கண்டு வந்தாயா
என்று கேட்டு நின்றாள்
காற்றிடம்,
வர்த்தகச் சந்திப்பில் இருக்கிறான்
வரவில்லை என்று கண்ணில் தூசி
இறைத்துச் சென்றது,காற்று!
பேசிவிட்டுச் சென்றாயா
என்று கேட்டு நின்றாள்
குருவியிடம்,
நண்பர்களுடன் அளவளாவிக்
கொண்டிருக்கிறான் என்று
கொத்திச் சென்றது, குருவி!
துயர் சொன்னாயா
என்று கேட்டு நின்றாள்
குயிலிடம்,
மகிழ்ந்திருக்கிறான் அங்கே
தன்னை மறந்து யாருடனோ
என்று கூவி சென்றது, குயில்!
செல்வம் சேர்க்கும்
முனைப்பில் இருக்கிறேன்
சும்மா இருக்கச் சொல் அவளை
என்று சிடுசிடுத்துச்
செய்தியனுப்பினான்
கிளியிடம்!
அத்தை அடித்ததும் வலிக்கவில்லை
தகாத கண்வீச்சிலும் விழவில்லை
பசியால் துடித்தும் துவளவில்லை
வார்த்தைகளில் அடிக்கிறான் கிளியே
வாய்பேச வழியில்லை - அவன் உணராத
அன்பையெல்லாம் இனி சொல்லியும்
பயனில்லை - தாளாத நோய்கொண்டு
தள்ளாடிச் சாகிறேன் - மறக்காமல்
இதை மறந்து விடு - ஒருபோதும்
சொல்லிடாதே - அவன் செல்வத்தின்
தேடல், என் இறப்பின் பொருட்டும்
தடைபட வேண்டாம், ஒருநாள் கூட!
சொல்லியே சாய்ந்திட்டாள்
வேரறுந்த கொடிபோலே!
சிந்தனை செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை ஆனது,
அவள் சாகவில்லை,
அவள் சாகவில்லை
என்று தாளாமல் சொல்லியே
தலைவன் கரத்தில் மாண்டது!
No comments:
Post a Comment