Sunday, 17 February 2019

துணையாகும்


தனித்தத்தொரு
பயணத்திலும்
உன் நினைவுகள்
துணையாகும்!

வியாபாரம்

உள்ளன்போடு இல்லாமல்
உறவாடும் எதுவும்
வியாபாரமே
வேலைகள் தீர்ந்ததும்
மிஞ்சுவதும் மனப்பாரமே!

பிழையேதுமில்லை

அன்பில் பிழையேதுமில்லை
ஆட்களே பிறழ்கிறார்கள்
பிழையாகிறார்கள்!

இன்னொரு தாய்மை

பார்வையில்
பசியுணர்வாள்
அம்மா

மௌனத்தில்
பிடிவாதமறிவார்
அப்பா


ம்ம் என்ற
சலிப்பில்
தேவை தீர்ப்பான்
அண்ணன்

செல்லச்
சீண்டலில்
தனிமை துரத்துவான்
தம்பி

எப்போதும்
கருணையில்
அன்னையாவாள்
சகோதரி

அழைக்காமலேயே
அருகில்
துணை நிற்பாள்
தோழி

இவையெல்லாம்
நீ என்றால்
நேசிக்கலாம் வா
பரிசாக இன்னொரு
தாய்மை
நீயும் காணலாம்
வா!
Image may contain: one or more people, tree, plant, outdoor and nature

மணக்கிறது

உன் பூக்கள்
காய்ந்துதிர்ந்தன
அதில்
காதல் மட்டும்
இன்னமும்
மணக்கிறது!

Image may contain: plant, flower and outdoor

காதல் மலர்ந்தது

ஊதா பூக்களை
உதிரும் வரை
தயங்கி வைத்திருந்து
நீயும்
உன் இசையில்
மயங்கி பார்வையை
மட்டும் பரிசளித்துவிட்டு
நானும்
விலகிச் சென்ற
நாளில்தான்
நம்மிடையே
காதல் மலர்ந்தது!

Image may contain: plant, flower, outdoor and nature

கொடிய மரணமும் வரமேதான்

முதியோர் இல்லத்தில்
இருட்டானதொரு
அறையின் மூலையில்
யாரையோ எதிர்நோக்கி
புலன்களின் தவிப்பில்
நடுங்கும்
வற்றியக் கைகளை
ஒருநாள் பற்றியிருந்தேன்


மூத்திரத்தின் வீச்சத்தில்
அருகிருந்த வயதுமுதிர்ந்த
பூனையின் உதிர்ந்த ரோமத்தில்
எங்கோ கசிந்த பாடலில்
உணர்வுகள் கலையாமல்
என் முகத்தில்
தன் பொக்கிஷத்தைத்
தேடிய அந்த விழிகளை
ஊமையாய் பார்த்திருந்தேன்


பிள்ளையேதும் பெறாமல்
முதிய கணவன் மாய்ந்தபிறகு
தனித்த அவ்வீட்டில்
பரந்த ஒர் அறையில்
யாரோ ஒருவள்
ஊதியத்திற்கு சோறிட
மங்கிய ஒளியில்
அழுக்கான சுவர்களில்
மூத்திரத்திற்கான குவளைகளில்
தள்ளாமையில் முடங்கிக்கிடக்கும்
மற்றுமொரு மூதாட்டியிடம்
உணர்வுத்ததும்பி அமர்ந்திருந்தேன்

ஆசையாய் பழையப்புகைப்படங்களை
ஆயிரமாயிரம் நினைவுகள் தூண்ட
பகிர்ந்துக் கொண்ட
அந்த முதியக் குழந்தையின் லயிப்பில்
“திரும்ப எப்ப வருவீங்க?”
என்றொலித்த கேள்வியில்
“யாருக்கும் தொந்தரவில்லாமல்
சட்டுன்னு உயிர் போய்டணும்!”
என்ற பிரார்த்தனையில்
மனம் உடைந்திருந்தேன்

முதுமையில்
இருள் கவ்வியிருக்கும் அறையில்
அழுக்கான சுவர்களில்
பஞ்சடைந்துப் பழுதடைந்து
அன்பற்று அடைக்கப்படும்
இரக்கத்தைக்காட்டிலும்
சட்டென்று வாய்த்துவிடும்
கொடிய மரணமும்
இறுதியில் வரமேதானென்று
உணர்ந்திருந்தேன்!

கீச்சுக்கள்!

காதலென்பது கடலைப்போல, அடிக்கடி ஆர்ப்பரித்தாலும், அன்பு ஆழமாய் இருத்தல் வேண்டும்!
---------------

கல்லறைகள் காதலின் சின்னம் அல்ல,
நேரத்திற்கேற்பவும், தேவைகேற்பவும் மாறாமல், உணர்வுகளை மதித்து வாழ்விப்பதே காதல்!!!
-------------

எதிர்ப்பார்ப்புகளைச் சுமந்து ஏமாறுவதைவிட, ஏதுமற்று தனித்திருக்கும் நிலை நலம்!
---------------

காதல் எந்த வடிவத்திலும், நிறத்திலும் இல்லை, அது எப்போதும் அன்பும் கருணையும் நிறைந்திருக்கும் மனங்களில் மட்டும் காதலாக வாழ்கிறது!
-------------

இரையாகும் மானிடம் புலிக்கு ஏது இரக்கம்?
-----------------

இலை உதிர்தல் போல் அத்தனை எளிதானது ஒருவரை அவமதிப்பது! அன்பு பாராட்டுவது என்னவோ, விதை விதைத்து, மரம் வளர்ப்பது போல, சாத்தியப்படுத்தும் மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை!
--------------

இறுதியில் ஒன்றுமில்லை
அதற்குத்தான் எத்தனை வழக்கு?!
#வாழ்க்கை

21 ஆம் நூற்றாண்டின் மனித வளர்ச்சி என்பது புற்றுநோயின் வீக்கம்!

21 ஆம் நூற்றாண்டின் மனித வளர்ச்சி என்பது புற்றுநோயின் வீக்கம்!
இந்தக்கட்டுரையை எப்படி ஆரம்பிக்கலாம்? புள்ளிவிவரங்களோடா? எத்தனைக்கோடி புள்ளிவிவரங்கள் கொட்டிகிடக்கிறது, அவையெல்லாம் என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது?

எகிப்திய நாட்டின் இருபது வயது இயக்குநர் சாராவின் குறும்படத்தைக் காண நேர்ந்தது, அதில் 21ஆம் நூற்றாண்டு எத்தகையது என்கிறார்! ஒரு கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவம் சிலபேரை செல்வந்தர்களாக்க, பலகோடி மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கிறது, உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்களிடம் உலகின் முப்பத்தைந்து சதவீத செல்வம் கொட்டிக்கிடக்கிறது, இது எப்படி சமத்துவத்தை நிலைநிறுத்தும்?

இந்தக்கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில், அதிர்ஷ்டம் மட்டுமே ஒருவருக்கு உரிமையை தருகிறது, இன்று உங்கள் உடைமை உங்களிடம் இருக்கிறது என்றால் அது உங்களின் அதிர்ஷ்டம் மட்டுமே, ஒருவரின் அதிர்ஷ்டமும் கூட மற்றவரின் மறுக்கப்பட்ட நீதியில்தான் கிடைக்கிறது! இங்கே பக்கோடா சுடுபவன் அரசாங்கத்திடம் 43000 கடன் வாங்கி வியாபாரம் செய்வது அவனது அதிர்ஷ்டம், நாளை அவன் விஜய் மல்லையாவனால், அது அவனது நல்லநேரமே, அதே நேரம் வாங்குகிற மாதச்சம்பளத்தில் ஒருவனிடம் வரியைப்பிடுங்கிக்கொள்கிற அரசாங்கம், அவனுக்கு குறைந்தப்பட்சம் எந்த கட்டமைப்பு வசதிகளையும் சாலைமுதற்கொண்டு செய்து தருவதில்லை! உங்களின் நீதி என்பதும் மற்றவர் காட்டும் கருணையில்தான் அமைந்திருக்கிறது!

இங்கே நீங்கள் பக்கோடா சுட்டாலும், வரிகள் கட்டுவதற்காகவே உழைத்தாலும், இங்கே வெற்றி என்பதும் “உங்களுக்கு என்ன தெரியும் என்பதைவிட யாரை தெரியும் என்பதில் தான் அடங்கியிருக்கிறது!”
நம்முடைய பள்ளிகளும், கல்லூரிகளும் நாம் பிறருக்கு அடிபணியவே கற்றுத்தருகின்றன, சுயசிந்தனையற்ற ஒரு சமுதாயம், ஒரு மனிதனின் வெற்றியாக பணத்தையும், பதவியையும், திரைவெளிச்சத்தையும், புறத்தோற்றத்தையுமே காண்கிறது, உண்மையான திறமைகளை அல்ல!

ஒரு மைதானத்தில் உதைக்கப்படும் ஒரு பந்து பலகோடி மக்களை உசுப்பேற்றுகிறது, வெறி கொள்ள வைக்கிறது, அதற்குப் பாய்ச்சப்படும் மீடியா வெளிச்சம், கடைகோடியில் இன்னமும் வறுமையில் உழலும் மக்களையோ, பட்டினிச்சாவுகளையோ காட்டுவதில்லை, ஆடம்பரப்பொருட்களில் இருக்கும் மோகம், சகமனிதர்களை நேசிப்பதில் இல்லை, ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் இங்கே பலரால் வாழ்ந்துவிட முடிவதில்லை, காடுகள் அழிக்கப்படுவதைப்பற்றியோ, நம்முடைய சுயநலத்தில் பூமி குடையப்படுவதைப் பற்றியோ, பூமி சூடாவதுப்பற்றியோ, உணவுச்சங்கிலியில் நம் கை ஓங்கியிருக்கிறது என்பதற்காக கண்டபடி உயிர்களை வதைப்பது பற்றியோ நமக்கு கவலையேதும் இல்லை, நாம் வாழும் பூமி, நாம் வகுத்த விதிமுறைகள் நமக்கானது மட்டுமே, அது பூமிக்கோ நம் தலைமுறைக்கோ, பிற உயிர்களுக்கோ தீங்கு விளைவிப்பதைப் பற்றி நமக்கு கவலையேதுமில்லை, இப்படித்தான் நாம் எதை கொண்டாட வேண்டும் என்று மீடியா முடிவு செய்கிறது!

திரைவெளிச்சத்தில் இருக்கும் போலியான மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொள்கிறோம், நிசர்சனத்தில் உழைப்பவர்களை அலட்சியப்படுத்துகிறோம், சுயநலம் என்பதை வெற்றியாகவும், அன்பு என்பதை பலவீனமாகவும் கட்டமைத்திருக்கிறோம்! “பிறக்கும் குழந்தைகள், தன்னுடைய நிறத்தையோ, இடத்தையோ, சாதியையோ, மதத்தையோ தேர்வு செய்ய முடிவதில்லை, இருப்பினும் அதைவைத்தே மனிதர்களின் உரிமைகளை நிர்ணயிக்கிறோம், இது எப்படிச்சரியாகும்?”

அரசியலில் ஒருவன் ஊழல்களை திறம்பட செய்து, சுயலாபத்திற்காக காலில் விழுவதும், பின்பு கழுத்தைப்பிடிப்பதுமாக இருந்தால், “ஆகா எப்படிப்பட்ட புத்திசாலி!” என்று புகழ்கிறோம், இந்தச் சமுதாயத்தில் புத்தியும், வெற்றியும் இப்படித்தான் அடையாளம் காணப்படுகிறது, வெற்றி என்பது இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்படுகிறது, நேர்மறை என்பதும் எதிர்மறை என்பதும் கிடைக்கும் சூழ்நிலையைக்கொண்டு மாறுபடுகிறது அல்லது மாற்றிக்கொள்ளப்படுகிறது, ஓட்டுக்குக் காசுக்கொடுத்தால் வாங்கிக்கொள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய் என்பது நவீன வெற்றியின் தாரக மந்திரமாகவும், புத்திசாலித்தனத்தின் குறியீடாகவும் மாறியிருக்கிறது! இதில் தனித்தன்மை என்பது மாட்டிக்கொள்ளாமல் திருடுதலில் இருக்கிறது, மனசாட்சியில், மனிதத்தன்மையில் இல்லை!

முந்தைய நாளின் விடியலில் நான்கு மணிப்பொழுதில் வாகனங்களற்ற நெடுஞ்சாலையில் அலுவலகத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தப்போது முன்னே வேகமாய் சென்றுக்கொண்டிருந்தக்காரொன்று சற்றுத்தடுமாறி நின்று பின் ஒதுங்கிச்சென்றது, அதன் பின்னே சென்றுக்கொண்டிருந்த என் வாகனத்தை நிறுத்த நாயொன்று நடுரோட்டில் அடிப்பட்டு குற்றுயிரும் குலைவுயிருமாக கிடக்க, வாகனத்தை நடுரோட்டில் நாய்க்கு அரண்
கட்டி நிறுத்தி, இடதுபுறம் வந்த வாகனத்தை உதவிக்கேட்டு நிறுத்தினேன், நான் நிறுத்தி இறங்கவும், இறந்துக்கொண்டிருந்த நாயை எழுப்பிவிடும் முனைப்பில் அதுவரை நடுரோட்டில் போராடிக்கொண்டிருந்த மற்றொரு நாயொன்று ஏதோ ஒரு நம்பிக்கையில் விலகிச்சென்றது, சில இளைஞர்கள் நிறுத்திய வாகனத்திலிருந்து இறங்கி அதன் வாயில் நீருற்ற நாயின் உயிர் அடங்கியது, பின்பு இறந்த நாயின் உடலை சாலையின் மறுப்பக்கம் எடுத்துச்சென்று பாதுகாப்பாய் நகர்த்தியப்பின் வீடு வந்துச்சேர்ந்தேன், ஒரு இறப்பைக்கண்டுவிட்டு வந்தப்பின் உறக்கமில்லை, வேகமாய் மோதியவனுக்கும், வேடிக்கைப் பார்த்தவர்களுக்கும் அது வெறும் நாயின் உயிராய் இருக்கலாம், ஆனால் நாம் வாழும்
பூமியில் மனிதர்களாகிய நாம் நம்முடைய மேதாவினத்தை இப்படித்தான் நிறுவியிருக்கிறோம், பேசத்தெரிந்த சகமனிதர்களை நிறம், நாடு, சாதி, மதம் என்று பேதம் காட்டி உரிமைகளை வரையறுத்தது மட்டுமல்லாமல் சக உயிர்களுக்களான மிருகங்களுக்கும், இயற்கைக்கும் நம்முடைய தேவைகளுக்குட்பட்டே நீதியை வைத்திருக்கிறோம்!

இந்த நவீன மனிதர்களின் கட்டமைக்கப்பட்ட இயந்திர உலகத்தின் வேறுபாடுகளும், போலித்தன்மைகளும் எப்போது முடிவுக்கு வரும்? எந்திர மனிதர்களை தரவுகளை வைத்தும் நம் வெற்று புத்திச்சாலித்தனத்தின் அடித்தளத்தை வைத்தும் உலகை நிர்மாணிக்கும் வேளையில், என்று நம்முடைய உண்மையான புத்திசாலித்தனம் சரியான சமூகநீதியை அனைவருக்கும் அனைத்துக்கும் சாத்தியப்படுத்துவதில்தான் உள்ளது என்பதை உணரப்போகிறோம்?!

அந்த மாற்றம் எப்போது வரும், நாம் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?

Image may contain: one or more people

முரண்

குறைந்தப்பட்ச
போக்குவரத்து விதிகளை
மதிக்காத மக்கள்
குறைந்தபட்சம்
நன்மைசெய்யும்
ஆட்சியாளர்களை
எதிர்நோக்கி
காத்திருக்கிறார்கள்

#முரண்

அவலம்

ஒரு நாட்டின்
ஆட்சி நிர்வாகத்தை
தலைநகரின் சாலையில்
கண்டுக்கொள்ளலாம்
சாலைகள்
படுமோசமாய் இருக்கின்றன

#அவலம்

பகுத்தறிவு

நடுஇரவின்
வெறிச்சிட்ட சாலையிலும்
விதிகளை மதித்து
ஓரமாய் நடக்கின்றன
நாய்கள்
அப்போதும்
சீறிப்பாய்கின்றன
ஆறறிவின்
வாகனங்கள்!

#பகுத்தறிவு

February 2018

திறமை

பெண் ஓட்டுநர்களிடம்
அறச்சீற்றமடைந்து
சீறிப்பாய்ந்து
வாகனங்களின் முன்னே
விழும் ஆண்களை
அப்போதும் உரசுவதில்லை
பெண்கள்

#திறமை

தற்கொலைகள்

சீனப்பெருஞ்சுவரை
எழுப்பாத வரை
இந்தியாவின்
சாலைத்தடுப்புச்சுவர்கள் யாவும்
பாதசாரிகள் எகிறிகுதித்து
மாயும்
தற்கொலைக் களங்களே!

#தற்கொலைகள்

சாகும்வித்தைகள்

#சிக்னல்_கவிதைகள்
நடுத்தெருவில் தவறவிட்ட வறுத்தப்பட்டாணிகளைப் போல
எல்லாத்திசைகளிலும்
சிதறிஓடுகின்றன
இருசக்கர வாகனங்கள்
பலரின் கனவுகளை
நசித்தப்படி! 

கீச்சுக்கள்

தாயும் சேயும் என்றாலும் கூட எந்த உறவிலும் இருவரின் நேசமும் ஒன்றுபோல இருப்பதில்லை! எந்த உறவிலும் அளப்பரிய அன்புக்கொண்டவரே தாயாகிறார்!
---------------

எத்தனை கோடி வரிகள் என்றாலும்
அதே திருடர்களிடம்தான் ஆட்சி
ஜனநாயகத்தில்!
---------------

சிலருக்கு தீர்வுகள் தேவைப்படுவதில்லை, வெறும் புலம்பல்கள் போதுமானதாய் இருக்கிறது!

இறுதியில் தமிழ்த்தாயும்

முதலில்
கடவுளை கருவறையில்
வைத்து
பிறரைத் தள்ளி நிற்கப்
பணித்தார்கள்
பின்பு பூசாரிகளை
மடாதிபதிகளாக்கி
அவர்களுக்கு
தனி மேடையமைத்தார்கள்
தமிழர்களின் சாராய
ஆட்சியில்
பல்லாயிரக்கான
குடும்பங்கள்
வறுமையையும்
வன்முறையையும்
இப்படியே
சகிக்க
இறுதியில்
தமிழ்த்தாயும்
தலைத்தாழ்ந்துப்போனாள்!


Image may contain: 1 person

தப்பிவிடும் வாய்ப்புகள்

கூரிய ரம்பமொன்று
அறுப்பதையறியாமல்
கிளையின்
முனையிலொரு அணில்
பழத்தினை சுவைக்கிறது
மாற்றம்
எத்தகையதென்பதை
உணராமல்
வாக்குச்சாவடியில்
ஓட்டை விற்றுப்பெற்ற
மூலதனத்தினை
மக்கள் மனம் ரசிக்கிறது
முன்னதில் அணில்
தப்பிவிடும் வாய்ப்புகள்
அதிகம்!
Image may contain: outdoor

எனினும்_விடியலழகு!

எகிறிநிற்கும் விலைவாசியில்
மாதச்சம்பளக்காரனின்
வருமானத்தில்
துண்டுவிழுவதற்குப்பதில்
வேட்டியே விழுந்திருக்கிறது
பொய்த்துப்போன மழையில்
கிடப்பில் கிடக்கும்
நதிநீர் இணைப்பில்
விவசாயிகளின்
கோவணம் என்பது
அம்மணமாய்
உருமாறியிருக்கிறது
சாராயத்தில் மூழ்கிய
தேசத்தில்
வீதிக்குவீதியும் வீட்டிலேயும்
சாராயமென்ற முன்னேற்றத்தில்
பிள்ளைகளின் கல்விக்கனவு
கேட்பாரற்று
நசிந்திருக்கிறது
பாரம்பரிய
உணவுகளும் மருந்துகளும்
கார்ப்பரேட் கைகளுக்கு
போனதில்
இந்தியர்கள் எல்லாம்
சோதனை எலிகளானதில்
பாரதத்தின் ஆரோக்கியம்
மருத்துவமனைகளை
நிரப்பிக் கொண்டிருக்கிறது
ஆண்டாளென்றும்
ஆரியனென்றும்
நாள்தோறுமொரு சர்ச்சையில்
சாதியும் மதமும்
இடைச்செருகலில்
அமோகமாய் நீர்ஊற்றி
வளர்க்கப்பட்டு
மக்களின் மனங்கள்
பகைமையால்
வார்த்தெடுக்கப்படுகிறது
நீரோ மன்னன்
வாசித்த ஃபீடிலின் சாயலில்
இந்திய மன்னர்களின்
அவசரக் கோல வரிவிதிப்பில்
அம்பானிகள் அதானிகள்
சாமியார்களின் வருமானம்
ஏற்றம் கண்டு
நாட்டின் தொழில்துறை
வீழ்ந்திருக்கிறது
எது எப்படியிருந்தாலும்
எனக்கென்ன வென்ற
சுரணையற்ற
மந்திரிகளைப்போல
இந்த விடியலில்
அந்த இயற்கையும்கூட
எப்போதும் போல்
விழித்தெழுந்திருக்கிறது
#எனினும்_விடியலழகு!
Image may contain: one or more people, ocean, sky, outdoor and nature

அதே மணம்தான்

பூவின் இதழ்களை
பிய்த்தெரிவது போல
ஓர் மனதை
காயப்படுத்துவது
எளிதாக
இருப்பதன் காரணம்
அந்த மனம்
பூவாய் இருப்பது
மட்டுமே
காய்ந்த சருகாய்
மாறினாலும்
அதே மணம்தான்
அந்த மனதில்!

Image may contain: one or more people, flower, plant and nature

நிகழ்வுகள்

அவசரத்திற்கு, இரண்டு கிலோமீட்டர் குறைவான தூரத்திற்கு ஆட்டோ வை அழைத்தால் 50 ரூபாய் என்றார், அதற்கு பஸ் கட்டண உயர்வை காரணம் காட்டினார், “வெயில், மழை, திரும்பும் போது சவாரிக் கிடைக்காது, ஐடி ஊழியர், ஸ்டிரைக் வரிசையில சம்பந்தமேயில்லாம பஸ் ஃபேர் காரணம் காட்டுறீங்க?!” என்றால், “ஹி ஹி ஆட்டோ டிரைவர்னா அப்படித்தான்மா” என்கிறார் ஆட்டோ டிரைவர்!
என்ன செய்வது, சட்டமன்ற ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாய் ஊதிய உயர்வு அளித்துவிட்டுதான் எடப்பாடி அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது, இதுபோன்ற முன்யோசனையுடன் செயல்படும் மக்களுக்கான அரசை குறை சொல்லவா முடியும்?!”

புள்ளிகள்


ஒரு புள்ளியில்
முற்றுப்பெறும் எதுவும்
அதே புள்ளியில்
தொடங்கவும் செய்யலாம்
வாழ்க்கையின்
புள்ளிகள் யாவும்
அவரவர் நெஞ்சுரத்தைப்
பொறுத்தே
முற்றுப்புள்ளிகளாகவும்
தொடக்கப்புள்ளிகளாகவும்
மாறுகிறது!!!

விதி

சில கற்கள்
தகுந்த கரங்களில்
சிலைகளாக
உருப்பெறுகிறது
சில சுயம்புச்சிலைகள்
தகுதியில்லாத
கரங்களில்
கற்களாக
உடைபடுகிறது!

கீச்சுக்கள்

பழைய வழிப்பறி கொள்ளை என்பதின் நவீன வடிவம்தான் சாலையின் சுங்க வரிக் கட்டணம்!

--------------------
ஓட்டுக்கேட்பவனும்
ஓட்டுப்போடுபவனும்
போதையில் தள்ளாடும்
தேசத்தில்
சமத்துவம் என்பது
நாற்றத்தில் மட்டும்
உள்ளது!


---------------------
எல்லா பாவமூட்டைகளையும்
மரணத்தருவாயில்தான்
இறக்கி வைக்கத்தோன்றுகிறது
மனிதர்களுக்கு!
---------------

தேவைப்படும்போது கிடைக்காத எதுவும், கிடைக்கும்போது தேவைப்படுவதில்லை, அது அன்பென்றாலும் கூட!
-------------

கோபத்தையும், அலட்சியத்தையும் உடனுக்குடன் செவ்வனே செய்கிறோம், அன்பையும் அரவணைப்பையும் தருவதற்கு மட்டும் நேரம் தேடுகிறோம்!
-------------

காணும் காட்சியாவும்
கிடைக்கும் இடைவெளியில்
கவிதையாகிறது!
-----------------

எந்தவொரு அநீதிக்கு வித்திடும் எவனொருவனும் தாம் விதைப்பது பிறரை மட்டுமே பாதிக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறான், அது தன் வருங்கால சந்ததி மீதும் ஆணியடிப்பதை உணராமலேயே!
 

பிச்சைக்கார_தேசம்

நாடு முழுக்க
அதிகார பிச்சைக்காரர்கள்
மலிந்திருக்கிறார்கள்,
இதில்
வயிற்றுக்காக
பிச்சையெடுப்பவனிடம்
உழைக்கச்சொல்லி வகுப்பெடுக்கிறார்கள்
ஓட்டுரிமை விற்கும் பிச்சைக்காரர்கள்!

கீச்சுக்கள்

வாழ்க்கையென்பதே
ஒரு நெடும் பயணம்தான்,
சிலருக்கு இனிமையாய்
சிலருக்கு துறவுநிலையாய்!

பயணங்கள்

பளிச்சென்ற
பசுமை வயல்களும்
மனைகளாக்கப்பட்ட
பொட்டல்வெளிகளும்
மாறி மாறி
கண்களை நிறைக்கும்
இருவேறு காட்சிகளின்
தொகுப்பே
பயணங்கள்!

கீச்சுக்கள்

பரபரப்பான மனதின் ஆழத்தில் உறைந்திருக்கும்
வெறுமையில்
ஏதோ ஓர் அமைதி பற்றற்று திரிகிறது

Pepsico

Bedtime story for my children revolved around various topics and finally landed up with a video of PepsiCo CEO Indhra Nooyi's successful career as a woman, where she says, "I was from Madras, which was water-starved...." and then the entire episode of her becoming a CEO with PepsiCo. My younger one, 8 years old daughter, interrupted and said, "mom, I see despite her education and her own experience of water starved Madras, she has made a big blunder by becoming a CEO of "water sucking Industry" and depriving drinking water for people of her own birth place, and what is the use of she is being modest?" and I'm dumb struck! 

பிள்ளைகள் உறங்க இரவு நேர கதைகள் என்று பல கதைகள் சொல்லி, இறுதியாக பெப்ஸிக்கோ-வின் முதன்மை செயல் அதிகாரி திருமதி. இந்திரா நூயி யின் வெற்றி வரலாற்று காணோளியை வந்தடைந்தோம், அதில் திருமதி. இந்திரா, "நான் மெட்ராஸில் பிறந்து வளர்ந்தேன், அதுவும் தண்ணீர் பஞ்சம் நிறைந்த மெட்ராஸ்..." என்று தொடர்ந்து அவர் பெப்ஸிக்கோ வில் முதன்மை அதிகாரியானது, அவர் கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போக, இடையே குறுக்கிட்ட என் எட்டு வயது இளைய மகள் கேட்டாள், "அம்மா, அவங்க இவ்வளவு படிச்சு, தண்ணீர் பிரச்சினையுள்ள சென்னையில் வளர்ந்தும், பூமியில தேவையில்லாத ஒரு கூல்டிரிங்க்குக்காக, ஜனங்களுக்கு குடிக்கிற தண்ணியில்லாம உறிஞ்சுற ஒரு கம்பெனிக்கு ஏன் தலைவரா ஆனாங்க? இவங்க படிச்சு, அடக்கமா அமைதியா இருந்தாலும் அதனால என்ன யூஸ்?!"
நான் வாய்மூடி மௌனியானேன்!

#Daughter #Pepsico

மாறும்_வானிலை

உன் ஓய்வு நேரத்தில்
நீ காதல் செய்வாய்
ஓய்வேயில்லாத
என் ஓட்டத்தில்
நான் உன்னை
நேசித்துக்கொண்டே
வாழ்வேன்
இருவருக்கும் இருப்பது
காதல்தானென
உலகம் சொல்லும்
அப்படித்தான்
உன் ஓய்வு நேரங்களில்
காதலைக்கொன்று
நீயும் சொல்கிறாய்!


கீச்சுக்கள்

கனத்த சூழ்நிலையில் மூழ்கும் வேளைகளில், தனிமையை துணையாக பற்றிக் கொள்வதில் பிழையேதுமில்லை, அதற்கு உண்மையான மாற்றும், பெரும்பாலும் வாய்ப்பதில்லை!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!