesson from an experience could be a fate, but ending up with similar lessons repeatedly is called attitude!
அனுபவத்தில் கற்கும் ஒரு பாடத்திற்குக் காரணம் விதியாய் இருக்கலாம், அதே பாடத்தை பல முறை கற்கும்படி நேர்ந்தால் அதற்கு முட்டாள்தனமான நம் நடத்தையே காரணம்!


இயலாமை, அறியாமை, போதாமை, பேதைமை, கொடுமை, வறுமை....இவையனைத்தையும் போக்கிடுமா மே 16 இல் கை விரலில் வைக்கும் "மை" ???


அலட்சியமும் அவமரியாதையும் அன்பைக் கொல்லும் பேராயுதங்கள்!

அன்பை வெளிப்படுத்தும் சிறிய மெனக்கெடல் கூட இல்லாத எந்த நட்பும் உறவும் நீடிப்பதில்லை!

கீச்சு









சரியா குனிஞ்சுக் கும்பிடாத அந்த ஐநூறு கடை ஓனர்கள் யாரு? :-p
(மக்களுக்கு நல்லது நடந்தா சரி!)

வெறுமை

தாகம் தீர்க்காத நீர்
வெறும் குட்டையாய் மாறி
நாற்றமெடுத்தல் போல்
அன்பின் எதிர்ப்பார்ப்புகளை
பொய்க்கச் செய்யும்
உறவுகளும்
வார்த்தைகளில் மட்டுமே
உறவுகளாய்
எஞ்சி நிற்கும்!

இருவழிபாதை


 பூமி தாங்க நிற்கும் மரம்
மரம் இறுக்கிப் பற்ற
குலையாமல் சூழலும் பூமி
உண்மையான அன்பென்பதும்
இருவழிபாதைதான்
யாரோ ஒருவர் பூமியாக
யாரோ ஒருவர் வேராக!

ஐ டி துறையும் சமையல் அறையும்

வேலைகள் கொட்டிக் கிடக்கிறது ஆனால் இளைஞர்கள் தாம் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் வீணடிக்கின்றனர் என்ற ரீதியில் ஒருவர் பதிவிட்டிருந்தார், அவர் என் நட்புப் பட்டியலில் இல்லை! அவரை விமர்சித்து பலர் பதிவிடுகின்றனர்!

உண்மையில் அந்தப் பதிவில்
அவர் குறிப்பிட்டு இருப்பது நடைமுறையில் உள்ள மதிப்பெண்
சார்ந்த பாடமுறையைப் பற்றியது! ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பார்கள், படிப்பை வெறும் மதிப்பெண்ணுக்காக மட்டும் படித்து, 80 முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண் வாங்கினாலும் அவர்களின் படிப்பு சம்பந்தமாகவோ, அல்லது தங்கள் கருத்தை எடுத்துக்கூறும் மொழித்திறனோ இல்லாமல்தான் சிலர் வேலையில்லாமல் ஆரம்ப காலக் கட்டத்தில் அவதியுறுகின்றனர்!

தங்கள் குறையைப் புரிந்துக் கொண்டவர்கள் தங்கள் திறனை மேம்படுத்தி, அல்லது தங்களுக்கு விருப்பப்பட்டத் துறையில் முயற்சி செய்து முன்னேற்றம் காண்கின்றனர்!

இதுதான் உண்மை! யாரும் ஒரு வேலைக்கிடைக்கவில்லை என்றால் முடங்கிப் போவதில்லை, ஓரிடத்தில் கிடைக்காத வாய்ப்பு இன்னொரு இடத்தில் நிச்சயம் கிடைக்கும், ஆனால் முதல் முயற்சிக்கும் இரண்டாவது முயற்சிக்கும் இடையில் நிச்சயம் மாற்றம் நிகழ்ந்திருக்கும், அந்த மாற்றத்தை, மாற்றத்திற்கான முயற்சியை படிக்கும் போதோ அல்லது முடித்த பின்னரோ துவங்கியாக வேண்டும்! அதைத்தான் அந்த மனிதர் சொல்கிறார்! அந்தக் கருத்தில் தவறில்லை!

நானும் கூட பல ஊர்களுக்கும் நகரங்களுக்கும் நேர்காணல் செய்து ஆட்களைத் தெரிவு செய்வதற்காகச் சென்றிருக்கிறேன், ஆங்கிலம் வேண்டும் என்றாலும், அவர்களின் உண்மையான திறமையறியும் பொருட்டு அவர்களை தாய்மொழியில் பேசுமாறு சொல்லியிருக்கிறேன், பதட்டத்துடன் வருபவர்களுக்கு அவர்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் கொடுத்து பேச செய்திருக்கிறேன், சிலர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர், பலர் அதையும் நழுவ விடுகின்றனர்!

தாய்மொழியில் கூட தம்மை, தம் அறிவை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் சிலர் திணறி இருக்கின்றனர், மொழியறிவு பெரும் பிரச்சினையில்லை, எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் படிக்கும் பாடங்களைப் புரிந்துத் தெளிதல் வேண்டும், எதையும் ஆழ்ந்து அறியும் முயற்சி வேண்டும், இது மட்டும் இருந்தால் மொழியும் கைக்கூடும்!
எதையும் தெரிந்துக் கொள்ளாதது தவறில்லை, எப்போதுமே தெரிந்துக் கொள்ள முயற்சிக்காததே தவறு!

பி.டெக்கில் 88 சதவீதம் எடுத்த பெண் ஒருவர், அவருடைய உத்யோகம் குடும்பத்திற்கு மிகவும் அவசியமென்ற நிலையில் நேர்காணலுக்கு வந்தார், இரண்டு மேலாளர்கள் நிராகரித்து விட, ஒரு முறை நான் பார்த்துவிடும்படி வந்த சிபாரிசின் பேரில் என்னிடம் வந்தார்! எடுத்த முடிவில் தவறேயில்லை என்றே தோன்றும் அளவிற்கு அவர் ஒன்றுமே பேசவேயில்லை, தாய்மொழியில் கூட பதில்கள் வரவில்லை, ஏற்கனவே ஏதோ ஒரு தற்காலிக வேலையில்
இருந்த அவரை ஆறுமாத காலம் சில பயிற்சிகளையும், மொழியறிவையும் வளர்த்துக் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினேன், ஏழு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அவர் திரும்பி வர, அப்போதும் கூட அவரால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை, அந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில்
அவர் தன்னுடைய பலவீனங்களை சரி செய்யும் எந்த முயற்சியையும்
எடுக்கவில்லை என்று அறிந்து கொண்டேன், விண்ணப்பத்தை நிராகரிப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை!

அவருக்கு சொன்னதையே இங்கே எழுத முற்படுகிறேன், "தகுதியில்லாதவர், திறமையில்லாதவர் என்று யாரும் இங்கேயில்லை, ஓரிடத்தில் நமக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால், ஒன்று நாம் அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவில்லை அல்லது நமக்கு ஏற்றத் துறை அது இல்லை! அவ்வளவே!"

யோசிக்காமல், நம் திறமையை, விருப்பத்தை ஆராயாமல், பணம் ஒன்றே முதன்மையாக, விடாப்பிடியாய் ஒன்றை அடைய, அந்த துறைக்குத் தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ளமால் கடனே என்று முயற்சி செய்தால், இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும்!
யாரை விரும்புகிறோமோ அவரை முழுமையாய் அறிந்து கொள்வதுதான் காதல், அது போல்தான் படிப்பு, உழைப்பு எல்லாம்!

மற்றபடி படிப்போ, ஐ.டி துறையோ அல்லது வீட்டு சமையல் அறையோ எதுவாயினும் "ஆர்வம்-காதல்" இருந்துவிட்டால் வெற்றி சாத்தியப்படும்!

உடையும் சிலை

வார்த்தைகள் ஏதுமற்ற
அடர்மௌனத்தில் வீற்றிருக்க
காயங்கள் ஆறவில்லை
ஆழமாகிறது
பேச்சு உளியில்
உளவியல் பரிமாற்றம்
செய்துக் கொள்ளலாம்
எனினும் பதம் பார்த்த
உன் வார்த்தை
உளிகளில் பெருகியக் குறுதி
கொஞ்சம் காயட்டும்
தேர்ந்த சிற்பியாக
நீ மாற
உடைகிறது இச்சிலை
மௌனத்தில்!

வெப்பம்

கோடையின் வெப்பம்
நீரினால் தணியும்
உன் வார்த்தைகளின்
வெப்பம் தணிக்க
ஏதுமில்லை
தனித்துக் கொல்கிறேன்
மனதை!

கீச்சுக்கள்!

கொடுக்கும் இலவசங்களை வாங்கிக் கொண்டே இருங்கள், பிற்காலத்தில் நம் தலையில் ஏற்றிவிட்ட பெரும் கடன்தொகைக்காக, ஏதோ ஒரு முதலாளியோ நாடோ நம்மை நாய் வண்டியில் பிடித்துப் போனால் அதிர்ச்சியடையாதீர்கள்!!!


அன்பில் வேதனைக் கண்ணீர் இல்லை
கண்ணீர் தரும் அன்பிலும் உண்மையில்லை!



காரியத்துக்காக வரும் நட்பு
காரியத்துடன் கரைந்து விடும்!


திருமணமாகாத தோழனுடன் வெளியே செல்வது பூனைக்குட்டியை மடியில் கட்டிக்கொண்டுப் போவது போல, அதுவும் விடியற்காலையில் அவனுடன் ஜிம்மிற்கு செல்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போன்றது!
பயபுள்ள ஒரு பொண்ணு விடாம பாக்குது, ஒபினியன் கேட்டு என் மண்டைக்கும் வேட்டு வைக்குது! 😳

சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையில், லாயிட்ஸ் ரோட்டில்
ஒரு கல்யாண மண்டபத்தில் 5000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது, சாலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஆமாம் அப்படியேத்தான், சாலையைக் கடக்க முடியாத அளவிற்கு நடுரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தியிருக்கிறார்கள் அன்புத் தொண்டர்கள், இன்னும் பேரன்புடன் பல தொண்டர்கள், நாங்கள் பிரியாணி சாப்பிடும் வரை மக்கள் வீட்டை விட்டே வெளியே வர வேண்டாமென்று ஒரு வீடு விடாமல் எல்லோர் வீட்டு வாசலிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து அட்டகாசம் செய்துக் கொண்டிருக்கின்றனர்! ஒரே ஒரு காவல்துறை அதிகாரி அவர்களிடம் போக்குவரத்தை சரி செய்ய அல்லாடிக் கொண்டிருக்கிறார்!
இதுவரை ஆளுங்கட்சி வாசலை அடைத்ததில்லை, இப்போது எதிர்கட்சித் தொண்டர்கள்
மக்களுக்கு எதிரான கட்சிப்போல களப்பணியாற்றுகிறார்கள்!
என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா!?

News

கோக், பெப்சியில் ஆரம்பித்து, பான் பராக்கில் தொடர்ந்து, மேகி நூடுல்ஸ் தடையில் கொண்டு வந்து நிறுத்தி, பரபரத்தார்கள், பிற்பாடு சில மருந்துகளைத் திடீரென்று தடை செய்கிறோம் என்றார்கள், இன்றைய செய்தியில், பல்வேறு நிறுவனங்களின் ரொட்டி (ப்ரெட்) வகைகளில் 88 சதவீதம் புற்றுநோய் ஏற்படுத்தும் ராசயனங்கள் இருப்பதால் தடை செய்யப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்!
கோக், பெப்சி இருக்கிறது, மருந்துகள் விற்கப்படுகிறது, மேகி மீண்டு வந்தது,
இதனால் அறியப்படும் நீதி யாதெனில்; இந்த ரொட்டிகளும் விற்கப்படும்!!

சென்னை‬

சாலையில் புளிச்சென்று
பான்பராக் எச்சில் துப்பினவன்
இந்த ஊர் இல்லை

பெண்களின் தாலிக்கு
வட்டிப்பிடித்துக் கடன் தருபவன்
இந்த ஊர் இல்லை 


வேலைக்குப் போன பெண்ணை
வன்கொடுமை செய்து கொன்றவன்
இந்த ஊர் இல்லை

சிக்னல் தோறும் குழந்தைகளை
வைத்துப் பிச்சையெடுப்பவர்
இந்த ஊர் இல்லை

அதைக் கண்டும் காணாமல்
போகும் அதிகாரிகளும்
இந்த ஊர் இல்லை

பெரும் வணிக நிறுவனங்களில்
குறைந்த கூலியில்
உழைப்பை உறிஞ்சும் முதலாளிகள்
இந்த ஊர் இல்லை

சில வணிகக் கட்டிடங்களில்
விபத்தென்றப் போர்வையில்
விழுந்து செத்தவர்கள்
இந்த ஊர் இல்லை

அந்த மரணங்களுக்குப் பின்னே இருந்த
முதலாளிகளும்
இந்த ஊர் இல்லை

அரசு அலுவலகங்களில்
ஊழியர்கள் பலர்
இந்த ஊர் இல்லை

சாலையோரம் தங்கியிருந்து
ரோடு போடும் வறியவர்கள்
இந்த ஊர் இல்லை

ஓங்கி வளர்ந்து நிற்கும்
கட்டிடங்களைக் கட்டியவர்கள்
இந்த ஊர் இல்லை

மாறி மாறி
ஆண்டவர்களில் சிலர் கூட
இந்த ஊர் இல்லை

எந்த ஊர் என்றாலும்
எல்லோரின் சங்கமம்தான்
சென்னை
வசவுகளையும்
கேலிகளையும்
எள்ளல்களையும்
தாங்கித் தாண்டி
வந்தாரை வாழ வைக்குமே இந்த
‪#‎சென்னை‬

குழந்தைகள்‬ மீதான வன்முறையில்

குழந்தைகள்‬ மீதான வன்முறையில் பொதுவில் எங்கள் குடும்பங்களில் நம்பிக்கையில்லை, என் அம்மாவும் அப்பாவும் எதற்காகவும் என்னை அடித்ததேயில்லை, என் மீது மட்டுமல்ல என் சகோதரியிடம் கூட அவர்கள் கைப்பட்டு நான் பார்த்ததேயில்லை. அப்போது எங்கள் பெற்றோர் எங்களை வளர்த்த சூழலும், இப்போது நான் பிள்ளைகளை வளர்க்கும் சூழலும் நிச்சயம் மாறியிருக்கிறது!

படிப்பு, கலை, விளையாட்டு இவைகளில் மட்டுமே என் ஆர்வம் இருந்தது, அதிகபட்சமாய் நான் கண்டது தொலைக்காட்சியை மட்டுமே, வேறு எலெக்ட்ரானிக் சாதனங்களை, அதிகம் செலவு பிடிக்கும் விளையாட்டுப் பொருட்களை, குறைந்தபட்சம் ஒரு சைக்கிளைக் கூட நான் என் பெற்றோரிடம் கேட்டதில்லை, ஒருவேளை எதையும் கேட்டு அடம்பிடிக்காத பிள்ளைகள் இருந்தால் வன்முறைக்கு அவசியம் நேர்ந்திருக்காது என்பதை விட, நான் அடம் பிடித்திருந்தாலும் என் பெற்றோர் எனக்குப் பேசியே புரிய வைத்திருப்பார்கள் என்பது மட்டும் உறுதி!

இப்போது என் பிள்ளைகளிடம் நானும் பேசியே பல விஷயங்களைப் புரிய வைக்கிறேன், நாங்கள் பின்பற்றும் வழிமுறைகள் சில;

1. என்னைப் பொருத்தவரை, குழந்தையைத் தேவையில்லாமல் அழ வைக்கக் கூடாது, குழந்தைக்கு ஒன்று பிடித்தம் என்றால், அது அவசியம் என்றால், அதை எங்களால் தரமுடியும் என்றால், எப்போது முடியும் என்று சொல்லி அப்போது வாங்கித் தருவோம், முடியாதென்றால் குழந்தைகள் எத்தனை அழுதாலும் , வன்முறையைத் தவிர்த்து கண்டிப்புடன், வார்த்தைகளில் தன்மையுடன் மறுபடி மறுபடி முடியாதென்று, அது ஏன் முடியாதென்று, அது ஏன் அவசியமன்று என்று கூறி புரியவைத்து விடுவோம். என் பிள்ளைகளுக்கு இப்போது தேவையில்லாமல் அடம் பிடித்து அழுதால் எதுவும் கிடைக்காதென்று நன்றாகத் தெரியும்!

2. பெரியவர்களிடத்தில் மரியாதையின்றி அவர்கள் பேச நேர்ந்தால் அது தவறென்று புரிய வைத்து மன்னிப்புக் கேட்க வைப்போம். வீட்டில் சிறு சார்ட் பேப்பரில், இருவரின் பெயரெழுதி அவர்கள் செய்யும் நல்ல செயல்களுக்கென்று சிறு சிறு நட்சத்திர ஸ்டிக்கர் ஒட்டி, அதிக எண்ணிக்கையில் அது கூடும் போது, அவர்களுக்குப் பிடித்த ஒரு பரிசையோ, அல்லது கொஞ்சம் பணத்தையோ பரிசாகத் தந்து, அவர்களுக்கு ஒருவருக்கொருவர் பாராட்டும் பழக்கத்தையும் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

3. ஒருவேளை அவர்களுக்கு ஒரு வாக்குறுதித் கொடுத்து, அதை எங்களால் நிறைவேற்ற முடியவில்லையென்றால், நாங்கள் அவர்களிடம் மன்னிப்புக் கேட்போம், எப்போது முடியுமென்று சொல்லி நிறைவேற்றி வைப்போம். இந்த வகையில் அவர்கள் காத்திருக்கப் பழகிக் கொண்டார்கள், தவறு செய்தால் அவர்கள் தாமாகவே வந்து சொல்லி மன்னிப்புக் கேட்கவும் பழகிக் கொண்டார்கள், வீட்டில் எதையேனும் விளையாட்டில் உடைக்க நேர்ந்தாலும் கூட இருவரும் பொய் சொல்வதே கிடையாது, அதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்பார்கள், பிறகு அந்தத் தவறை, பெரும்பாலும் அவர்கள் செய்வது கிடையாது!

4. தினமும் இரவில் அவர்கள் பள்ளியில் நடந்தது, விளையாட்டில் நடந்ததை அண்ணனும் தங்கையும் இருவரும் மாறி மாறி சொல்வார்கள், குழந்தைகளாய் இருந்தபோது இருவருக்கும் கதைகள் சொல்லி, பாட்டுப் பாடி உறங்க வைப்பேன், இப்போது அவர்கள் கதைகள் சொல்லி, பாடி அல்லது பாடல் கேட்டுக் கொண்டே உறங்குகிறார்கள், நிம்மதியான உறக்கம் அவர்களுக்கு விடியலில் புத்துணர்வைத் தரும்.

5. வெறும் பாடப்புத்தகம் மட்டும் இல்லாமல் அவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, நேரடியான விளக்கம் தருவோம், வங்கி என்றால் வங்கிக்குச் சென்று, செடிகள் என்றால் அவர்கள் கையில் விதையைத் தந்து அதை அவர்களே பதியம் செய்து வளர்த்துவர வேண்டும் என்று, நேரத்தைப் பற்றி என்றால் கடிகாரத்தைக் கையில் தந்து, இப்படிச் செய்முறை விளக்கங்கள் பெரும்பாலும்!

6. வாரத்தில் ஒருநாள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு சிறு நடையோ, அல்லது சிறு பயணமோ செல்வேன், அதில் அவர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வேன், அந்தக் கேள்விகள் பூமியின் தோற்றம் முதல், சமீபத்து அரசியல் வரை வளர்ந்து, வேதியல், புவியியல், இயற்பியல் என்று வகைத்தொகை இல்லாமல் நீளும், பெரும்பாலும் விடைகள் உடனுக்குடன் அவர்களுக்குக் கிடைத்துவிடும், தெரியாத கேள்விகளுக்கு அவர்களையும் உடன் வைத்துக் கொண்டு புத்தகங்களைப் புரட்டிப் படித்து, படிக்கச் செய்து விளக்கங்கள் தந்துவிடுவேன்!

7. குழந்தைகளுக்கென்று நான் காட்டும் அதிகபட்ச வன்முறை அவர்களிடம் பேசாமல் சிறிது நேரம் மௌனமாய் இருப்பது, அம்மாவின் மௌனம் அவர்களுக்குப் பிடிக்காது!

8. எப்போதாவது அதிகம் குறும்பு செய்தால், அவர்கள் பின்புறம் லேசாய் அடிப்பேன், அல்லது செமையா அடிக்கப் போறேன் பாரு என்று சொல்வேன், இப்போதும் கூடப் பிள்ளைகள் நீ அடிக்கும்போது பார்த்துக்கலாம் என்றோ, அப்படியே சிலவேளைகளில் கையோங்க நேர்ந்தால் நகைக்கவும் செய்வார்கள்!

9. பிள்ளைகள் சில விஷயங்களைப் ஒருமுறை சொன்னாலே புரிந்துக் கொள்வார்கள், சில விஷயங்களைப் பலமுறை சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள், மறுபடி மறுபடி நாம் எடுத்த சொல்ல வேண்டும்!

10. என் மகனுக்குப் பதினொரு வயதாகிறது, மகளுக்கு ஏழு வயதாகிறது, இருவரின் குறும்புகளுக்கும் அளவேயில்லை, வன்முறை என்பது உடனடித் தீர்வு, ஆனால் அது குழந்தைகளின் கேள்விக் கேட்கும் திறனைக் குறைத்து, குழந்தைகளுக்கும் நமக்கும் இடைவெளியை உருவாக்கும், வன்முறையின்றிக் குழந்தைகளை வளர்க்க அதிகபட்சப் பொறுமையும், கற்றலை விரிவுபடுத்தும் விருப்பமும், மேலும் கற்கும் ஆர்வமும், எல்லாவற்றிற்கும் மேல் நம் குழந்தைகளும் சிறிய மனிதர்களே என்ற எண்ணமும், அவர்களின் சுயத்தைப் பாதிக்காத வண்ணம் நம் அன்பும் அக்கறையும் இருந்தால் போதுமானது!

வஞ்சனை!



ஓடும் நதிபோல் ஓடிக்கொண்டே
இருக்கலாம்
தேவைப்படும்போது
மனிதர்கள் தாகம் தீர்த்துக் கொள்வார்கள்

கனிகளைக் கொண்டு இருக்கும்
மரம் போல்
நின்றுகொள்ளலாம்
தேவைப்படும்போது
மனிதர்கள் பசித் தீர்த்துக் கொள்வார்கள்

செழித்த மண்ணைப் போல்
வளம் தரலாம்
தேவைப்படும்போது
மனிதர்கள் விதைத்து
அறுவடை செய்து கொள்வார்கள்

ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்களாய்
வளர்ந்து நிற்கலாம்
தேவைப்படும்போது
மனிதர்கள்
வளங்களை உறிஞ்சிக் கொள்வார்கள்

ஒருக்காலும் மனிதர்களாய்
மட்டும் நின்றுவிடாதீர்கள்
எடுப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்ட
குலத்திற்குக் கொடுப்பதற்கு
என்ன இருக்கிறது,
செயலற்ற கருணையைத் தவிர?!

 

News

இது போன்ற மதக் குழுக்கள் ஒழியும் வரை இஸ்லாமியப் சகோதரிகளுக்கு விடிவேயில்லை! எல்லா மதங்களும் ஏதோ ஒரு வகையில் பெண்களை சிறுமைப்படுத்துகிறது!









அன்பளிப்பு

இந்த அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும்போது செலுத்த வேண்டிய சில கட்டணத் தொகைகளை, வங்கிக் காசோலை எடுத்துச் செலுத்துவது போல, இந்தக் காஸ் சிலிண்டர்களுக்கும் வங்கியிலேயே பணத்தைச் செலுத்தும் முறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும், கீழ் விட்டுக்கு 25 ரூபாய் அதிகம், முதல் மாடிக்கு நூறு ரூபாய் அதிகம் என்று மாடிக்கு மாடி அன்பளிப்பு என்ற பெயரில் பில்லில் உள்ள தொகைக்கும் மேலே அதிகம் கேட்கிறார்கள்! எங்கள் குடியிருப்பில் 21 வீடுகள், ஒரு வீட்டுக்கு அதிகபட்சம் நூறு ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு குடியிருப்பில் அவர்களுக்கும் கிடைக்கும் தொகை 2100/- ரூபாய், இதுபோல ஒரு தெருவில் இருபக்கமும் சேர்த்து 30 வீடுகள், ஒரு தெருவில், ஒரு வேளை வந்து சப்ளை செய்வதற்கு, அவர்கள் மக்களிடம் இருந்து பிடுங்கும் பணம் 63000/- ரூபாய்! (இது அவர்களின் சம்பளம் தவிர்த்து வரும் உபரி வருமானம்)
இதுபோல ஓர் ஏரியாவில் எத்தனை தெருக்கள்? கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்!
யாரோ விரும்பிக் கொடுக்கும் அன்பளிப்புக் காலபோக்கில் கட்டாயக் கையூட்டு என்று ஆகிவிடுகிறது எல்லாத் துறைகளிலும்! இதையெல்லாம் டிஜிட்டல் மாயம் என்று மாற்றக் கூடாதா?
மக்களுக்காக வாழும் முதல்வரின் கவனத்துக்கு! மக்களுக்காகவே வரைபடங்களில் உள்ள நாடுகளில் உலா வந்து கொண்டிருக்கும் பிரதமரின் கவனத்துக்கு!

சுயம்‬

கருணை என்பது அடித்து
பிடுங்குவதல்ல
அது தானாய் வர
வேண்டியது!

காதல் என்பது கசக்கி
முகர்வதல்ல
அது இயல்பாய் மலர
வேண்டியது!

துரோகம் என்பது மன்னிக்க
முடிவதல்ல
அது நினைவுகளாய் உதிர
வேண்டியது!

வாழ்க்கை என்பது நடிக்க
முடிவதல்ல
அது சுயமாய் நிமிர
வேண்டியது!

எது எதுவென இருப்பதும்
அதுவல்லவே
இது இதுவென தேடுவதும்
எளிதில் கிடைப்பதல்லவே!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!