Sunday 17 February 2019

21 ஆம் நூற்றாண்டின் மனித வளர்ச்சி என்பது புற்றுநோயின் வீக்கம்!

21 ஆம் நூற்றாண்டின் மனித வளர்ச்சி என்பது புற்றுநோயின் வீக்கம்!
இந்தக்கட்டுரையை எப்படி ஆரம்பிக்கலாம்? புள்ளிவிவரங்களோடா? எத்தனைக்கோடி புள்ளிவிவரங்கள் கொட்டிகிடக்கிறது, அவையெல்லாம் என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது?

எகிப்திய நாட்டின் இருபது வயது இயக்குநர் சாராவின் குறும்படத்தைக் காண நேர்ந்தது, அதில் 21ஆம் நூற்றாண்டு எத்தகையது என்கிறார்! ஒரு கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவம் சிலபேரை செல்வந்தர்களாக்க, பலகோடி மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கிறது, உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்களிடம் உலகின் முப்பத்தைந்து சதவீத செல்வம் கொட்டிக்கிடக்கிறது, இது எப்படி சமத்துவத்தை நிலைநிறுத்தும்?

இந்தக்கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில், அதிர்ஷ்டம் மட்டுமே ஒருவருக்கு உரிமையை தருகிறது, இன்று உங்கள் உடைமை உங்களிடம் இருக்கிறது என்றால் அது உங்களின் அதிர்ஷ்டம் மட்டுமே, ஒருவரின் அதிர்ஷ்டமும் கூட மற்றவரின் மறுக்கப்பட்ட நீதியில்தான் கிடைக்கிறது! இங்கே பக்கோடா சுடுபவன் அரசாங்கத்திடம் 43000 கடன் வாங்கி வியாபாரம் செய்வது அவனது அதிர்ஷ்டம், நாளை அவன் விஜய் மல்லையாவனால், அது அவனது நல்லநேரமே, அதே நேரம் வாங்குகிற மாதச்சம்பளத்தில் ஒருவனிடம் வரியைப்பிடுங்கிக்கொள்கிற அரசாங்கம், அவனுக்கு குறைந்தப்பட்சம் எந்த கட்டமைப்பு வசதிகளையும் சாலைமுதற்கொண்டு செய்து தருவதில்லை! உங்களின் நீதி என்பதும் மற்றவர் காட்டும் கருணையில்தான் அமைந்திருக்கிறது!

இங்கே நீங்கள் பக்கோடா சுட்டாலும், வரிகள் கட்டுவதற்காகவே உழைத்தாலும், இங்கே வெற்றி என்பதும் “உங்களுக்கு என்ன தெரியும் என்பதைவிட யாரை தெரியும் என்பதில் தான் அடங்கியிருக்கிறது!”
நம்முடைய பள்ளிகளும், கல்லூரிகளும் நாம் பிறருக்கு அடிபணியவே கற்றுத்தருகின்றன, சுயசிந்தனையற்ற ஒரு சமுதாயம், ஒரு மனிதனின் வெற்றியாக பணத்தையும், பதவியையும், திரைவெளிச்சத்தையும், புறத்தோற்றத்தையுமே காண்கிறது, உண்மையான திறமைகளை அல்ல!

ஒரு மைதானத்தில் உதைக்கப்படும் ஒரு பந்து பலகோடி மக்களை உசுப்பேற்றுகிறது, வெறி கொள்ள வைக்கிறது, அதற்குப் பாய்ச்சப்படும் மீடியா வெளிச்சம், கடைகோடியில் இன்னமும் வறுமையில் உழலும் மக்களையோ, பட்டினிச்சாவுகளையோ காட்டுவதில்லை, ஆடம்பரப்பொருட்களில் இருக்கும் மோகம், சகமனிதர்களை நேசிப்பதில் இல்லை, ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் இங்கே பலரால் வாழ்ந்துவிட முடிவதில்லை, காடுகள் அழிக்கப்படுவதைப்பற்றியோ, நம்முடைய சுயநலத்தில் பூமி குடையப்படுவதைப் பற்றியோ, பூமி சூடாவதுப்பற்றியோ, உணவுச்சங்கிலியில் நம் கை ஓங்கியிருக்கிறது என்பதற்காக கண்டபடி உயிர்களை வதைப்பது பற்றியோ நமக்கு கவலையேதும் இல்லை, நாம் வாழும் பூமி, நாம் வகுத்த விதிமுறைகள் நமக்கானது மட்டுமே, அது பூமிக்கோ நம் தலைமுறைக்கோ, பிற உயிர்களுக்கோ தீங்கு விளைவிப்பதைப் பற்றி நமக்கு கவலையேதுமில்லை, இப்படித்தான் நாம் எதை கொண்டாட வேண்டும் என்று மீடியா முடிவு செய்கிறது!

திரைவெளிச்சத்தில் இருக்கும் போலியான மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொள்கிறோம், நிசர்சனத்தில் உழைப்பவர்களை அலட்சியப்படுத்துகிறோம், சுயநலம் என்பதை வெற்றியாகவும், அன்பு என்பதை பலவீனமாகவும் கட்டமைத்திருக்கிறோம்! “பிறக்கும் குழந்தைகள், தன்னுடைய நிறத்தையோ, இடத்தையோ, சாதியையோ, மதத்தையோ தேர்வு செய்ய முடிவதில்லை, இருப்பினும் அதைவைத்தே மனிதர்களின் உரிமைகளை நிர்ணயிக்கிறோம், இது எப்படிச்சரியாகும்?”

அரசியலில் ஒருவன் ஊழல்களை திறம்பட செய்து, சுயலாபத்திற்காக காலில் விழுவதும், பின்பு கழுத்தைப்பிடிப்பதுமாக இருந்தால், “ஆகா எப்படிப்பட்ட புத்திசாலி!” என்று புகழ்கிறோம், இந்தச் சமுதாயத்தில் புத்தியும், வெற்றியும் இப்படித்தான் அடையாளம் காணப்படுகிறது, வெற்றி என்பது இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்படுகிறது, நேர்மறை என்பதும் எதிர்மறை என்பதும் கிடைக்கும் சூழ்நிலையைக்கொண்டு மாறுபடுகிறது அல்லது மாற்றிக்கொள்ளப்படுகிறது, ஓட்டுக்குக் காசுக்கொடுத்தால் வாங்கிக்கொள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய் என்பது நவீன வெற்றியின் தாரக மந்திரமாகவும், புத்திசாலித்தனத்தின் குறியீடாகவும் மாறியிருக்கிறது! இதில் தனித்தன்மை என்பது மாட்டிக்கொள்ளாமல் திருடுதலில் இருக்கிறது, மனசாட்சியில், மனிதத்தன்மையில் இல்லை!

முந்தைய நாளின் விடியலில் நான்கு மணிப்பொழுதில் வாகனங்களற்ற நெடுஞ்சாலையில் அலுவலகத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தப்போது முன்னே வேகமாய் சென்றுக்கொண்டிருந்தக்காரொன்று சற்றுத்தடுமாறி நின்று பின் ஒதுங்கிச்சென்றது, அதன் பின்னே சென்றுக்கொண்டிருந்த என் வாகனத்தை நிறுத்த நாயொன்று நடுரோட்டில் அடிப்பட்டு குற்றுயிரும் குலைவுயிருமாக கிடக்க, வாகனத்தை நடுரோட்டில் நாய்க்கு அரண்
கட்டி நிறுத்தி, இடதுபுறம் வந்த வாகனத்தை உதவிக்கேட்டு நிறுத்தினேன், நான் நிறுத்தி இறங்கவும், இறந்துக்கொண்டிருந்த நாயை எழுப்பிவிடும் முனைப்பில் அதுவரை நடுரோட்டில் போராடிக்கொண்டிருந்த மற்றொரு நாயொன்று ஏதோ ஒரு நம்பிக்கையில் விலகிச்சென்றது, சில இளைஞர்கள் நிறுத்திய வாகனத்திலிருந்து இறங்கி அதன் வாயில் நீருற்ற நாயின் உயிர் அடங்கியது, பின்பு இறந்த நாயின் உடலை சாலையின் மறுப்பக்கம் எடுத்துச்சென்று பாதுகாப்பாய் நகர்த்தியப்பின் வீடு வந்துச்சேர்ந்தேன், ஒரு இறப்பைக்கண்டுவிட்டு வந்தப்பின் உறக்கமில்லை, வேகமாய் மோதியவனுக்கும், வேடிக்கைப் பார்த்தவர்களுக்கும் அது வெறும் நாயின் உயிராய் இருக்கலாம், ஆனால் நாம் வாழும்
பூமியில் மனிதர்களாகிய நாம் நம்முடைய மேதாவினத்தை இப்படித்தான் நிறுவியிருக்கிறோம், பேசத்தெரிந்த சகமனிதர்களை நிறம், நாடு, சாதி, மதம் என்று பேதம் காட்டி உரிமைகளை வரையறுத்தது மட்டுமல்லாமல் சக உயிர்களுக்களான மிருகங்களுக்கும், இயற்கைக்கும் நம்முடைய தேவைகளுக்குட்பட்டே நீதியை வைத்திருக்கிறோம்!

இந்த நவீன மனிதர்களின் கட்டமைக்கப்பட்ட இயந்திர உலகத்தின் வேறுபாடுகளும், போலித்தன்மைகளும் எப்போது முடிவுக்கு வரும்? எந்திர மனிதர்களை தரவுகளை வைத்தும் நம் வெற்று புத்திச்சாலித்தனத்தின் அடித்தளத்தை வைத்தும் உலகை நிர்மாணிக்கும் வேளையில், என்று நம்முடைய உண்மையான புத்திசாலித்தனம் சரியான சமூகநீதியை அனைவருக்கும் அனைத்துக்கும் சாத்தியப்படுத்துவதில்தான் உள்ளது என்பதை உணரப்போகிறோம்?!

அந்த மாற்றம் எப்போது வரும், நாம் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?

Image may contain: one or more people

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!