Wednesday 1 June 2016

ஐ டி துறையும் சமையல் அறையும்

வேலைகள் கொட்டிக் கிடக்கிறது ஆனால் இளைஞர்கள் தாம் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் வீணடிக்கின்றனர் என்ற ரீதியில் ஒருவர் பதிவிட்டிருந்தார், அவர் என் நட்புப் பட்டியலில் இல்லை! அவரை விமர்சித்து பலர் பதிவிடுகின்றனர்!

உண்மையில் அந்தப் பதிவில்
அவர் குறிப்பிட்டு இருப்பது நடைமுறையில் உள்ள மதிப்பெண்
சார்ந்த பாடமுறையைப் பற்றியது! ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பார்கள், படிப்பை வெறும் மதிப்பெண்ணுக்காக மட்டும் படித்து, 80 முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண் வாங்கினாலும் அவர்களின் படிப்பு சம்பந்தமாகவோ, அல்லது தங்கள் கருத்தை எடுத்துக்கூறும் மொழித்திறனோ இல்லாமல்தான் சிலர் வேலையில்லாமல் ஆரம்ப காலக் கட்டத்தில் அவதியுறுகின்றனர்!

தங்கள் குறையைப் புரிந்துக் கொண்டவர்கள் தங்கள் திறனை மேம்படுத்தி, அல்லது தங்களுக்கு விருப்பப்பட்டத் துறையில் முயற்சி செய்து முன்னேற்றம் காண்கின்றனர்!

இதுதான் உண்மை! யாரும் ஒரு வேலைக்கிடைக்கவில்லை என்றால் முடங்கிப் போவதில்லை, ஓரிடத்தில் கிடைக்காத வாய்ப்பு இன்னொரு இடத்தில் நிச்சயம் கிடைக்கும், ஆனால் முதல் முயற்சிக்கும் இரண்டாவது முயற்சிக்கும் இடையில் நிச்சயம் மாற்றம் நிகழ்ந்திருக்கும், அந்த மாற்றத்தை, மாற்றத்திற்கான முயற்சியை படிக்கும் போதோ அல்லது முடித்த பின்னரோ துவங்கியாக வேண்டும்! அதைத்தான் அந்த மனிதர் சொல்கிறார்! அந்தக் கருத்தில் தவறில்லை!

நானும் கூட பல ஊர்களுக்கும் நகரங்களுக்கும் நேர்காணல் செய்து ஆட்களைத் தெரிவு செய்வதற்காகச் சென்றிருக்கிறேன், ஆங்கிலம் வேண்டும் என்றாலும், அவர்களின் உண்மையான திறமையறியும் பொருட்டு அவர்களை தாய்மொழியில் பேசுமாறு சொல்லியிருக்கிறேன், பதட்டத்துடன் வருபவர்களுக்கு அவர்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் கொடுத்து பேச செய்திருக்கிறேன், சிலர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர், பலர் அதையும் நழுவ விடுகின்றனர்!

தாய்மொழியில் கூட தம்மை, தம் அறிவை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் சிலர் திணறி இருக்கின்றனர், மொழியறிவு பெரும் பிரச்சினையில்லை, எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் படிக்கும் பாடங்களைப் புரிந்துத் தெளிதல் வேண்டும், எதையும் ஆழ்ந்து அறியும் முயற்சி வேண்டும், இது மட்டும் இருந்தால் மொழியும் கைக்கூடும்!
எதையும் தெரிந்துக் கொள்ளாதது தவறில்லை, எப்போதுமே தெரிந்துக் கொள்ள முயற்சிக்காததே தவறு!

பி.டெக்கில் 88 சதவீதம் எடுத்த பெண் ஒருவர், அவருடைய உத்யோகம் குடும்பத்திற்கு மிகவும் அவசியமென்ற நிலையில் நேர்காணலுக்கு வந்தார், இரண்டு மேலாளர்கள் நிராகரித்து விட, ஒரு முறை நான் பார்த்துவிடும்படி வந்த சிபாரிசின் பேரில் என்னிடம் வந்தார்! எடுத்த முடிவில் தவறேயில்லை என்றே தோன்றும் அளவிற்கு அவர் ஒன்றுமே பேசவேயில்லை, தாய்மொழியில் கூட பதில்கள் வரவில்லை, ஏற்கனவே ஏதோ ஒரு தற்காலிக வேலையில்
இருந்த அவரை ஆறுமாத காலம் சில பயிற்சிகளையும், மொழியறிவையும் வளர்த்துக் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினேன், ஏழு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அவர் திரும்பி வர, அப்போதும் கூட அவரால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை, அந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில்
அவர் தன்னுடைய பலவீனங்களை சரி செய்யும் எந்த முயற்சியையும்
எடுக்கவில்லை என்று அறிந்து கொண்டேன், விண்ணப்பத்தை நிராகரிப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை!

அவருக்கு சொன்னதையே இங்கே எழுத முற்படுகிறேன், "தகுதியில்லாதவர், திறமையில்லாதவர் என்று யாரும் இங்கேயில்லை, ஓரிடத்தில் நமக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால், ஒன்று நாம் அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவில்லை அல்லது நமக்கு ஏற்றத் துறை அது இல்லை! அவ்வளவே!"

யோசிக்காமல், நம் திறமையை, விருப்பத்தை ஆராயாமல், பணம் ஒன்றே முதன்மையாக, விடாப்பிடியாய் ஒன்றை அடைய, அந்த துறைக்குத் தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ளமால் கடனே என்று முயற்சி செய்தால், இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும்!
யாரை விரும்புகிறோமோ அவரை முழுமையாய் அறிந்து கொள்வதுதான் காதல், அது போல்தான் படிப்பு, உழைப்பு எல்லாம்!

மற்றபடி படிப்போ, ஐ.டி துறையோ அல்லது வீட்டு சமையல் அறையோ எதுவாயினும் "ஆர்வம்-காதல்" இருந்துவிட்டால் வெற்றி சாத்தியப்படும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!