Sunday 17 February 2019

கொடிய மரணமும் வரமேதான்

முதியோர் இல்லத்தில்
இருட்டானதொரு
அறையின் மூலையில்
யாரையோ எதிர்நோக்கி
புலன்களின் தவிப்பில்
நடுங்கும்
வற்றியக் கைகளை
ஒருநாள் பற்றியிருந்தேன்


மூத்திரத்தின் வீச்சத்தில்
அருகிருந்த வயதுமுதிர்ந்த
பூனையின் உதிர்ந்த ரோமத்தில்
எங்கோ கசிந்த பாடலில்
உணர்வுகள் கலையாமல்
என் முகத்தில்
தன் பொக்கிஷத்தைத்
தேடிய அந்த விழிகளை
ஊமையாய் பார்த்திருந்தேன்


பிள்ளையேதும் பெறாமல்
முதிய கணவன் மாய்ந்தபிறகு
தனித்த அவ்வீட்டில்
பரந்த ஒர் அறையில்
யாரோ ஒருவள்
ஊதியத்திற்கு சோறிட
மங்கிய ஒளியில்
அழுக்கான சுவர்களில்
மூத்திரத்திற்கான குவளைகளில்
தள்ளாமையில் முடங்கிக்கிடக்கும்
மற்றுமொரு மூதாட்டியிடம்
உணர்வுத்ததும்பி அமர்ந்திருந்தேன்

ஆசையாய் பழையப்புகைப்படங்களை
ஆயிரமாயிரம் நினைவுகள் தூண்ட
பகிர்ந்துக் கொண்ட
அந்த முதியக் குழந்தையின் லயிப்பில்
“திரும்ப எப்ப வருவீங்க?”
என்றொலித்த கேள்வியில்
“யாருக்கும் தொந்தரவில்லாமல்
சட்டுன்னு உயிர் போய்டணும்!”
என்ற பிரார்த்தனையில்
மனம் உடைந்திருந்தேன்

முதுமையில்
இருள் கவ்வியிருக்கும் அறையில்
அழுக்கான சுவர்களில்
பஞ்சடைந்துப் பழுதடைந்து
அன்பற்று அடைக்கப்படும்
இரக்கத்தைக்காட்டிலும்
சட்டென்று வாய்த்துவிடும்
கொடிய மரணமும்
இறுதியில் வரமேதானென்று
உணர்ந்திருந்தேன்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!