Wednesday, 1 June 2016

குழந்தைகள்‬ மீதான வன்முறையில்

குழந்தைகள்‬ மீதான வன்முறையில் பொதுவில் எங்கள் குடும்பங்களில் நம்பிக்கையில்லை, என் அம்மாவும் அப்பாவும் எதற்காகவும் என்னை அடித்ததேயில்லை, என் மீது மட்டுமல்ல என் சகோதரியிடம் கூட அவர்கள் கைப்பட்டு நான் பார்த்ததேயில்லை. அப்போது எங்கள் பெற்றோர் எங்களை வளர்த்த சூழலும், இப்போது நான் பிள்ளைகளை வளர்க்கும் சூழலும் நிச்சயம் மாறியிருக்கிறது!

படிப்பு, கலை, விளையாட்டு இவைகளில் மட்டுமே என் ஆர்வம் இருந்தது, அதிகபட்சமாய் நான் கண்டது தொலைக்காட்சியை மட்டுமே, வேறு எலெக்ட்ரானிக் சாதனங்களை, அதிகம் செலவு பிடிக்கும் விளையாட்டுப் பொருட்களை, குறைந்தபட்சம் ஒரு சைக்கிளைக் கூட நான் என் பெற்றோரிடம் கேட்டதில்லை, ஒருவேளை எதையும் கேட்டு அடம்பிடிக்காத பிள்ளைகள் இருந்தால் வன்முறைக்கு அவசியம் நேர்ந்திருக்காது என்பதை விட, நான் அடம் பிடித்திருந்தாலும் என் பெற்றோர் எனக்குப் பேசியே புரிய வைத்திருப்பார்கள் என்பது மட்டும் உறுதி!

இப்போது என் பிள்ளைகளிடம் நானும் பேசியே பல விஷயங்களைப் புரிய வைக்கிறேன், நாங்கள் பின்பற்றும் வழிமுறைகள் சில;

1. என்னைப் பொருத்தவரை, குழந்தையைத் தேவையில்லாமல் அழ வைக்கக் கூடாது, குழந்தைக்கு ஒன்று பிடித்தம் என்றால், அது அவசியம் என்றால், அதை எங்களால் தரமுடியும் என்றால், எப்போது முடியும் என்று சொல்லி அப்போது வாங்கித் தருவோம், முடியாதென்றால் குழந்தைகள் எத்தனை அழுதாலும் , வன்முறையைத் தவிர்த்து கண்டிப்புடன், வார்த்தைகளில் தன்மையுடன் மறுபடி மறுபடி முடியாதென்று, அது ஏன் முடியாதென்று, அது ஏன் அவசியமன்று என்று கூறி புரியவைத்து விடுவோம். என் பிள்ளைகளுக்கு இப்போது தேவையில்லாமல் அடம் பிடித்து அழுதால் எதுவும் கிடைக்காதென்று நன்றாகத் தெரியும்!

2. பெரியவர்களிடத்தில் மரியாதையின்றி அவர்கள் பேச நேர்ந்தால் அது தவறென்று புரிய வைத்து மன்னிப்புக் கேட்க வைப்போம். வீட்டில் சிறு சார்ட் பேப்பரில், இருவரின் பெயரெழுதி அவர்கள் செய்யும் நல்ல செயல்களுக்கென்று சிறு சிறு நட்சத்திர ஸ்டிக்கர் ஒட்டி, அதிக எண்ணிக்கையில் அது கூடும் போது, அவர்களுக்குப் பிடித்த ஒரு பரிசையோ, அல்லது கொஞ்சம் பணத்தையோ பரிசாகத் தந்து, அவர்களுக்கு ஒருவருக்கொருவர் பாராட்டும் பழக்கத்தையும் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

3. ஒருவேளை அவர்களுக்கு ஒரு வாக்குறுதித் கொடுத்து, அதை எங்களால் நிறைவேற்ற முடியவில்லையென்றால், நாங்கள் அவர்களிடம் மன்னிப்புக் கேட்போம், எப்போது முடியுமென்று சொல்லி நிறைவேற்றி வைப்போம். இந்த வகையில் அவர்கள் காத்திருக்கப் பழகிக் கொண்டார்கள், தவறு செய்தால் அவர்கள் தாமாகவே வந்து சொல்லி மன்னிப்புக் கேட்கவும் பழகிக் கொண்டார்கள், வீட்டில் எதையேனும் விளையாட்டில் உடைக்க நேர்ந்தாலும் கூட இருவரும் பொய் சொல்வதே கிடையாது, அதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்பார்கள், பிறகு அந்தத் தவறை, பெரும்பாலும் அவர்கள் செய்வது கிடையாது!

4. தினமும் இரவில் அவர்கள் பள்ளியில் நடந்தது, விளையாட்டில் நடந்ததை அண்ணனும் தங்கையும் இருவரும் மாறி மாறி சொல்வார்கள், குழந்தைகளாய் இருந்தபோது இருவருக்கும் கதைகள் சொல்லி, பாட்டுப் பாடி உறங்க வைப்பேன், இப்போது அவர்கள் கதைகள் சொல்லி, பாடி அல்லது பாடல் கேட்டுக் கொண்டே உறங்குகிறார்கள், நிம்மதியான உறக்கம் அவர்களுக்கு விடியலில் புத்துணர்வைத் தரும்.

5. வெறும் பாடப்புத்தகம் மட்டும் இல்லாமல் அவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, நேரடியான விளக்கம் தருவோம், வங்கி என்றால் வங்கிக்குச் சென்று, செடிகள் என்றால் அவர்கள் கையில் விதையைத் தந்து அதை அவர்களே பதியம் செய்து வளர்த்துவர வேண்டும் என்று, நேரத்தைப் பற்றி என்றால் கடிகாரத்தைக் கையில் தந்து, இப்படிச் செய்முறை விளக்கங்கள் பெரும்பாலும்!

6. வாரத்தில் ஒருநாள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு சிறு நடையோ, அல்லது சிறு பயணமோ செல்வேன், அதில் அவர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வேன், அந்தக் கேள்விகள் பூமியின் தோற்றம் முதல், சமீபத்து அரசியல் வரை வளர்ந்து, வேதியல், புவியியல், இயற்பியல் என்று வகைத்தொகை இல்லாமல் நீளும், பெரும்பாலும் விடைகள் உடனுக்குடன் அவர்களுக்குக் கிடைத்துவிடும், தெரியாத கேள்விகளுக்கு அவர்களையும் உடன் வைத்துக் கொண்டு புத்தகங்களைப் புரட்டிப் படித்து, படிக்கச் செய்து விளக்கங்கள் தந்துவிடுவேன்!

7. குழந்தைகளுக்கென்று நான் காட்டும் அதிகபட்ச வன்முறை அவர்களிடம் பேசாமல் சிறிது நேரம் மௌனமாய் இருப்பது, அம்மாவின் மௌனம் அவர்களுக்குப் பிடிக்காது!

8. எப்போதாவது அதிகம் குறும்பு செய்தால், அவர்கள் பின்புறம் லேசாய் அடிப்பேன், அல்லது செமையா அடிக்கப் போறேன் பாரு என்று சொல்வேன், இப்போதும் கூடப் பிள்ளைகள் நீ அடிக்கும்போது பார்த்துக்கலாம் என்றோ, அப்படியே சிலவேளைகளில் கையோங்க நேர்ந்தால் நகைக்கவும் செய்வார்கள்!

9. பிள்ளைகள் சில விஷயங்களைப் ஒருமுறை சொன்னாலே புரிந்துக் கொள்வார்கள், சில விஷயங்களைப் பலமுறை சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள், மறுபடி மறுபடி நாம் எடுத்த சொல்ல வேண்டும்!

10. என் மகனுக்குப் பதினொரு வயதாகிறது, மகளுக்கு ஏழு வயதாகிறது, இருவரின் குறும்புகளுக்கும் அளவேயில்லை, வன்முறை என்பது உடனடித் தீர்வு, ஆனால் அது குழந்தைகளின் கேள்விக் கேட்கும் திறனைக் குறைத்து, குழந்தைகளுக்கும் நமக்கும் இடைவெளியை உருவாக்கும், வன்முறையின்றிக் குழந்தைகளை வளர்க்க அதிகபட்சப் பொறுமையும், கற்றலை விரிவுபடுத்தும் விருப்பமும், மேலும் கற்கும் ஆர்வமும், எல்லாவற்றிற்கும் மேல் நம் குழந்தைகளும் சிறிய மனிதர்களே என்ற எண்ணமும், அவர்களின் சுயத்தைப் பாதிக்காத வண்ணம் நம் அன்பும் அக்கறையும் இருந்தால் போதுமானது!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...