சமீபத்தில் வங்கியில் ஒரு தம்பதியைக் காண நேர்ந்தது, ஏதோ ஒரு பரிவர்த்தனையை அவர்களுக்குப் புரியும் வகையில் வங்கி ஊழியர் எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார், பெண்ணின் கையில் ஒரு வயது கூட நிரம்பாத ஒரு கைக்குழந்தை, அது தன் கைகளில் ஏதோ ஒரு பிளாஸ்டிக் குச்சியை வைத்துச் சப்பிக் கொண்டிருந்தது, "குழந்தை வாயில் வைக்குது பாரும்மா", என்று யாரோ ஒரு பெண்மணி சொல்ல, கொஞ்சம் கோபமாய் உருதுவில்
குழந்தையை அதட்டி விட்டு, (கவனிக்க வெறும் அதட்டி மட்டும் விட்டு), வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி விட்டார், அது வாயில் வாய்த்த குச்சியை எடுக்கவே இல்லை, குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வந்தால், பின் இது போன்ற பெண்கள் மருத்துவரிடம் சென்று புலம்பும் போதும், அந்த மருந்து எதற்கு, ஏன் கொடுக்க வேண்டும் என்று எந்தக் கேள்வியையும் அவர்கள் கேட்பதில்லை. அந்த மருந்து இனி கொடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையும் அவர்களுக்கு இல்லை!
தெரிந்த பெண் தன் ஒரு வயது குழந்தைக்குச் சளி காய்ச்சல் என்று மருத்துவரிடம் போக, அந்த மருத்துவரோ குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் ஆஸ்துமாவிற்கான மருந்தை மூக்கின் வழியாகக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லி விட, நான் வேறு ஒரு மருத்துவரிடம் காண்பிக்கச் சொல்ல, அது ஒரு சாதாரணச் சளி காய்ச்சல், எதற்கு இத்தனை மருந்து? என்று வேறு மருத்துவர் சாதாரண மருந்தையே கொடுத்து குழந்தையைக் குணம் அடையச் செய்தார், இங்கே தாய்க்கு ஓர் அக்கறை இருந்தது, யோசனை கேட்க வேண்டும் என்ற தெளிவு இருந்தது......
முந்தைய சம்பவத்தில் பெண் படிக்காதவர், இந்தப் பெண் படித்தவர்! குழந்தை வளர்ப்பில் படிப்பே பிரதானம் அல்ல, இருப்பினும் சிறந்த கல்வி ஒரு வழிகாட்டுதல்! குழந்தை வளர்ப்பில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்து விடுவதில்லை, இருப்பினும் எது சரி எது தவறு என்று ஆய்ந்து அறிய கல்வி ஒரு வழிகாட்டுதல், அந்தக் கல்வியோடு கூடிய ஓர் அக்கறை, ஒரு தாய்க்கோ தந்தைக்கோ, ஒரு தெளிவைத் தரும்.
பெண்களுக்கு இப்படியென்றால், ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை. குடிக்கும் புகைக்கும் அடிமையான ஆண், தன் குழந்தையின் உடல்நிலையைப் பற்றி அக்கறை கொள்வதில்லை, நான்தானே குடிக்கிறேன், நான்தானே புகைக்கிறேன் என்று நியாயத் தர்மம் பேசுவார்களே அன்றி, அது தன் குழந்தையின் மன வளர்ச்சியை, உடல் வளர்ச்சியைக் குலைக்கும் என்ற அறிவு சிறிதும் இல்லாதவர்கள், படித்தவனோ படிக்காதவனோ, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது தன் குழந்தைக்குத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற அக்கறை இல்லாதவர்கள்தான் இங்கே பெரும்பாலும்!
குடிக்காமல் புகைக்காமல் ஒருவன் வாகனம் ஓட்டினாலும், மற்றுமொரு குடிகாரத் தந்தை எவனோ ஒருவன் குடித்து விட்டு வாகனம் ஒட்டி மற்றவரைச் சாய்க்கலாம், அப்போது என்ன செய்வது?
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று சொல்லும் சான்றோர்களுக்கு வணக்கம், தானாய் ஒரு சாவு வரும்
என்பதற்காக நாமே ஒரு சாவைத் தேடிப் போகுதல் தகுமோ?
குழந்தைகளின் மீதான வன்முறையை ஒவ்வொரு முறை கடக்கும் போதும் மனம் பதறுகிறது, பட்டியலிட மனம் வலிக்கிறது!
குடிக்கும் ஏழைத் தந்தை, குடித்தால் உடம்பு வலி போகுது என்றோ, குடித்தால் கவலைத் தீரும் என்றோ தன் மகனிடம் சொல்லி குடிக்கலாம், பின்னாளில் அவன் மகனும் மன வேதனை தீர்க்கக் குடியை நடலாம்....பணக்கார தந்தை, குடிப்பது ஒரு சமூக அந்தஸ்து என்று சொல்லி குடிக்கலாம், அவனுடைய மகனும் பின்னாளில் அந்த அந்தஸ்திற்காகக் குடிக்கலாம்....
ஊழல் நிறைந்த இந்தச் சமூகத்தில், திருமணம் பற்றிய தெளிவு இன்னும் வரவில்லை, சாதியைக் கொண்டும், செல்வத்தைக் கொண்டும், வெளிப்புறக் கவர்ச்சியைக் கொண்டும் நடக்கும் இரு மனங்களின் திருமணங்கள் உண்மையில் மணப்பதில்லை! ஆணோ பெண்ணோ சிறந்த கல்வியைக் கொடுங்கள், வாழ்க்கைத் துணையை, அன்பைக் கொண்டும், நல்ல அறிவைக் கொண்டும், அக்கறையைக் கொண்டும், சிறந்த பண்பை கொண்டும், சரியான வயதைக் கொண்டும், தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்...ஊருக்காகவும் உலகுகக்காகவும் உங்களின் சாதிக்காகவும், அல்லது செல்வ நிலைக்காகவும் இரு வேறு உள்ளங்களைத் திருமணப் பந்ததிற்குள் தள்ளாதீர்கள்!
பக்குவமில்லாத, பகுத்தறிவில்லாத மனங்களின் தாம்பத்தியத்தில் பிறக்கும் குழந்தைகளின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும், எதிர்காலமும், வாழ்க்கையுமே கேள்விக் குறியாகி விடுகிறது பெரும்பாலும்!
ஒரு ஜீவனை உலகுக்குக் கொண்டு வரும் உடல் தகுதி உங்களுக்கு அந்த அந்த வயதில் ஏற்படும் உடற்கூறுகளால் வந்துவிடலாம், ஆனால் உண்மையில் நீங்கள் தாயாகவோ, தந்தையாகவோ ஆவதற்குப் பெரும் மனப்பக்குவம் தேவைப்படுகிறது, அது வரும்வரை, நீங்கள் தாம்பத்யத்தில் மட்டுமே இன்பம் காணுங்கள், இன்னுமொரு உயிரை உலகுக்குக் கொண்டு வந்து வதைத்காதீர்கள்!
No comments:
Post a Comment